Thirukkai Fish Curry: ‘திக்கு முக்காட வைக்கும் சுவை’ திருக்கை மீன் ஸ்பெஷல் குழம்பு செய்முறை!
குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு உகந்த உணவாக திருக்கை மீன் குழம்பு பார்க்கப்படுகிறது.
மீன் குழம்பு என்றாலே அலாதி சுவை. அதிலும் திருக்கை மீன் என்றால், இன்னும் சுவையோ, சுவை. வழக்கமான மீன் குழம்பிற்கும், திருக்கை மீன் குழம்பிற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். சுவையான திருக்கை மீன் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்
தேவையான பொருட்கள்:
- ஒரு கிலோ திருக்கை மீன்
- மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
- வெந்தயம் சிறிது அளவு
- பெரிய வெங்காயம் 2
- கருவேப்பிலை
- பூண்டு 30 பல்
- தக்காளி 2
- பச்சை மிளகாய்
- தனி மிளகாய் தூள் -தேவைக்கு ஏற்ப
- புளி கரைசல்- தேவைக்கு ஏற்ப
- மிளகு
செய்முறை விளக்கம்:
வெட்டிய திருக்கை மீன் ஒரு கிலோவை எடுத்து, மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்யவும். சூடான பாத்திரத்தில் தேதவைக்கு ஏற்ற எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். நல்லெண்ணெய் இன்னும் ருசியாக இருக்கும். எண்ணெய் சூடானதும் அதில் சிறிது அளவு வெந்தயம் சேர்க்க வேண்டும். வெந்தயம் பொரிந்து வந்ததும் வெட்டி வைத்த பெரிய வெங்காயம் இரண்டையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக வதக்க வேண்டும். பின்னர் பூண்டு பல் 30யை எடுத்து, அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். திருக்கை மீன் குழம்பிற்கு பூண்டு அதிகம் சேர்ப்பது, சுவையை அதிகரிக்கும்.
பூண்டு, வெங்காயம் நன்கு வதங்கியதும், கையால் பிசைந்த இரு தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை மிளகாய் போட்டு கிண்டவும். அரை டீ ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் தனி மிளகாய் தூள் போட்டு நன்கு கிளற வேண்டும்.
இத்தோடு கரைத்து வைத்த புளி கரைசலை அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு, தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும். கொதித்து வந்ததும், இடித்த பூண்டு, மிளகை அதில் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்து வைத்த திருக்கை மீனை, குழம்பில் போடவும். ஒரு முறை நன்கு கலந்து விட்ட பின், மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
அதன் பின்னர் மீன் வெந்ததை உறுதி செய்த பின், உப்பு காரத்தை சரிபார்த்து, பின்னர் இறக்கிவிட்டால் சுடச்சுட கமகம திருக்கை மீன் குழம்பு ரெடி. குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு உகந்த உணவாக திருக்கை மீன் குழம்பு பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்