VJ Siddhu: ‘சாவு வீட்ல கன்டென்ட் கொடுக்கணுமா.. அவராலும் நாங்க வளர்ந்தோம் எங்களாலும்..’ - டென்ஷனான VJ சித்து
VJ Siddhu: எங்களால்தான் அவர் மேலே வந்தார் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது. அவராலும் நாங்கள் வளர்ந்தோம், எங்களாலும் அவர் வளர்ந்தார். - வி.ஜே.சித்து!
பிஜிலி ரமேஷ் இறந்தது குறித்து விஜே சித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “பிஜிலி ரமேஷ் இறந்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. உடன் இருந்தவர் ஒருவர் இறந்தால் எப்படி வேதனை இருக்குமோ, அதே போன்றதொரு வேதனை எனக்கு இப்போது இருக்கிறது. அவரை நிறைய பார்த்திருக்கிறோம் அவருடன் நிறைய பேசியிருக்கிறோம்.
மிகவும் தவறு
மீடியா நண்பர்களில் ஒருவர் காலையிலிருந்து காத்திருக்கிறோம் கன்டென்ட் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று சொன்னார். அது மிகவும் கஷ்டமாக இருந்தது. நீங்கள் மிகவும் தவறாக பேசுகிறீர்கள். அது மிக மிக தவறு. எங்களால்தான் அவர் மேலே வந்தார் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது. அவராலும் நாங்கள் வளர்ந்தோம், எங்களாலும் அவர் வளர்ந்தார். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவருக்கு இது நடந்திருக்கக் கூடாது. இதுதான் எனக்கு மிக மிக வருத்தமாக இருந்தது.
இறுதியாக அவர் உடல் நலம் சரியில்லாத போது மருத்துவமனையில் சென்று அவரை பார்த்து வந்தேன். அவருக்கு நிறைய பேர் உதவி செய்யவில்லை என்பது குறித்து கேட்கிறீர்கள் சில விஷயங்களை சில இடங்களில் பேச முடியாது, நானும் அதை குறித்து பேச விரும்பவில்லை” என்று பேசினார்.
யார் இந்த பிஜிலி ரமேஷ்
ஒரு காலத்தில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் பட்டியலில் இருந்தவர், பிஜிலி ரமேஷ். ஒரு ப்ராங்க் வீடியோ தான் அவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.
அதைத் தொடர்ந்து, 2019ல் வெளியான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், ஆடை, பொன்மகள் வந்தாள் படத்தில் வெளியே தெரிய ஆரம்பித்தார். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ஒரு ரஜினிகாந்த் படத்தை கூட விடாமல் பார்த்துவிடுவார்.பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சியில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, தனது வாழ்வை பார்த்து கொண்டு வந்தார்.
பிஜிலி ரமேஷ் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது சிகிச்சைக்கு உதவ நிதி உதவி செய்ய அவரது சக ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தனர். பலரும் அதை பார்த்து உதவி செய்தார்கள். இருப்பினும் பிஜிலி ரமேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9.00 மணியளவில் காலமானார்.
இதனிடையே கடைசியாக அவர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருந்தார். அவர் கூறுகையில், “ என் உடல்நிலை பற்றி எனக்கு நல்லவே தெரியும். என்னால சாப்பிடவே முடியல. ரொம்ப கஷ்டமாக தான் இருக்கிறது. குடிப்பவர்களை குடிக்க வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு நான் ஒன்னும் பெரிய பிரயோஜனம் இல்லை. நான் அந்த தகுதியை இழந்துவிட்டேன். இந்த குதிரை எப்போது நிற்கும் என்று தெரியாது. ஓடினால் ஓடும். இல்லை நின்றுவிடும்.
தினமும் 12 மணி நேரம் ஆகிவிட்டது என்றால் அதற்கு என்று ஒரு கூட்டமே அலைமோதும். ஒருவரிடம் சென்று குடிக்க வேண்டாம், நல்லது இல்லை என்று சொன்னால் கேட்க மாட்டார்கள். நீ போய் உன் வேலையை பார் என்று தான் சொல்வார்கள். அதானாலேயே சொல்ல கூடாது. என் பிள்ளைகளை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கிறது. நான் சென்ற பிறகு யார் அவர்களை யார் பார்ப்பார்கள் என்று நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.
மரண படுக்கையில் பிஜிலி ரமேஷ் ஆசை
சினிமாவில் அனைவரிடமும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. குறிப்பாக என் தலைவன், ரஜினி. என்னுடைய மிகப்பெரிய ஆசையே ரஜினி சாருடன் நடிக்க வேண்டாம் என்று தான். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. " என்றார். மரண படுக்கையில் பிஜிலி ரமேஷ் பேசிய வீடியோ பார்வையாளர்களை வெகுவாக பாதித்து உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்