Ragi Kuzhi Paniyaram: அனைவரும் விரும்பி சாப்பிடும் கேழ்வரகு கார குழிப்பணியாரம் - எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேழ்வரகு கார குழிப்பணியாரம் செய்வது எப்படி என்பது பற்றிய செய்முறை விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.
இயற்கையான உணவு பொருட்களே நமது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று வயதானவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். அதிலும் நமக்கு உற்ற துணையாக இருப்பவை சிறுதானியங்கள்.
நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் அதிகளவில் உள்ளன. எனவே நம் குழந்தைகளுக்கு சிறுதானியங்களால் ஆன சுவையாக உணவுகளை சமைத்துக் கொடுப்போம். அதற்கான சிறந்த ரெசிபிதான் இந்த கேழ்வரகு கார குழிப்பணியாரம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேழ்வரகு கார குழிப்பணியாரம் செய்வது பற்றி இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 4 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
கடுகு - கால் டீ ஸ்பூன்
உளுந்து - அரை டீ ஸ்பூன்
சீரகம் - கால் டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கேழ்வரகு மாவு மற்றும் அரிசி மாவு இரண்டையும் நன்றாக கலக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் கடுகு, உளுந்து, சீரகம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும். அதன் பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
அடுப்பை அணைக்கவும். இதமான சூட்டோடு கேழ்வரகு மாவு மற்றும் அரிசி மாவு இரண்டையும் சேர்த்து அந்த கலவையோடு வதக்கவும். இந்த கலவை ஆறிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிறகு அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து சூடுபடுத்தவும். அதில் இருக்கும் ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றவும். மாவு வெந்ததும் பணியாரக் கம்பி கொண்டு குழிப்பணியாரத்தை மறுபக்கம் திருப்பி வேக வைக்கவும். அவ்வப்போது தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
இரண்டு பக்கமும் மொறு மொறுவென சிவந்து வந்தவுடன் பணியாரத்தை கல்லில் இருந்து எடுக்கவும். இப்போது ரெடியாகிவிட்டது சுவையான கேழ்வரகு கார குழிப்பணியாரம். கேழ்வரகு பணியாரத்துக்கு ஏற்ற தேங்காய் சட்னி ரெடி செய்து வைத்துக்கொண்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
பொதுவாக ஆண்டு முழுவதும் கேழ்வரகு உணவுகளை கூழாகக் குடிக்காமல், இட்லி, தோசை, புட்டு, களி, கஞ்சி, பணியாரம், ரொட்டி, பக்கோடா, இனிப்பு உருண்டை என உணவுகளில் என்னென்ன வகைகள் உள்ளனவோ, அத்தனையிலும் ராகியைப் பயன்படுத்தி சாப்பிட்டு வரலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்