Bitter Guard Kootu : கசக்காமல் பாகற்காய் செய்யவேண்டுமா? இதோ இப்டி செஞ்சு பாருங்க!
Bitter Guard Kootu : கசக்காமல் பாகற்காய் செய்யவேண்டுமா? இதோ இப்டி செஞ்சு பாருங்க!
பாவக்காய் சத்துக்கள் நிறைந்த ஒரு காய்தான். ஆனால் அதன் கசப்பு தன்மையால் நாம் அதை பெரும்பாலும் விரும்பமாட்டோம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. இதில் பல வகை உள்ளது. சுவை, அளவு, நிறம் என மாற்றங்கள் உண்டு.
இந்தியாவில் இது நாட்டுக்காய், பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த காயை குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். அவர்கள் வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதற்கு இது உதவுகிறது.
இது கசக்கும் என்பதால் இதை புளி, தயிர் மற்றும் தேங்காய் ஆகியவற்றுடன் சேர்த்து பொதுவாக சமைக்கிறார்கள். இதை பருப்புடன் சேர்த்து செய்யும்போது அதன் கசப்புத்தன்மை தெரியாமல் இருக்கிறது.
இதில் துவரம் பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்து செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த சுவையை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் – 2 (பெரியது)
துவரம் பருப்பு – ஒரு கப்
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
புளிக்கரைசல் – முக்கால் கப்
வெல்லப்பொடி – 3 ஸ்பூன்
தேங்காய் – ஒரு கப் (துருவியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
மல்லித்தழை – கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
வர மிளகாய் – 4
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
செய்முறை
பாகற்களை விதைகளை நீக்கி வட்டமாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி பாகற்காயை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
குக்கரில் எண்ணெய், பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பருப்பை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது உங்கள் முறையில் பருப்பை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, சீரகம், கடலை பருப்பு, உளுந்து என அனைத்தும் சேர்த்து காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அனைத்தும் சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.
மிளகாய் தூள், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் புளிக்கரைசல் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் வெல்லப்பொடி சேர்த்து கலந்துவிட்டு, வறுத்த பாகற்காய்களை சேர்க்க வேண்டும்.
பின்னர் பருப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும்.
மல்லித்தழை தூவி அடுப்பை அணைத்துவிட்டு இறக்க வேண்டும்.
இது அனைத்து வெரைட்டி சாதங்கள், சாம்பார், ரசம், மோர் சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம்.
குறிப்பு
பருப்பை வேக வைப்பதற்கு முன் அரைமணி நேரம் ஊறவைத்தால், அது எளிதாக வெந்துவிடும்.
டாபிக்ஸ்