Seeman support savukku Shankar: ‘என்னை தாண்டி தொடு பார்ப்போம்’ சீமான் சவால்!
‘சவுக்கு சங்கர் தனி ஆளாக இருக்கலாம். அவர் பின்னால் இயக்கம் இல்லாமல் இருக்கலாம். நான் அவர் அருகில் இருக்கிறேன். என் பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது’ சீமான்!
பரபரப்பான கருத்துக்களால் கைதாகி சிறையில் இருந்து சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த சவுக்கு சங்கரை, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். பின்னர் இவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சீமான் பேசியதாவது:
‘‘சுதந்திரமாக கருத்துசொல்லும் போது, அதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவில்லை. வாய் அற்றவர்களுக்காக பேசாதவனும் அடிமை தான். அந்த மாதிரி அடிமையாக எங்களால் இருக்க முடியவில்லை. நீதிபதியை எதிர்த்து பேசிவிட்டார் என்று அவர் மீது குற்றம் வைக்கிறார்கள்.
ஆடிட்டர் குருமூர்த்தியை விடவா சங்கர் பேசிவிட்டார். மக்கள் பணத்தை சம்பளமாக வாங்கும் அனைவருமே விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள். விண்ணில் இருந்து இறங்கி வந்த தேவ தூதர்களா நீதிபதிகள். சாதாரண மக்களின் வழக்கு நிலை எத்தனை ஆண்டு நிலுவையில் உள்ளது. அதுவே ஒரு கட்சி சின்னத்தின் வழக்கு என்றால், உடனே தீர்ப்பு வருகிறது. ஒருவரை புதைக்கலாமா, வேண்டாமா என இரவோடு இரவாக தீர்ப்பு சொல்கிறீர்கள் எப்படி?
அதனால் தான் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக நிற்கிறோம். விமர்சனத்தை தாங்க முடியாதவர்கள் எதற்கு இந்த பதவிக்கு வருகிறீர்கள். விமர்சனமும் ஒரு பாராட்டு தானே. விமர்சிக்கும் இடத்திற்கு ஒருவர் வந்திருப்பது பெருமை தானே. வியர்க்காமல் விளையாடவே முடியாது. விமர்சிப்பவர்களை மிரட்டுவது; இதெல்லாம் திராவிட மாடலில் வருகிறது.
சவுக்கு சங்கர் தனி ஆளாக இருக்கலாம். அவர் பின்னால் இயக்கம் இல்லாமல் இருக்கலாம். நான் அவர் அருகில் இருக்கிறேன். என் பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது. அதை கவனத்தில் வைத்துக் கொண்டு இனி நீங்கள் வேலை செய்ய வேண்டும்.
என்னையும் இப்படி தான், இவரை போன்று பிடித்து பிடித்து உள்ளே போட்டுக் கொண்டிருந்தார்கள். சிறு மீனாக இருக்கும்போது, அப்புறம் நான் பெருத்த மீனாக மாறிய பின் இவனை பிடித்தால் வலையை கிழித்து விடுவான் என்று என் பக்கம் வருவதில்லை. சங்கரை விட நான் அதிகம் பேசியிருக்கிறேன். என்னை ஏன் தொடவில்லை?
எதுக்கும் அஞ்சிட வேண்டாம்; பேசுவதை நிறுத்திவிட வேண்டாம் என சங்கரிடம் கூறியுள்ளேன். நினைத்ததை பேசுவோம்; துணிந்து பேசுவோம். என் மீது எத்தனை வழக்கு இருக்கு தெரியுமா? 125 வழக்குகள் உள்ளது.
எல்லா மாவட்டத்திலும் எல்லா நீதிமன்றத்திலும் வழக்கு இருக்கும் இரண்டாவது ஆள் நான். எனக்கு முன் நக்கீரன் கோபால் இருக்கிறார். நேற்று கூட நெய்தல் படை அமைப்பேன் என்று கூறியதால் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். வழக்கை பார்த்து பயந்தால் விடியாது விளக்கு.
துப்பாக்கி குண்டுக்கு நெஞ்சை காட்டியவர்கள் நாங்கள். அவர் பேசியவதில், நீதிமன்றம் பிரச்னை இல்லை. ஜி ஸ்கொயர் தான் பிரச்னை. நோட்டை கொடுத்து நாட்டை வாங்கலாம் என நினைக்கிறார்கள். அதை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும்.
அவர் சண்டை செய்ய விரும்புகிறார். அவருக்கு ஆதரவு தருவோம். அவரை விட நான் அதிகம் பேசுகிறேன். என்னை தொட முடியாது, அதனால் சங்கரை தொடுகிறார்கள். அறிவாயுத புரட்சி தான் இப்போது உள்ளது. அதை நிறுத்த முடியாது. யார் தான் மக்களுக்காக பேசுவார்? நாங்கள் அடிமையாக இருக்க விரும்பாமல், அநீதியை எதிர்கிறோம்.
உதயநிதியை எதிர்த்து சங்கர் போட்டியிட்டால், என் வேட்பாளரை வாபஸ் பெற்று விட்டு அவரை ஆதரிப்பேன். எனது விவசாயி சின்னத்திலேயே அவரை போட்டியிடச் செய்வேன். சுயேட்சையாக நிற்க அவர் விரும்பினால், நிற்கட்டும் என நான் வேட்பாளரை நிறுத்தாமல், அவருக்கு ஆதரவு தருவேன். நான் அவருக்கு பணியாற்றுவேன். அதற்காக நாங்கள் கூட்டணி வைக்கிறோம் என்று அர்த்தமில்லை. சங்கர் ஒரு போராட்டக்காரர், அவரை முன்னிறுத்தி சண்டை செய்வது எனக்கு பெருமை தான்,’’
என்று சீமான் அந்த பேட்டியில் கூறினார்.