பிசிஓஎஸ் பிரச்னைகளுக்காக மருத்துவமனைகளுக்கு அலைகிறீர்களா? சித்த மருத்துவர் கூறும் எளிய தீர்வுகள் இதோ!
பிசிஓஎஸ் பிரச்னைகளுக்காக மருத்துவமனைகளுக்கு அலைகிறீர்களா? சித்த மருத்துவர் கூறும் எளிய தீர்வுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நம் ஒவ்வொருவரின் உடலிலும் பெண் ஹார்மோன்கள் மற்றும் ஆண் ஹார்மோன்கள் இரண்டும் சரிவிகிதத்தில் இருக்கின்றன. பெண்கள் பருவமடைந்த பிறகு உடலில் சுரக்கும் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் சுரப்பு குறைவதாலும், ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரப்பதாலும் பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன. இதனால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி, தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி மற்றும் முகப்பரு போன்றவை ஏற்படுகிறது. மேலும் சினைப்பை நீர்க்கட்டி பெண்ணின் வளர் இளம் பருவத்திலேயே ஆரம்பித்து, தொடர்ந்து மாதவிடாயில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. தற்கால வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஹார்மோன்களின் உற்பத்தி மாறுபாடு ஏற்பட்டு இந்நோய் ஏற்படுகிறது. முறையாக மருத்துவரை அணுகி காரணத்தை கண்டறிந்து மருத்துவம் செய்தால் சினைப்பை நீர்க்கட்டியை ஆரம்ப நிலையிலேயே சரி செய்து விடலாம். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை வருவதில்லை. உடல் மெலிந்து காணப்படுபவர்களுக்கே அதிகளவில் சினைப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுகிறது.
பிசிஓஎஸ் ஏற்படும் காரணங்கள்
சினைப்பை மற்றும் மூளைப் பகுதியில் இருக்கும் ஹார்மோன்களின் சமநிலை இன்மையால் ஏற்படுகிறது.
குறிப்பாக பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சுரக்கும் LUTEINIZING HARMONE அல்லது கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் போன்றவை சராசரி அளவை விட அதிகமாக இருப்பதால் சினைப்பையில் டெஸ்டோஸ்டிரான் என்கிற ஆண் ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரக்கிறது. இதனால் சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுகிறது அல்லது மரபணுக்களும் காரணமாகிறது.