Vani Bhojan: நீட் தேர்வு பிரச்சினை; ‘ரொம்ப ரொம்ப கஷ்டமா போச்சு..’ - மேடையில் கண்கலங்கிய வாணி போஜன்!
Vani Bhojan: எத்தனையோ முறை இதை மேடையில் நான் இன்று பேசி இருந்தாலும், இந்த தருணம் எனக்கு ரொம்பவே மனநிறைவாக இருக்கிறது. அஞ்சாமை குழுவினரை இப்படி பார்ப்பதற்கு நான் ரொம்பவே கொடுத்து வைத்திருக்கிறேன். இந்த நாள் எனக்கு ரொம்பவே சந்தோஷமான நாள் - வாணி போஜன்!
Vani Bhojan: பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்திருக்கிறார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார்.
விதார்த், வாணி போஜன், ரஹ்மான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலா சரண் பின்னணி இசையமைத்து இருக்கிறார். வரும் ஜூன்-7ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது.
வாணி போஜன் பேட்டி
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாயகி வாணி போஜன் பேசும்போது, “அஞ்சாமை எனக்கு ரொம்பவே முக்கியமான படம். நமக்கு ரொம்பவே நெருக்கமான, உயிருக்கு உயிரானவர்களை பற்றி அடிக்கடி விசாரிப்போம். அப்படி ஒரு உயிருக்கு உயிரான படம்தான் அஞ்சாமை. இந்தப் படத்தை ரொம்பவே நேசித்திருக்கிறேன். எந்தப் படத்தில் வேலை பார்க்கச் சென்றாலும் இந்த படம் பற்றிய ஞாபகம் வந்துவிடும். அந்த அளவிற்கு உயிரைக் கொடுத்து வேலை பார்த்திருக்கிறோம்.
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறீர்களே என்று பலரும் கேட்டார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் பண்ணவில்லை என நினைத்தால் நான் நடிகையாக இருப்பதற்கு அர்த்தமே இல்லை என நினைக்கிறேன். எனக்கு இப்படி ஒரு படம் கிடைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசமான விஷயம். எனக்கு நடிக்க தெரியும் என இயக்குநரிடம் கூறினாலும் உங்களிடமிருந்து எங்களுக்கு என்ன கிடைக்கும் என நாங்கள் ஒரு ஆடிஷன் செய்து கொள்கிறோம் என இயக்குநர் கூறினார். அப்போதே இது ஒரு நல்ல படமாக இருக்கும் என எனக்குத் தோன்றியது.
சமூக பொறுப்புணர்வு
ஒரு நடிகையாக, ஒரு சமூக பொறுப்புணர்வு உள்ள ஒரு மனிதராக, இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்ல மாட்டார்கள்.100% என்னுடைய உழைப்பை கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன். நம் பக்கத்து வீட்டு மனிதரைப் போலவே, இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தும் வெகு சில நடிகர்களில் விதார்த்தும் ஒருவர். நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்கள் வெளியாகிறது என்றால் தவிர்க்காமல் பார்த்து விடுவேன்.
அந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எத்தனை டாக்டர்களுக்கு இப்படி ஒரு கதையை படமாக எடுக்க வேண்டும் என தோன்றி இருக்கும் என தெரியாது. இதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என எண்ணத்தில் படமாக தயாரித்த தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசுக்கு நன்றி. இயக்குநர் சுப்புராமன் மனதில் என்ன வலி இருக்கிறதோ, கஷ்டம் இருக்கிறதோ, அதை எத்தனை பேர் வெளியே சொல்வார்களோ தெரியாது. ஆனால் அவர் பட்ட கஷ்டத்தை வலியை நான் உணர்ந்தேன். (இந்த இடத்தில் கண்கலங்கினார்).
ரிலீஸ் பண்ணுவது எவ்வளவு கஷ்டம்
ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவது எவ்வளவு கஷ்டம் என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. காரணம், அடுத்தடுத்த படங்களில் நடித்து போய்க்கொண்டே இருப்போம். சம்பாதிப்போம்.. சம்பளத்தை உயர்த்துவோம். ஆனால் மொத்த உயிரையும் கொடுத்து கனவு ,ஆசை எல்லாவற்றையும் போட்டு ஒரு படத்தை மிக அற்புதமாக கொடுத்திருக்கிறார்.
அவர் இதற்காக என்னென்ன கஷ்டங்கள் பட்டிருக்கிறார், எவ்வளவு துயரங்களை அனுபவித்து இருக்கிறார் என ஒவ்வொரு முறையும் நான் கேள்விப்படும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவருடைய படத்தில் நானும் இருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. எத்தனையோ முறை இதை மேடையில் நான் இன்று பேசி இருந்தாலும், இந்த தருணம் எனக்கு ரொம்பவே மனநிறைவாக இருக்கிறது. அஞ்சாமை குழுவினரை இப்படி பார்ப்பதற்கு நான் ரொம்பவே கொடுத்து வைத்திருக்கிறேன். இந்த நாள் எனக்கு ரொம்பவே சந்தோஷமான நாள்” என்று கூறினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்