Selavu Rasam Recipe: சளி பிரச்சனையா? அப்போ கொங்கு ஸ்பெஷல் செலவு ரசம் செஞ்சு குடிங்க!
Selavu Rasam Recipe: கொங்கு மாவட்டங்களில் செய்யப்படும் உணவு வகைகளுக்கு இன்றளவும் மிகுந்த சுவை இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் கொங்கு சமையல் உணவுகள் பல உலகளவிலும் பிரபலமானவையாக இருந்து வருகின்றன.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊருக்கும் பெருமை என பல விஷயங்கள் இருந்தாலும், அந்த ஊரின் சமையல் ருசி, தனித்தன்மை இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க ஒரு ரெசிபி தான் கொங்கு சமையல் ரெசிபி, இங்கு மிகவும் சுவையான, மணம் மிக்க சமையல் செய்யப்படுகின்றன. கொங்கு மாவட்டங்களில் செய்யப்படும் உணவு வகைகளுக்கு இன்றளவும் மிகுந்த சுவை இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் கொங்கு சமையல் உணவுகள் பல உலகளவிலும் பிரபலமானவையாக இருந்து வருகின்றன.
ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கொங்கு நாடாக கருதப்படுகிறது. இந்த பகுதிகளில் செய்யப்படும் செலவு ரசம் எனும் ரசம் தொண்டை வலி, சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது. இந்த செலவு ரசம் செய்யும் முறையை பார்க்கலாம்
செலவு ரசம்
செலவு ரசம் என்பது கொங்குநாடு பகுதியில் உள்ள தனித்துவமான ரசம் வகைகளில் ஒன்றாகும். நறுமணப் பொருட்கள் தமிழில் செலவு என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் முன் காலத்தில் சமையலுக்கு தேவையான அனைத்து காய்கறிகளும் வீட்டு தோட்டத்தில் இருந்து வந்து விடும். மசாலா பொருட்களை மட்டும் கடைகளில் சென்று வாங்க வேண்டியதாயிருக்கும். எனவே இந்த மளிகை பொருட்களை செலவு பொருட்கள் எனக் குறிப்பிட்டனர். இந்த பொருட்களை பயன் படுத்தி வைக்கப்படுவதால் இந்த ரசம் செலவு ரசம் எனப் பெயரிடப்பட்டது.
தேவையான பொருட்கள்
மூன்று குண்டு மிளகாய்
6 சிறிய வெங்காயம்
10 பல் பூண்டு
2 தக்காளி
சிறிதளவு சீரகம்
சிறிதளவு மிளகு
சிறிதளவு மல்லி
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு கொத்த மல்லி தழை
சிறிதளவு கடுகு
செய்முறை
இந்த செலவு ரசம் செய்வதற்கு மண்ணால் செய்த பாத்திரத்தை பயன் படுத்தினால் சுவை அதிகரிக்கும். முதலில் ஒரு மண் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடான பின் மல்லி, சீரகம், மிளகு, வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும். வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே மண் சட்டியில் மீண்டும் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, கடுகு போட்டு பொரிய விட வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பை போட்டு நன்கு வதக்கி விடவும். தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருந்த மசாலா கலவையை போடவும். இதில் முக்கால் லிட்டர் தன்னர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியாக கொத்த மல்லியை போட்டு மிதமான தீயில் காய விட வேண்டும். மிதமான தீயில் நன்கு கொதித்த உடன் இறக்கி விடவும்.
இந்த ரசத்தை சளியால் அவதியுறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொடுக்கலாம். மேலும் இதனை சூப் போல அப்படியே குடிக்கலாம். மிகுந்த சுவையுடன் அனைவரும் விரும்பும் வண்ணம் இந்த ரசம் இருக்கும். சூடான சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்.
டாபிக்ஸ்