உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஊட்டம்தரும் தினை பருத்திபால் செய்முறை
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஊட்டம்தரும் தினை பருத்தி பால் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
உடற்பயிற்சியின் பலன்கள் குறித்த விழிப்புணர்வு இப்போது மக்களிடையை பரவத் தொடங்கியுள்ளது. இருந்தாலும் பெரும்பாலும் ஒருவரது ஆயுளின் முதல் பாதியானது உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே கழிகிறது.
மீதி பாதியிலோ, கெட்டுப்போன உடல் நலத்தைச் சீராக்குவதற்காக சம்பாதித்த பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அந்த நிலைமை வராமல் இருக்க வேண்டுமா? வழி இருக்கிறது!
உடலை உறுதியாக்கும் சிறுதானிய உணவுகள் உங்களுக்கு உதவும்! ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள்.
தினையில் உள்ள மாவுச்சத்து, குழந்தைகள் மற்றும் அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.
தினையில் புரதச்சத்து அதிகம் உள்ளதால், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவு.
திணை பருத்திப் பால் செய்யத் தேவையானவை:
தினை அரிசி மாவு - 50 கிராம்
பருத்தி விதை - 200 கிராம்
கருப்பட்டி - 150 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்தூள் - சிறிது
சுக்குத் தூள் சிறிது
திணை பருத்திப்பால் செய்முறை:
சுத்தமான பருத்தி விதையை 10 - 12 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அலசவும். பிறகு அதனைப் பால் பிழிந்து கொள்ளவும் இரண்டு, மூன்று முறை பால் எடுக்கவும்.
கருப்பட்டியை நீரில் கரைத்து வடிக்கட்டி கொதிக்க விடவும் இதனுடன் பருத்திப் பாலை சேர்க்கவும். கொதித்து வந்ததும், தினை அரிசிமாவை கரைத்து அதில் ஊற்றவும்
நிதானமாக சூட்டில் கைவிடாமல் 3 நிமிடம் கிளறவும். தூள் வகைகளைத் தூவி இறக்கவும்.
காலையில், மாலையில் உடற்பயிற்சி செய்வதற்கு அரை மணிநேரம் முன்பாக இந்த திணை பருத்திப்பாலை அருந்திவர ஊட்டச்சத்து உடலில் சேரும். சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த திணை பருத்திபாலை சாப்பிடலாம்.