Tips to Strengthen Knees : ஆர்த்தரிட்டிஸ் நோயால் அச்சமா? மூட்டுகளில் வலியா? கவலை வேண்டாம்! இதோ தீர்க்கும் வழிகள்!
Tips to Strengthen Knees : ஆர்த்தரிட்டிஸ் நோயால் அச்சமா? மூட்டுகளில் வலியா? கவலை வேண்டாம்! இதோ தீர்க்கும் வழிகள்!
ஆர்த்தரிட்டிஸ் நோயால் ஏற்படும் மூட்டு வலியை குணப்படுத்த உடற்பயிற்சிகள் சிறந்தது என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அது மூட்டு வலியை குறைக்கும். உங்களின் அன்றாட பணிகளை அதிகரிக்கச் செய்யும். உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். ஏரோபிக், பலத்தை உயர்த்தும் பயிற்சிகள், நெகிழ்தன்மை கொண்ட உடற்பயிற்சிகள் என அனைத்தும் சிறந்த வழிகள்.
ஹெச்டி லைஃப்ஸ்டைல் பகுதிக்கு பேட்டி கொடுத்த, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பவன் குப்தா, ஆர்த்தரிட்டிஸை குணப்படுத்த மற்றும் மூட்டுகளை பலப்படுத்த சில உடற்பயிற்சிகளை வலியுறுத்தினார்.
நடைப்பயிற்சி - நடைப்பயிற்சி அனைவரும் எளிதாக செய்யக்கூடிய உடற்பயிற்சி. அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் நல்ல ஃபிட்டாக இருக்கவும் உதவுகிறது. மூட்டுகளில் உள்ள வலியை போக்க உதவுகிறது. எனவே மூட்டுவலி பிரச்னைகள் உள்ளவர்கள் தினமும் ஒரு மணி நேரம் வெளியில் நடப்பதை கட்டாயமாக்குங்கள். மழைக்காலங்களில் வீட்டிற்குள் நடக்கலாம். மற்ற நாட்களில் இயற்கை காற்றை சுவாசித்துக்கொண்டே நடப்பது உடலுக்கு புத்துணர்ச்சியையும், மூட்டுக்கு வலுவையும் கொடுக்கிறது.
சைக்கிள் ஓட்டுவது - சைக்கிள் ஓட்டுவதும் எளிதான உடற்பயிற்சி. அதுவும் உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். மூட்டுப்பகுதியை சுற்றியுள்ள தசையை வலுப்படுத்த உதவுகிறது. அன்றாடம் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டினால் கால் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து இடுப்புக்கு கீழே உள்ள உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
நீச்சல் - நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சி. குறிப்பாக ஆர்த்தரிட்டிஸ் பிரச்னைகள், மூட்டு வலித் தொல்லைகள் இருப்பவர்களுக்கு நீச்சல் ஒரு சிறந்த பயிற்சி. இது மூட்டுக்களுக்கு அழுத்தம் கொடுக்காத பயிற்சி. மேலும் தண்ணீரில் இருக்கும்போது உடலில் எந்தப்பகுதியில் வலி ஏற்பட்டாலும் அதற்கு இதமளிக்கும். எனவே நீச்சல் பயிற்சி செய்வதை வழக்கமாக்கி மூட்டு வலியில் இருந்து தப்பியுங்கள்.
யோகா - யோகா உடல் மொத்தத்தையும் வளைக்கக்கூடிய, நெகிழ் தன்மை அதிகம் கொண்ட ஒரு பயிற்சி. யோகா ஓரிடத்தில் அமர்ந்து செய்யும் பயிற்சி என்பதால் இதை செய்யும்போது விழுந்து, காயம் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. பொதுவான உடல் நலக்கோளாறு அல்லது எந்த பிரச்னையும் இல்லாதவர்கள் யோகா செய்யலாம். குறிப்பிட்ட குறைபாடு உள்ளவர்கள் யோகா மருத்துவரின் பரிந்துரையின்பேரில் செய்யலாம்.
உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் உடல் ஒத்து இயங்குவதற்கும், செயல்படுவதற்கும் உதவும். பற்களை துலக்கும்போது ஒரு காலில் நின்றுகொண்டும் மாற்றி மாற்றி ஒற்றைக்காலில் நின்றுகொண்டு பல் துலக்கலாம். இது உடல் ஒத்து இயங்க உதவும். கால்விரல்களால் நின்று பயிற்சி செய்யலாம்.
எந்த பயிற்சியை செய்தாலும் முதலில் அதை மெதுவாக மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக துவக்க வேண்டும். பின்னர் மெல்ல மெல்ல அதை அதிகரிக்க வேண்டும். வேகமாகவும் செய்ய முயற்சிக்க வேண்டும். வலி ஏற்பட்டால் உடனே பயிற்சியை நிறுத்திவிடவேண்டும். புதிய உடற்பயிற்சிகளை செய்யும் முன் மருத்துவரின் பரிந்துரையை பெறுவது நல்லது.
டாபிக்ஸ்