Cancer in Women : பெண்களிடையே அதிகரித்து வரும் கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்! அதிர்ச்சி ஆய்வு தகவல்
Cancer in Women : பெண்களிடையே அதிகரித்து வரும் கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்! அதிர்ச்சி ஆய்வு தகவல்
தமிழகத்தில் ஆண்டுக்கு புற்றுநோய் பாதிப்பு 2012ல் 62,000 பேருக்கு இருந்தது தற்போது 88,000 பேருக்கு பாதிப்பு என அதிகரித்துள்ளது.
பெண்கள் மத்தியில் மார்பக (Breast) புற்றுநோய், கர்ப்பப்பை வாய் (Cervical Cancer) புற்றுநோய் பாதிப்பே தமிழகத்தில் மிக அதிகமாக உள்ளது.
பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு தமிழகத்தில் அதிகம். லட்சம் பெண்களில் 110 பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஆண்களுக்கு லட்சம் ஆண்களில் 90 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு என சற்றுக் குறைவாக உள்ளது. (இறப்பில் ஆண்கள் அதிகம் புற்றுநோயால் இறக்கிறார்கள்)
தமிழகத்தில் தஞ்சாவூரில் வாய் புற்றுநோய் பாதிப்பு லட்சம் பேருக்கு 9.2 பேர் என இந்தியாவிலேயே மிக அதிகமாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் செய்யப்பட்ட ஆய்வில் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் பாதிப்பு லட்சம் பேரில் 46 பேர் என இந்தியாவிலேயே மிக அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு 5 மாவட்டங்களில் அதிகம் இருப்பதால், முதல் கட்டமாக, புற்றுநோய் அதிகமிருக்கும் 4 மாவட்டங்களில் (கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை) 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் தடுப்புத் திட்டத்தில் 59,571 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தடுப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், (அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது) 1,185 பேருக்கு மார்பக புற்றுநோய் வாய்ப்பு இருப்பதும், 44,204 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு ஆய்வில், 2,129 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வாய்ப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேற்சொன்ன மாவட்டங்களில் 2 வாரத்தில், 50,608 பேருக்கு மார்பக புற்றுநோய் தடுப்பு ஆய்வில் 1004 பேருக்கு புற்றுநோய் வாய்ப்பு இருப்பதும், 36,004 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு ஆய்வில் 1,840 பேருக்கு புற்றுநோய் வாய்ப்பு இருப்பது தெரியவந்தாலும், புற்றுநோயை உறுதிபடுத்தும் ஆய்வுகளில் 12 பேருக்கு மட்டுமே புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களுக்கு புற்றுநோய் எந்த நிலையில் (Stage) கண்டறியப்பட்டுள்ளது என்ற விவரமும் இல்லை. ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறிப்பட்டால் தான் அதை எளிதில் குணப்படுத்த முடியும். நகர்புறத்திலா அல்லது கிராமப்புறத்திலா? எதில் அதிகம் என்ற புள்ளிவிவரமும் இல்லை.
தமிழகத்தில், பெரம்பலூரில் தான் கர்ப்பப்பை புற்றுநோய் இந்தியாவிலேயே மிக அதிகமாக லட்சம் பெண்களுக்கு 37.6 பேர் என உள்ளது.
தமிழகத்தில் தற்போதைய சூழலில் மூன்றில் ஒரு பங்கிற்கும் கீழான புற்றுநோய்கள் மட்டுமே ஆரம்ப நிலையில் கண்டறியப்படுகிறது.
பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை 2022ல் இந்தியாவில் 80 சதவீத புற்றுநோய் நோய் முற்றிய நிலையில் மட்டுமே கண்டறியப்படுகிறது என்ற செய்தி உள்ளது. 2050க்குள் அதை 66 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கன்னியாகுமரியில் 15,63,114 பேருக்கு புற்றுநோய் தடுப்பு ஆய்வு மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 20,388 பேருக்கு புற்றுநோய் ஆய்வு நடத்தப்பட்டதில் 18 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதிலும் எத்தனை பேருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு, எத்தனை பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது ஆரம்ப நிலையிலா? முற்றிய நிலையிலா? என்ற விவரம் முக்கிய பத்திரிக்கைகளில் வெளியாகவில்லை! நகர்புறத்திலா? கிராமப்புறத்திலா? போன்ற புள்ளி விவரங்கள் இல்லை!
மத்திய அரசின் புள்ளிவிவரப்படி,
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு புள்ளிவிவரம்-தமிழகம்-
2014 - 6,872 பேர்
2015 - 7,046
2016 - 7,224
2017 - 7,402
2018 - 7,584
2019 - 7,768
2020 - 7,958
2021 - 8,144
2022 - 8,337
2023 - 8,534 பேர்
என்ற அளவில் மட்டும் உள்ளது.
2023ல் தமிழகத்தில் புதிதாக மொத்தமே ஏறக்குறைய 8,500 பெண்களுக்கு மட்டுமே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் சமீபத்திய அரசு புள்ளிவிபரப்படி, லட்சம் பெண்களில் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு 14.8 பேர் என்ற அளவில் உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் 2030க்குள் 70 சதவீதம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
புற்றுநோய் தடுப்புத் திட்டத்தில் கண்டறிதல் முக்கியமா?
அல்லது
வசதிகளை அதிகரிப்பது முக்கியமா என்ற கேள்வி எழுகிறது
புற்றுநோயை உறுதிபடுத்தும் பரிசோதனை வசதிகளை அல்லது சிகிச்சை வசதிகளை தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அல்லது மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தாமல் சிகிச்சைக்கு குறிப்பிட்ட சில அரசு மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் படி செய்வதால் ஏழை மக்கள் எப்படி பயன்பெற முடியும்?
எனவே, புற்றுநோய் சிகிச்சை வசதியை அனைத்து மக்களுக்கும் அருகிலேயே கிடைக்கும் வகை செய்யாமல், குறிப்பிட்ட சில மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சைக்கான வசதிகளை அரசு செய்ய நினைப்பது எதிர்பார்த்த பலன்களை கொடுக்குமா?
புற்றுநோய் வராமல் தடுக்கும் திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை கொடுக்காமல், புற்றுநோயை கண்டறியும் முயற்சிகளுக்கு அரசு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதும் எப்படி சரியாகும்?
எனவே, கிராமங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்களை உருவாக்க முன்வந்தால் மட்டுமே ஏழை மக்கள் பயன்பெற முடியும்.
புற்றுநோய் வராமல் தடுக்க அரசு திட்டங்களை தீட்டி (சாராயம், புகைத்தல், அதிக எடை, காற்று மாசுப்பாடு - இவற்றை கட்டுப்படுத்துதல், வேதிஉரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாத இயற்கை உணவு) அவற்றை நடைமுறைப்படுத்த அரசு மக்கள் நலன்கருதி, முன்வர வேண்டும்.
அப்போது தான் சிறந்த பலன்கள் கிட்டும்.
நன்றி – மருத்துவர் புகழேந்தி
டாபிக்ஸ்