GM Kumar: ‘14 நாட்களாக நிர்வாணம்’ பாலா பட சங்கடங்கள் பகிர்ந்த ஜி.எம்.குமார்!
GM Kumar Interview: ‘திடீரென்று பாலா என்னிடம் வந்து, கதையை மாற்றிவிட்டேன், கிளைமேக்சில் நீங்கள் நிர்வாணமாக நடிக்கிறீர்கள் என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார். அவர் சொன்னதுதான் மிச்சம், எனக்கு பைத்தியமே பிடித்து விட்டது’- ஜி.எம்.குமார்!
அவன் இவன் படத்தில் நிர்வாணமாக நடித்த அனுபவம் பற்றி பகிர்கிறார் நடிகர் ஜி.எம் குமார்!
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர் என பேர் பெற்றவர் இயக்குநர் பாலா. இவரது இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவன் இவன்’. இந்தப்படத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜி.எம்.குமார் நடித்தார். கதாநாயகிகளாக நடிகை ஜனனியும், மது சாலினியும் நடித்தனர். தேனி, அம்பாச முத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது; இந்தப்படத்தில் ஜி.எம்.குமாரை ஜமீன் பரம்பரை வாசியாக காட்சி படுத்திருந்தார்கள்.
மேலும் இறுதிகாட்சியில் அவரை வில்லன் நிர்வாணமாக்கி, சாட்டையால் அடித்து, மரத்தில் கட்டி தொங்க விடுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகேச தீர்த்தபதி மற்றும் தங்களது குல தெய்வமான சொரி முத்தையனாரை அவதூறாக படத்தில் சித்தரித்துள்ளதாக கூறி சிங்கம் பட்டி இளைய ஜமீன்தார் சங்கர ஆத்மஜன் சார்பில் இயக்குநர் பாலா, ஆர்யா மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆர்யா சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதால் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், எதிர்தரப்பு போதுமான ஆதாரங்களை நிரூபிக்காத காரணத்தால் பாலாவை நீதிமன்றம் விடுதலை செய்தது. இவ்வளவு பெரிய சர்ச்சைக்கும் காரணமாக அமைந்த அந்த காட்சியில் நடித்த ஜி.எம் குமார் அதில் நடித்த அனுபவம் பற்றி பகிர்கிறார். படிக்கலாம்.
இது குறித்து அவர் பேசும் போது, “ என்னை பொறுத்தவரை பாலா சாரும் பாக்கிய ராஜ் சாரும் ஒரே விதமானவர்கள்தான். இரண்டு பேரையும் நான் வெவ்வேறு காலக்கட்டங்களில் சந்தித்தேன். ஒருவரை 80 களில் சந்தித்தேன். இன்னொருவரை 2010 -ல் சந்தித்தேன். பாலாவை பற்றி வெளியில் வெவ்வேறு விதமான பார்வை இருக்கிறது. உண்மையில் பாலா ஒரு குழந்தை. நகைச்சுவை உணர்வு அவரிடம் கொட்டும்.
ஒரு நாள் தேனி பெரிய குளத்தில் உள்ள மாந்தோப்பில் ஷூட்டிங். நான் மரத்தடியில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று பாலா என்னிடம் வந்து, கதையை மாற்றிவிட்டேன், கிளைமேக்சில் நீங்கள் நிர்வாணமாக நடிக்கிறீர்கள் என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார். அவர் சொன்னதுதான் மிச்சம், எனக்கு பைத்தியமே பிடித்து விட்டது. இவ்வளவு பேருக்கு முன்னால் எப்படி நிர்வாணமாக என்று.. மனம் சஞ்சலப்பட்டது. அதன் பின்னர் நாள் ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கிற்கு போகும் போது, அந்த நிர்வாணக்காட்சியை இன்று எடுப்பார்களோ என்ற பயத்திலேயே செல்வேன். ஒரு கட்டத்தில் அந்த நாளும் வந்தது. மொத்தமாக 14 நாட்கள். 7 நாட்கள் நிர்வாணமாக நடித்தேன்.. இன்னொரு 7 நாட்கள் நிர்வாணமாக மரத்தில் தொங்கினேன்.
ஷூட்டிங்கை பார்க்க வந்த பார்வையாளர்கள் அதை பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்ள வில்லை. காரணம் அந்த ஊரில் ஆடை இல்லாமல் இருப்பது மிகவும் இயல்பான விஷயமாக இருந்தது. காட்டு மாடுகள் ஓடுகிறது... ரெயின் எஃபெக்ட் என்பதால் மழை வேறு.. அதில் நான் நிர்வாணமாக ஓட, படத்தின் வில்லன் என்னை சாட்டையால் அடிப்பது போன்ற காட்சி.. அய்யோ நான் ஒரு வழி ஆகி விட்டேன். அதற்கடுத்தபடியாக 80 அடி உயரத்தில் நிர்வாணமாக தொங்க விட்டார்கள்; விஷால் எனக்கு மேலே ஏறினான். அது வழுக்கு மரம் வேறு.. நழுவினால் எழும்பு முறிந்து விடும். அப்படித்தான் அந்த காட்சியை எடுத்தோம். அந்த முயற்சி உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்