தவெக தலைவர் விஜய் தமிழக அரசிற்கு கோரிக்கை! அடிப்படை வசதிகள் அவசியம்!
சென்னை மெரீனாவில் நடந்த விமானப் படை சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது என நடிகரும், தவெக தலைவருமான விஜய் அவரது X தளத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று (அக்டோபர் 6 ) இந்தியா விமானப்படை சார்பில் விமான சாகச நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த சாகச நிகழ்வை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். மேலும் இந்நிகழ்வை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி என பல அரசியல் பிரபலங்களும் கண்டு ரசித்தனர். மேலும் இந்த சாகச நிகழ்வை காண காலை 8 மணியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரீனாவில் குவிந்த வண்ணம் இருந்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்வை மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் பார்த்து ரசித்தனர்.
லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த இடத்தில் போதுமான குடி தண்ணீர் வசதி, போதுமான கழிப்பறை வசதி என எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை. இதன் காரணமாக கூட்டத்தில் இருந்த 240 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மேலும் 100 க்கும் அதிகமான பேர் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து கூட்ட நெரிசலில் மூச்சு திணறி 5 பேர் உயிரிழந்தனர். இது மக்கள் மத்தியில் தமிழக அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் வேதனை
இதனையடுத்து சென்னை மெரீனாவில் நடந்த விமானப் படை சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது என நடிகரும், தவெக தலைவருமான விஜய் அவரது X தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்தான அவரது X தள பதிவில்,
"சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டு இருந்தார்.
அதிருப்தி அளித்த அரசின் செயல்பாடு
இப்படி ஒரு நிகழ்விற்கு ஏற்பாடு செய்யும் முன்னே மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்தவும், விதிமுறைகள் விதிக்கவும் தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த அசாம்பவித நிகழ்வு மிகவும் வேதனை அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது ஆளும் அரசின் அலட்சிய போக்கையே காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
தமிழக அரசுக்கு அதிமுக கண்டனம்
இந்த நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யத் தவறிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.
இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய இந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசுக்கு அரசுக்கு என் கடும் கண்டனங்கள்.” என தெரிவித்து உள்ளார்.
டாபிக்ஸ்