பிரபல காமெடி மற்றும் குணச்சித்தர நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்! அவருக்கு திரைத்துறையினர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகனாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகனாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். தற்போது 80 வயதாகும் அவர், மருத்துவரின் ஆலோசனைப்படி, மது குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களில் இருந்து வெளியேறியிருந்த நிலையில், அவர் நேற்று இரவு 1 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்
கதாபாத்திரங்களை உள்வாங்கி மக்கள் ரசிக்கும்படியாக நடிப்பதில் தமிழ் சினிமாவில் பல துணை நடிகர்கள் இருந்தாலும் நடிகர் டெல்லி கணேஷூக்கு என்று தனி இடம் உண்டு. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக்கூடியவர். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் கலை அனுபவம் கொண்டவர். தற்போது வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கும் டெல்லி கணேஷ், திருநெல்வேலி மாவட்டம், வல்லநாட்டில் 1944 ஆம் ஆண்டு அகஸ்ட் 1 ஆம் தேதி பிறந்தார்.
முதல் திரைப்படம்
இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளியான 'பட்டினப்பிரவேசம்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1980-களில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக ஆகிப்போனார். வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் மட்டுமல்லாது டெல்லி கணேஷ் காமெடியிலும் கலக்க கூடியவர். 'மிடில் கிளாஸ் மாதவன்', 'அவ்வை சண்முகி' ஆகிய திரைப்படங்களை அவரது காமெடி நடிப்பிற்கு உதாரணங்களாக கூறலாம்.
ரஜினி, கமல் படங்களில் டெல்லி கணேஷ்
பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த விசுவின் படங்களில் டெல்லி கணேஷுக்கு குறிப்பிடத்தக்கத் துணைக் கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. ரஜினி, கமல் படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்தார். 1985-ல் பாலசந்தர் இயக்கி உச்சம் தொட்ட காவியம் 'சிந்து பைரவி' படத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான மிருதங்கக் கலைஞராக வெகு சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார். 1987-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இன்றும் பேசப்படக்கூடிய 'நாயகன்' திரைப்படத்தில் மும்பை தாராவியில் வாழும் தமிழராக வேலு நாயக்கரின் இந்தி மொழி பெயர்ப்பாளராக பக்கம்பலமாக நடித்துப் பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.
பன்முக கலைஞர்
தொடர்ந்து 1990-களில் டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர், நகைச்சுவை வேடங்களே இருந்தது. ஆனால், 'சிதம்பர ரகசியம்', 'அபூர்வ சகோதரர்கள்' போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தினார். 2000-க்குப் பின்னர் தந்தை, தாத்தா போன்ற வயதான வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடிப்பில் வெளிவந்த சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி போன்ற படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது
சீரியல் புகழ்
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான 'வசந்தம்', 'கஸ்தூரி' போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'இரும்புத் திரை' போன்ற திரைப்படத்தில் ஒரு யதார்த்தமான கதாபாத்திரத்தை வெளிக்காட்டி இருப்பார். சுமார் 400-க்கு மேற்பட்ட திரைப்படங்களைக் கடந்து இன்று வரை வெற்றிகரமாகத் தொடர்கிறது டெல்லி கணேஷின் நடிப்புப் பயணம்.
கணேசன், டெல்லி கணேஷ் ஆக மாறியது எப்படி?
அண்மையில் நடிகர் டெல்லி கணேஷ் அளித்த பேட்டி ஒன்றில், அவரிடம், உங்களுக்கு டெல்லி கணேஷ் என்ற பெயர் வர காரணம் என்ன என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'என்னை சினிமாவில் அறிமுகம் செய்தவர் பாலச்சந்தர். என்னிடம் அவர், சினிமாவிற்கு தகுந்த மாதிரி உன் பெயரை மாற்றிக்கொள் என்று கூறினார். அப்போது நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அந்த நேரத்தில் பாலச்சந்தர் என்னிடம் ‘நீ டெல்லியில் பல நாடகங்களில் நடித்திருப்பதால் உன் பெயரை டெல்லி கணேஷ் என்று வைத்துகொள் என்றார். நானும் அவர் சொன்னவாறு பெயரை மாற்றிவிட்டேன். மேலும் என்னுடைய நிஜ பெயர் கணேசன் தான்’ என்று கூறினார்.
தில்லி நாடக குழு உறுப்பினர்
இவர் தட்சிண பாரத நாடக சபா எனப்படும் தில்லி நாடக குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். ஆரம்பத்தில் டெல்லி கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன்பு 1964 முதல் 1974 ஆம் ஆண்டு வரை இந்திய வான்படையில் பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படிபட்ட கலை நாயகன் தற்போது வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இதை அறிந்த திரைத்துறையினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டாபிக்ஸ்