Cholestrol Control: கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் 25 வகை உணவுகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cholestrol Control: கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் 25 வகை உணவுகள்

Cholestrol Control: கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் 25 வகை உணவுகள்

I Jayachandran HT Tamil
Mar 16, 2023 07:10 PM IST

கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் 25 வகை உணவுகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

கொலஸ்டிரால் கட்டுப்பாடு
கொலஸ்டிரால் கட்டுப்பாடு

சில உணவுப்பொருட்கள் கொழுப்பைக் கரைக்க உதவுகின்றன என்பது நல்ல விஷயம். இந்தப் பதிவில் கொழுப்பைக் கரைக்க உதவும் 25 உணவுகள் என்ன என்று அறிந்து கொள்ளலாமா?

ஆப்பிள்

ஆப்பிள் பழங்களில் நிறைவான அளவு விட்டமின் சி மற்றும் பெக்டின் சத்து உள்ளன. இந்த பெக்டின் என்பது ஒருவகை கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். ஆகத் தினமும் ஆப்பிள் பழத்தைச் சாப்பிட்டு வர, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும். இது ஆப்பிள் பழங்களில் மகத்துவமான குணம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருவேப்பிலை

கருவேப்பிலையில் மிகவும் குறைந்த அளவு கலோரி உள்ளது. கருவேப்பிலையில் சட்னி தயாரித்துச் சாப்பிடலாம். கருவேப்பிலையை உலர வைத்து, பொடியாக அரைத்தும் பயன்பெறலாம். உணவில் கருவேப்பிலைகள் வந்தால் ஒதுக்காமல் சாப்பிடுவது நல்லது. இது கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும்.

வெங்காயம்

வெங்காயத்தில் கியர்சிடின் என்னும் வேதிப் பொருள் காணப்படுகின்றது. இது ஒரு பிளேவனாய்டு ரகம். இந்தப் பொருள் உடலில் உள்ள ரத்தக்குழாய்களில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் குணம் கொண்டவை. ஆக வெங்காயத்தை உணவுகளில் தேவையான அளவு சேர்ப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் குறையத் தொடங்கும்.

பசலைக்கீரை

பொதுவாகவே எல்லா கீரைகளிலும் நார்ச்சத்து நிறைவான அளவு இருக்கும். பசலைக் கீரையில் நார்ச்சத்து நல்ல அளவில் உள்ளது. மேலும் பசலைக் கீரையில் லுடீன் என்னும் பொருள் காணப்படுகின்றன. இவைக் கெட்ட கொழுப்பைக் கரைக்கச் சிறந்த முறையில் உதவுகின்றது. ஆக வாரம் இரண்டு முறை பசலைக்கீரையை உணவில் சேர்ப்பது உகந்தது.

பீன்ஸ்

ஒவ்வொரு காய்கறிகளிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பீன்ஸில் நிறைவான அளவு நார்ச்சத்து உள்ளது. பீன்ஸை கொண்டு சூப் தயாரித்து , அடிக்கடி அருந்தலாம். இதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

பூண்டு

பூண்டில் அலிசின் என்னும் வேதிப்பொருள் காணப்படுகின்றது. இந்தப் பொருள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரும்பங்காற்றுகிறது. இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் தேங்கிய கொழுப்பை கரைக்க , இது உதவுகிறது. ஆக உணவில் பூண்டைத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாகப் பூண்டைப் பச்சையாகச் சாப்பிடுவதன் மூலம் மேலும் நல்ல பலனை அடைய முடியும்.

கொள்ளு

கொள்ளு சட்னி ,துவையல் ,பருப்பு போன்றவற்றைத் தயாரித்துச் சாப்பிடலாம். இது கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க உதவும்.

புடலங்காய்

உணவில் புடலங்காயை அடிக்கடி சேர்ப்பது மிகவும் நல்லது. புடலங்காய் வைத்துப் பொரியல், கூட்டு, குழம்பு போன்ற பல்வேறு உணவுகளைத் தயாரிக்க முடியும். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

வால்நட்

வால்நட்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. ஆக இந்த நட்ஸை தினம் சாப்பிடுவது உகந்தது. இதனால் எளிதில் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு ,எலுமிச்சை ,கொழுமிச்சைக் காய் போன்றவை அமிலத்தன்மை கொண்டவை. இதில் பெக்டின் என்னும் நார்ச்சத்து காணப்படுகிறது. இந்தப் பழங்கள் ரத்தக்குழாயில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டவை.

மீன்

மீன் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற மிகச் சிறந்த உணவாகும். மீன்களில் பல்வேறு விதமான விட்டமின்கள் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் காணப்படுகின்றன. கடல் உணவான மீனை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான நல்ல கொலஸ்ட்ரால் கிடைத்து விடும். இதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதைத் தவிர்க்கலாம். சூரை மீன் , சால்மன் மீன் போன்றவை சாப்பிட உகந்தவை.

கிரீன் டீ

தேநீர் வகைகளிலேயே கிரீன் டீ சற்று விசேஷமானது. இதில் இயற்கையாகவே பல சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் உடலில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்க உதவும். மேலும் இது புற்று நோய் , இதயம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராமல் தடுக்க உதவும். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் தினமும் கிரீன் டீ அருந்தி வர, உடலில் தேங்கியுள்ள அனைத்துக் கெட்ட கொழுப்புகளும் நீங்கி விடும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காயை உணவில் நாம் பலவிதமாகச் சேர்ப்போம். கத்திரிக்காய் கொண்டு சாம்பார் ,பொரியல் , கிரேவி ,புளிக்குழம்பு என்று பல உணவுகளைச் சமைப்போம். இந்த கத்திரிக்காய்களுக்கு ஒரு விசேஷ குணம் உள்ளது. கத்திரிக்காயில் கலோரி அளவு மிக மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. மேலும் இதில் நார்ச்சத்தும் உள்ளது. இந்தக் காரணத்தினாலேயே கத்திரிக்காய் உடலில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவுகின்றது.

மிளகாய்

காரமாகச் சாப்பிட்டால் கொழுப்பு கரையும் என்பார்கள். அது மிகவும் உண்மையான தகவல்தான். மிளகாயில் அல்லியம் என்னும் வேதிப்பொருள் காணப்படுகின்றது. இது கெட்ட கொழுப்பை நீக்கப் பெரிதும் உதவுகிறது.

அவகேடோ

அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இந்த இரண்டு சத்துக்களும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டன. அதிக அளவு கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் , அவகேடோ பழங்களைச் சாப்பிடுவது உகந்தது. இதன் மூலம் அவர்களின் இதயம் வலிமை அடையும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் பீட்டா குளுக்கான் என்னும் ஒருவகை கரையும் நார்ச்சத்து காணப்படுகின்றது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பீட்டா குளுக்கான் சத்து பார்லியிலும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சோயா உணவுப் பொருட்கள்

சோயா பொருட்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகின்றன. ஆக இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கலாம். இந்த வகை உணவு இதயத்தின் செயல்பாட்டைச் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் எண்ணெய்யில் மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் காணப்படுகின்றன. இதில் மேலும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைவான அளவு உள்ளது. இவை அனைத்தும் கெட்ட கொழுப்பை நீக்கும் ஆற்றல் கொண்டவை.

திராட்சைப் பழங்கள்

திராட்சைப் பழங்களில் பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளது. இவை கொழுப்பைக் கரைக்க உதவும். இது மாதிரியான சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வதன் மூலமே கெட்ட கொழுப்பைப் பெரிதளவில் குறைக்க முடியும்.

வெண்டைக்காய்

காய்கறியில் மிகவும் ருசியான ஒரு காய் வெண்டைக்காய். இந்தக் காயில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் உள்ளன. ஆக இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.

தக்காளிப் பழங்கள்

தக்காளியில் லைகோபின் என்னும் சத்து காணப்படுகின்றது. இது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க துணைபுரிகிறது. பொதுவாகவே நம் சமையலில் தக்காளிப் பழங்கள் அதிக அளவு இடம்பெறும். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

ராஸ்பெர்ரி

சிட்ரஸ் ரக பழங்களைப் போலவே இந்தப் பெர்ரி வகை பழங்களும் கெட்ட கொழுப்பை நீக்க மிகவும் உதவுகிறது.

செர்ரி பழங்கள்

செர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும். செர்ரி பழங்களைச் சாலட், பிரட் போன்ற உணவுகளில் சேர்த்துச் சாப்பிடலாம்.

பூசணிக்காய்

பூசணிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அதே வேளையில் குறைந்த அளவு கலோரிகள் காணப்படுகின்றன. இது கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து விடும்.

சியா விதைகள்

சியா விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது உகந்தது. இதனால் கெட்ட கொழுப்பு கரையும்.

வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் பொதுவாக நார்ச்சத்து நிறைந்த உணவு என்பது அனைவரும் அறிந்ததே! அந்த வகையில் இந்தப் பழங்கள் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

பாதாம் பருப்புகள்

பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிடுவது நல்லது. இதயம் வலிமை அடைந்து, கெட்ட கொழுப்புகள் நீங்கிவிடும்.

கேல் அல்லது லீப் கேப்பேஜ்

இதன் இலைகள் பச்சை நிறத்தில் நீளமாகச் சுருண்டு காணப்படும். இதுவும் ஒருவகை முட்டைக்கோஸ் இனம்தான். இதில் அதிகமான அளவு பொட்டாசியம், மெக்னீசியம் ,நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் உள்ளன. இது இதயத்தை வலுவாக்கக் கூடிய ஒரு வகை உணவு ஆகும். உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க உதவும்.

பரங்கிக்காய்

இதில் நார்ச்சத்து மற்றும் பல்வேறு விதமான விட்டமின்கள் உள்ளன. இதை உணவில் சேர்ப்பதன் மூலம், தேவையில்லாத கொலஸ்ட்ரால் படிப்படியாகக் குறையத் தொடங்கும். இதில் கூட்டுத் தயாரித்துச் சாப்பிடலாம்.

இஞ்சி

இஞ்சி பல்வேறு விதமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்த இஞ்சி இயற்கையாகவே பல நோய்களைக் குணப்படுத்தும் ஒரு சிறந்த மருந்துப் பொருளாகும். இஞ்சி கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகின்றது. இஞ்சி டீ அடிக்கடி குடிப்பது உகந்தது. உலர்ந்த இஞ்சியைச் சுக்கு என்று அழைப்பார்கள். இந்த சுக்கு கலந்த கருப்பட்டிகள் கிடைக்கின்றன. இவற்றைச் சாப்பிடுவதன் மூலமும் நல்ல பலனை அடையலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.