Relationship : கணவன்-மனைவி உறவில் ஏன் இறுகப்பற்று அறிவுரை? ஓர் அலசல்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : கணவன்-மனைவி உறவில் ஏன் இறுகப்பற்று அறிவுரை? ஓர் அலசல்

Relationship : கணவன்-மனைவி உறவில் ஏன் இறுகப்பற்று அறிவுரை? ஓர் அலசல்

Priyadarshini R HT Tamil
Nov 20, 2023 01:30 PM IST

Relationship : கணவன்-மனைவி உறவில் ஏன் இறுகப்பற்றவேண்டும்?

Relationship : கணவன்-மனைவி உறவில் ஏன் இறுகப்பற்று அறிவுரை? ஓர் அலசல்
Relationship : கணவன்-மனைவி உறவில் ஏன் இறுகப்பற்று அறிவுரை? ஓர் அலசல்

ஏன் இறுகப்பற்று என பெண்களிடம் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்?

ஏன் பிரச்சனை என வரும் கணவனிடம் ஆறுமாதம் பேசாமல் இரு அவளாக வருவாள் என்பவர்கள் மனைவியிடம் ஏன் உறவு என்பது கண்ணாடிப்பாத்திரம் அல்ல உடைந்தால் ஒட்ட முடியாமல் போக, அது ரப்பர்பேண்ட் அதை எப்படிவேண்டுமானாலும் வளைக்கலாம் என பாடம் எடுக்க வேண்டும்?

ஏன் என் போனைப்பாரு என்னிடம் பொசசிவாக இரு என அன்புக்கும் அந்தரங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் உளறுபவனிடம் மனைவி அப்படியானவளாக இருக்க வேண்டும்?

ஏன் உனக்கு அவன் வேண்டுமென என கண்ணை மூடி யோசி வேண்டுமெனில் டைவோர்சில் கையெழுத்துப்போடு அவனாக ஆர்வம் குறைந்து விவாகரத்து எண்ணத்தை கைவிடுவான் அதற்குள் எடையைக்குறை என ஒரு பெண்ணை நோக்கி கூற வேண்டும்? ஆண் அர்த்தமில்லாமல் உளறும் இடங்களில் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் இந்த படம் ஒட்டுமொத்தமாக சமூகத்தில் ஆண்தன்மை என்பவற்றின் பொதுமயப்பார்வையில் வளர்க்கப்பட ஒரு ஆணின் பார்வையாகவோ அல்லது அப்படியாக வளர்க்கப்பட்ட ஒட்டுமொத்த குழுவானர்களின் விவாதிக்கப்பட்ட வடிவமாகவோ அல்லது இப்படித்தான் ஆண் என நம்பும் பெண்களுமே கூட உடனிருந்த ஒரு கலைப்படைப்பாவோ அந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.

யார் அதிகமாக அவதியுருகிறார்களோ, யார் அதிகம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்களோ யார் அதிகம் துன்புறுகிறார்களோ அவர்கள்தான் முதலில் தப்பிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஒருவரை சுரண்டுவதனால் பலன் அனுபவிப்பவர்கள் திடீரென அதன் பலன் நிறுத்தப்படும்போது பயந்து போவதும் இயல்புதான்.

இவையிரண்டும் தான் இறுகப்பற்றிக்கொள்ளுங்கள் போலியாகவேணும் ஒரு வாழ்வு வாழுங்கள் என இளைய தலைமுறைக்கு பாடமெடுக்கிறது.

பெண்கள் அலுவலக வேலைகளுக்கு வளரும் வேகத்திற்கு ஆண்களும் வீட்டுவேலைகளுக்கு பழகுவது, அவளை சகதோழியாக நடத்துவது அவளது சுயசார்புத்தனத்தினை தன்னைப்போன்றதுதான் என ஏற்றுக்கொள்வது போன்ற விஷயங்களில் சுணக்கம் இருக்கிறது. ஆண்களுக்கு நிதர்சனத்தில் என்ன நிகழ்கிறது என்றே புரிவதில்லை. பெண்களுக்கு அதிக இடம் கிடைக்கிறது என்றே இன்னமும் அவர்களது தாத்தா காலத்து சிந்தனைகளை ஒத்து நம்பி வருகிறார்கள்.

விட்டால் ஓடிவிடுவாள் என்பது நன்கறியப்பட்டே சடங்குகள் சாஸ்திரங்கள் கலாச்சார உபதேசங்கள் குடும்ப அமைப்பு என அத்தனையும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அவற்றில் நியாயமில்ல. சம உரிமை இல்லை. குறைந்தபட்ச பலன்கூட பல பெண்களுக்கு இல்லை. இதனால் யார் தயவும் இல்லாமலே இயற்கைநியதிப்படியே இந்த அமைப்பு கட்டாயம் உடையத்தான் செய்யும்.

அதை இத்தனை நாள் உணரவில்லை சமூகம். இப்போது உணரத்துவங்கியுள்ளது.

பெண்கள் துணிந்து விவாகரத்திற்கு முன்வருகிறார்கள்.

அவர்களிடம் போய் பூச்சி காட்டிக்கொண்டிருக்கிறது.

குழந்தைகள் எதிர்காலம் கெடும். -முதல் பயமுறுத்தல்

உண்மையில் சிதைந்த குடும்பத்து குழந்தைகூட ஓரளவு அதை தாக்குபிடித்து வளர்ந்துவிடுகிறது. ஊமைக்குத்து வாங்கி ஒன்றாக வாழும் குடும்பத்து பிள்ளைகள் மீண்டும் பொறுப்பற்ற எதிராளி வலி தெரியாத பிள்ளைகளாகவோ அல்லது பெற்றோர் சண்டையில் பாதிக்கப்பட்ட உதவியற்ற பிள்ளகளாகவோதான் வளர்கின்றன. பிள்ளைகளால் பெற்றோரின் பிரிவை இன்று ஏற்றுக்கொள்ள இயலுகிறது.

சமூகம் ஆபத்தானது.- இரண்டாவது அச்சுறுத்தல்

கட்டாயம் மனிதர்கள் நிரம்பிய இடம் ஆபத்தானது. அதே அளவு ஆதுரமானதும். குடும்பம் செலுத்தும் வார்த்தை வன்முறையை விட சுயமரியாதையை சிதைக்கும் வன்முறையை விட சமூகம் மேல். பாலியல் வன்முறைக்கு மட்டுமே அதற்கு திராணியிருக்கிறது.

கடைசி காலத்தில் தனிமையில் இருப்பாய்- மூன்றாவது வாதம்.

வாழும் நாட்களே நரகமாக உள்ளவர்களுக்கு போற காலத்தை பத்தியா கவலை இருக்கும்?

ஒருவர் சேர்ந்து வாழ இங்கு காரணமே கேட்கப்படுவதில்லை. ஜாதகம் பொருந்துதா வேலை பணம் சரியா இருக்கா சரி பண்ணு.

பிரிய நூறு காரணங்களை சட்டமே கேட்கிறது.

ஆண்மை இல்லை, தாம்பத்திய உறவில்லை, திருமணம்தாண்டிய உறவு உண்டு, மனநிலை சரியில்லை, அடிக்கிறான் சூடு வைக்கிறான் என சட்டத்தின் முன் நிற்கவேண்டு்ம் பிடிக்கவில்லை மனமொப்ப வில்லை என்னும் காரணங்களுக்கு என்றுமே சமூகத்தில் சட்டத்தில் உடன்பாடில்லை.

ஏன் என்றால் பிடிக்கவில்லை என்னும் பதில் பெண்ணால் சுதந்திரம் தந்தால் எளிமையாக சொல்லி விட முடியும். குடும்பம் என்னும் சுரண்டல் அமைப்பை காப்பாற்றிட முடியாது. அதனால் பெண்ணிற்கு சகல பாடங்களும் எடுப்போம். சகல அச்சுறுத்தல்களையும் செய்வோம். மீறி பிரிந்தால் சகல அவமரியாதைகளையும் செய்வோம் கண்ணியமாக நடத்த மாட்டோம்.

மனைவி பிரிய நினைக்கிறாள் என்னும் அர்ஜூனிடம் ஆறுமாசம் பேசாத வருவா கழுதை என்று கூறிவிட்டு பிரிய நினைக்கிறார் கணவர் என்னும் பெண்ணிடம் அவனிஷ்டப்படி டைவோர்ஸ்பேப்பரில் கையெழுத்திடு உடல் எடையைக்குறை என பாடமெடுக்கும். உடல் எடையை பேசுமளவு அவன் பலவீனமானவன் உனக்கு அவன் தேவையில்லை என்ற தெளிவைத்தராது.

ஏனென்றால் பெண்ணைத்தான் கட்டுப்படுத்த வேண்டும்.

அவளிடம் போய்தான் இறுகப்பற்று இல்லையேல் உனக்கு ஆபத்து என பயமுறுத்த வேண்டும்.

நிதர்சனத்தில் ஆண்கள் இறுகப்பற்றுகிறார்கள். பெண்கள் ஓட வழிதேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதன் ரிவர்ஸ் காம்போ சிறிய அளவில்தான்.

மற்றபடி என்ன இறுகப்பற்றினாலும் இந்த அமைப்பு தூள்தூளாவதை ஒருவராலும் கட்டுப்படுத்திட முடியாது.

அதுவரை வேண்டுமானால் இறுகப்பற்றிக்கொள்ளுங்கள்!

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.