Deepavali Special: தித்திக்கும் தீபாவளி..எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?..வாங்க பாக்கலாம்!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், எந்தெந்த ஊரில் என்னென்ன பலகாரங்கள் பெஸ்ட் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
தீபாவளி என்றாலே எப்போதும் பட்டாசும் பலகாரமும் தான் முதன்மையாக இருக்கும். பட்டாசு என்றால் சிவகாசி தான் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்..அதேநேரம் மண் மணம் மாறாத நம்ம ஊர் பலகாரங்கள் பற்றியும் தெரிந்து கொள்வது இன்னும் சிறப்புதானே மக்களே..எந்தெந்த ஊரில் என்னென்ன பலகாரங்கள் பெஸ்ட் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
தூத்துக்குடி மக்ரூன்
முந்திரியும், முட்டையும் கலந்த ஓர் இனிப்பு பண்டம் தான் இந்த மக்ரூன். மிதமான இனிப்பும், திகட்டாத ருசியும்தான் மக்ரூனின் தனிச்சிறப்பு. முட்டையின் வெள்ளைக் கரு, முந்திரிப்பருப்பு, வெள்ளைச் சர்க்கரை ஆகிய கலவையே சுவைமிக்க மக்ரூனாக உருவாகிறது. மக்களிடையே இதற்கு இருந்த வரவேற்பு காரணமாக அதிக அளவில் தயார் செய்யப்பட்டு தற்போது உலக அளவுக்கு மக்ரூன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடியின் அடையாளங்களுள் ஒன்றாகவே மாறி இருக்கும் மக்ரூனை ஆன்லைனில் ஆர்டர் செய்தும் வாங்கிச் சாப்பிடலாம்.
சாத்தூர் சேவு
விருதுநகர் மாவட்ட மக்கள் அன்பளிப்பாக வழங்கும் தீபாவளி பலகார பார்சல்களில் சாத்தூர் சேவு முக்கிய இடம்பிடித்திருக்கும். சேவு வகைகளில் நயம் சேவு, நடப்பு சேவு, காரா சேவு, இனிப்பு சேவு, சீரக சேவு, மிளகு சேவு, சீனி, பட்டர் சேவு, குச்சி சேவு, கருப்பட்டி சேவு என பல வகைகள் உள்ளன. நடப்பு சேவு சிறு குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் காரம் குறைவாக இருக்கும். காரச்சேவு காரம் சேர்த்து தயாரிக்கப்படுவதால் பெரியவர்கள் விரும்பி உண்ணும் வகையில் உள்ளது. சற்று தடிமனுடன் கடுமையான காரத்தன்மையுடன் தயாரிக்கப்படும் மிளகு சேவு, சாப்பாட்டுடன் சேர்த்து அனைவரும் உண்ணும் வகையில் உள்ளது. பாரம்பரியமிக்க சாத்தூர் காரச்சேவின் சுவைக்கு காரணம் அப்பகுதியில் ஓடும் வைப்பாறு ஆற்றின் நீர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் மிளகாய் வத்தலின் காரத்தன்மை தான் முக்கிய காரணம் என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவில்பட்டி கடலை மிட்டாய்
நமது பாரம்பரிய பலகாரங்களில் முதன்மையானது கடலை மிட்டாய். கடலை மிட்டாய் ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. கடலை அதிகம் சாப்பிட்டால் பித்தம் அதிகமாகும். ஆனால், கடலை மிட்டாயில் இனிப்பும் சேர்ந்திருப்பதால் அந்தப் பிரச்னை இல்லை. இதை சாப்பிடும் போது மண்ணீரலுக்கு நேரடியாக சத்து கொடுக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
வெள்ளியணை அதிரசம்
அதிரசம் இல்லாமல் தீபாவளி தித்திக்காது என்பதற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது கரூர் மாவட்டத்தில் இருக்கும் வெள்ளியணை. அதிரசம் தயாரிப்புக்கும் சுவைக்கும் முன்னோடி. கரூர் மாவட்ட வாசிகள் தீபாவளி பண்டிகையின்போது வெள்ளியணை அதிரசத்தை ஆர்டர் செய்து வாங்கிச் செல்வது வழக்கம். பச்சரிசி, அச்சு வெல்லம், ஏலக்காய் மற்றும் சீரகம் கலந்த கலவையில் அமராவதி ஆற்று நீரும் சேர்த்து தயாரிக்கப்படுவதே வெள்ளியணை அதிரசத்தின் தனிச்சுவைக்கான காரணம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்