Healthy Soups: கொலஸ்டிரால் குறைப்பு, தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் பூசணிக்காய் சூப்
கொலஸ்டிரால் குறைப்பு, தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் பூசணிக்காய் சூப் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பூசணிக்காயில் வெள்ளைப் பூசணி, சர்க்கரைப் பூசணி என இரு வகைகள் உள்ளன. இரு பூசணி வகையிலும் சமமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
பூசணிக்காய் நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. இந்த பூசணிக்காய் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது, சீரண சக்தியை மேம்படுத்துகிறது, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது, இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் சீக்கிரம் வயதாவதை தடுத்து இளமையை தக்க வைக்கிறது. எனவே, நீங்கள் ரெம்ப காலம் இளமையாக இருக்க நினைத்தால் இந்த பூசணிக்காய் சூப் பருகுவது நல்லது. இதில் விட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. வயதாகுவதால் ஏற்படும் கண் குறைபாட்டை தடுக்கிறது.
இந்தப் பூசணிக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின், எலும்பின் வலிமையை அதிகரிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் அதிகளவில் கால்சியம் சத்து இருப்பதால் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்த உணவாகும். கால்சியம் சத்தை கொடுத்து அதிகப்படியான பால் சுரக்க உதவுகிறது.
பூசணிக்காய் சூப் செய்யத் தேவையான பொருட்கள்-
பூசணிக்காய் துண்டுகள் - ஒரு கப்,
வெண்ணெய் ஒரு தேக்கரண்டி,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
பால் - ஒரு டம்ளர்,
மிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி,
பூண்டு - 2 பல்,
சின்ன வெங்காயம்- 4,
உப்பு - தேவையான அளவு
பூசணிக்காய் சூப் செய்முறை-
வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் 4 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
பூசணிக்காய் வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு காயை மட்டும் எடுத்து ஆற வைத்த பின் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை, காய் வேகவைத்த தண்ணீரில் கலக்கவும்.
இதனுடன் பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.