Deepavali Special Sweet : பாதாம் பர்ஃபி அல்லது கத்லி – தித்திக்கும் தீபாவளிக்கு உங்கள் வீட்டில் கட்டாயம் செய்யுங்கள்!
Badam Burfi Deepavali Special Sweet : பாதாம் பர்ஃபி பாதாமை அரைத்து, பொடி செய்து, சர்க்கரை பாகுவைத்து செய்யப்படும் ஒரு தனிச்சுவை கொண்ட இனிப்பு. மாவு பதத்தில் திரண்டு வரும் அதை, டைமண்ட் வடிவில் கட் செய்ய வேண்டும். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பாதாம் பர்ஃபி செய்யப்படுகிறது.
தேவையான பொருட்கள்
பாதாம் – அரை கப்
நெய் – தேவையான அளவு
சர்க்கரை – கால் கப்
ஏலக்காய்ப்பொடி – 2 சிட்டிகை
செய்முறை
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, பாதாமை அதில் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, சூடான தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது பாதாமின் தோலை உரித்தால், அதை எளிதாக உரித்துவிடலாம்.
உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அது நன்றாக உலர்ந்தவுடன், பாதாமை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரப்பாக பொடி செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பாதாமை அதிகம் அரைக்கக்கூடாது. அதிகம் அரைத்தால் அதில் இருந்து எண்ணெய் வரத்துவங்கிவிடும். பின்னர் பொடியாக இல்லாமல் ஒட்டிக்கொள்ளும் பதத்தில் பாதாம் இருக்கும். அதனால் பாதாமை பொடியாகவும், கொரகொரப்பாகவும் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த பொடியை தனியாக வைத்துவிடவேண்டும்.
அடிக்கனமான பாத்திரத்தில் சர்க்கரை எடுத்து, தண்ணீர் சேர்த்து நன்றாக அது கரையும் வரை கலக்க வேண்டும். தீ மிதமாக இருக்க வேண்டும். அது கொதிக்க துவங்கும். அப்போது அரைத்து வைத்துள்ள பாதாம் பொடியை சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
இப்போது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவேண்டும். ஓரங்களையெல்லாம் சுரண்டிவிட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
கொஞ்சம் திரண்டு, மாவுபதத்திற்கு வரத்துவங்கும், இந்த மாவு சிறிது வறண்டு இருக்க வேண்டும். ஆனால் மிருதுவாகவும், நெகிழ்வானதாகவும் இருக்கவேண்டும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, அதை நீங்கள் கையில் எடுத்து உருட்டி பார்க்க வேண்டும். உருண்டு வந்தால் இறக்குவதற்கு இது சரியான பதம். பாதாமை சேர்த்து ஒரு 10 நிமிடங்களில் இந்தப்பதம் கிடைக்கும். எனவே கவனமாக இருக்கவேண்டும்.
அடுப்பில் இருந்த இறக்கி 5 நிமிடம் ஆறவிடவேண்டும். இளஞ்சூட்டில் அப்படியே மிருதுவாக பிசையவேண்டும். மாவு வறண்டு காணப்பட்டால் சிறிது நெய் சேர்த்து பிசைய வேண்டும். அது பிசைய ஏதுவாக வந்தால், நீங்கள் நெய் சேர்க்க வேண்டாம். ஒரு பெரிய தட்டில் வைத்துவிடவேண்டும்.
பின்னர் அதன் மேல் பட்டர் பேப்பர் வைத்து, நெய் தடவி சப்பாத்தி கட்டையால் தேய்க்க வேண்டும். கால் இஞ்ச் மொத்தமாக இருக்குமாறு தேய்த்துக்கொண்டு, அதை டைமண்ட் துண்டுகளாக வெட்டவேண்டும்.
சிறிது நேரம் கழித்து தனித்தனியாக அனைத்து துண்டுகளையும் எடுத்துவிடவேண்டும். சரியாக வெட்டப்படாத துண்டுகளை சேர்த்து மீண்டும் உருட்டி, தட்டில் வைத்து சப்பாத்தி கட்டையால் தேய்த்து, மீண்டும் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்றாக ஆறியவுடன், காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக்கொண்டு தீபாவளியன்று முதல் தீரும் வரை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.
குறிப்புகள்
இனிப்பு அதிகம் தேவை என்றால் கூடுதலாக சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
பாதாமை ஃபிரிட்ஜில் வைத்திருந்தீர்கள் என்றால், எடுத்து வெளியில் ஆறவைத்து பின்ன்ர் பர்ஃபி செய்ய பயன்படுத்துங்கள்.
பொடியாக வேண்டும் என்பதால் ஈரமில்லாத மிக்ஸியை பயன்படுத்துங்கள். ஈர மிக்ஸியாக இருந்தால் பொடி பதமும் வராது.
பட்டர் பேப்பர் வைத்து கட் செய்யும்போது பர்ஃபி சமமாகவும், அழகாகவும் இருக்கும். மிக்ஸியில் அரைக்கும்போது பல்ஸ் கொடுத்தும், சிறிது நேர இடைவெளி கொடுத்தும் அரைக்க வேண்டும்.
பிசைந்து கட் செய்யும்போதுதான் பாதாம் கத்லி மிருதுவாக இருக்கும். சரியாக செய்தால் பாதாம் மாவு நன்றாக இருக்கும். அடுப்பு எப்போது மிதமான தீயிலே இருக்கட்டும்.
டாபிக்ஸ்