தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Murungai Keerai Saadam And Vaalaikai Milagu Varuval

Herb Diet: அமினோ கொழுப்பு அமிலம் நிறைந்த முருங்கைக்கீரை சாதமும் வாழைக்காய் மிளகு வறுவலும் செய்முறை

I Jayachandran HT Tamil
Jun 18, 2023 03:43 PM IST

அமினோ அமில கொழுப்பு நிறைந்த முருங்கைக்கீரை சாதமும் வாழைக்காய் மிளகு வறுவலும் செய்முறை பற்றி இங்கு காணலாம்.

அமினோ கொழுப்பு அமிலம் நிறைந்த முருங்கைக்கீரை சாதமும் வாழைக்காய் மிளகு வறுவலும்
அமினோ கொழுப்பு அமிலம் நிறைந்த முருங்கைக்கீரை சாதமும் வாழைக்காய் மிளகு வறுவலும்

ட்ரெண்டிங் செய்திகள்

மற்ற காய்கறி, மூலிகைகளை விட முருங்கைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. உடலுக்குத் தேவையான அத்தனை சத்துகளும் இதில் உண்டு. குறிப்பாக ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான அமினோ கொழுப்பு அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது.

அதேபோல் வாழைக்காய் சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது. வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்றவை நீங்கும்.

பொதுவாக வாழைக்காய் என்றவுடன் வாய்வு என்று பலரும் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் வாழைக்காயுடன் மிளகை சேர்த்தால் வாயுத்தொல்லை போயேபோய்விடும்.

எனவே முருங்கைக் கீரையையும் வாழைக்காயையும் வைத்து இன்றைய சமையல் ரெசிப்பியை முடிக்கலாம்.

முருங்கைக் கீரை சாதம் செய்யத் தேவையானவை:

முருங்கைக்கீரை சிறு கட்டு -1

அரிசி ஒரு டம்ளர்

தக்காளி- 1

வெங்காயம் -2

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

தனியாத்தூள் - ஒரு ஸ்பூன்

மிளகாய் தூள் - அரை ஸ்பூன்

எலுமிச்சை சாறு - ஒரு பாதி பழம்

நல்லெண்ணெய்- தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு

தாளிக்க

நெய் -2 ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு -1/2 ஸ்பூன்

கடுகு- ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

முருங்கைக் கீரை சாதம் செய்முறை:

கீரையை ஆய்ந்து காம்புகள், சிறு குச்சிகளை நீக்கி நன்கு தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தாளித்து கடுகு நன்கு வெடித்ததும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியையும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறி கண்ணாடி போல் வந்ததும் நறுக்கி வைத்துள்ள முருங்கை இலை கீரையை சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கை தண்ணீர் தெளித்து கிளறி விடவும்.

கீரை வேகும் பாத்திரத்தில் மூடி போடாமல் வதக்கி சமைத்தால் கீரை நிறம் மாறாமல் பச்சை பசேல் என்று இருக்கும்.

கீரை நன்கு வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி வடித்த சாதம் சேர்த்து கிளறவும். இப்பொழுது தனியா தூள் ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் அரை ஸ்பூன், எலுமிச்சம் பழம் ஒரு மூடி பிழிந்து நன்கு கலந்து பரிமாற சுவையான, மிகவும் சத்தான கீரை சாதம் தயார்.

இதற்கு பொருத்தமான வாழைக்காய் மிளகு வறுவல் செய்வது பற்றி இனி பார்க்கலாம்.

சுவையான வாழைக்காய் மிளகு வறுவல் செய்யத் தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 1

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

கடுகு – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு:

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – அரை அங்குலம்

பூண்டு – 5

மிளகு – 3 டீஸ்பூன்

வாழைக்காய் மிளகு வறுவல் செய்முறை:

வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

வேக வைத்த வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து விழுதுபோல் அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!

இனி முருங்கைக்கீரை சாதத்தையும் வாழைக்காய் வறுவலையும் சுடச்சுட பரிமாறினால் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் அந்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுவார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்