Banana Leaf Chutney: வித்தியாசமான அட்டகாசமான வாழை இலை சட்னி
அட்டகாசமான வாழை இலை சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.
வாழையிலையில் சாப்பிடலாம் அந்த வாழையிலையே சாப்பிட முடியுமா? வாழை இலையை அரைத்து செய்யும் ருசியான வாழையிலை சட்னி, இட்லி தோசைக்கு செமையா இருக்கும்.
செய்முறை
A4 பேப்பர் அளவு அல்லது சாப்பாட்டு இலையின் ஒரு பக்கம். காம்பு நீக்கிய வாழை இலை ஒன்றை எடுத்து கடலை மிட்டாய் சைஸிற்கு துண்டு துண்டாக கத்தரித்து வைக்கவும்.
ஒரு கடாயில் 50 மிலி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து கடலை பருப்பு தலா 1 ஸ்பூன், வரமிளகாய் 4, தோல் சீவிய இஞ்சி 1 அங்குலம், பூண்டு 10 பற்கள், சின்ன வெங்காயம் 20 எல்லாம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பளபளப்பாகும் வரை வதக்கிய பின்பு வெட்டிய வாழை இலைகளை இதில் போட்டு தேவையான உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் நன்கு வதக்கி எடுத்து கொள்ளவும்.
ஆற வைத்து மிக்ஸியில் போடவும். தேவையான நீர் ஊற்றி இதை பேஸ்ட் போல அரைக்கவும். இலையின் நார்களும் நன்கு அரைபடவேண்டும்.
பிறகு அதே கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், ½ ஸ்பூன் கடுகு, கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த பேஸ்ட்டில் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். ஒரு முறை கொதித்ததும் இறக்கி வைக்கவும்! அபாரமான ருசியில் சத்தான வாழையிலை சட்னி தயார்!
இட்லி & தோசை மட்டுமல்ல ஆப்பம், இடியாப்பம், வடை, பஜ்ஜி என எல்லா வகை சிற்றுண்டிகளுக்கும் பர்ஃபெக்டான ஜோடி இது! புளிசாதம், லெமன் சாதம், தயிர் சாத வகைகளுக்கும் மிக அருமையாக இருக்கும்!
கெட்டியாக அரைத்தால் கட்டுச்சோற்றுக்கு இது பிரமாதமாக இருக்கும்.
நன்றி: வெங்கிஸ் கிச்சன்
டாபிக்ஸ்