HBD Shankar: திரையில் பிரம்மாண்டம் காட்டிய இயக்குநர் சங்கர் பிறந்த நாள் இன்று
இந்திய சினிமா வட்டாரத்தையும், உலக சினிமா ரசிகர்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி 30 ஆண்டுகளாக ரசிகர்களை கட்டி வைத்துள்ள இயக்குநர் சங்கர் பிறந்த நாள் இன்று.
தமிழ் சினிமா இயக்குநர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் இயக்குநர் சங்கர் இன்று தனது 60 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளில் அவர் குறித்த முக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிறப்பு
இயக்குநர் சங்கர் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 17ல் கும்பகோணத்தில் உள்ள உமையாள் புரம் என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தை சண்முகம். தாய் முத்துலெட்சுமி. இவர் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்தார்.
படிப்பை முடித்து அமெரிக்காவில் செட்டில் ஆக விரும்பினார் சங்கர். ஆனால் குடும்ப சூழல் ஒத்துழைக்கவில்லை. இதனால் டைப்ரைட்டிங் மேனிபக்ஷரிங் கம்பெனியில் குவாலிட்டி கண்ட்ரோல் சூப்பர் வைசராக பணியாற்றினார். அந்த கம்பெனியில் வேலை நிறுத்தம் நடந்ததால் நண்பருடன் இணைந்து ஒரு நாள் கிரேஸி மோகனின் நாடகத்தை பார்க்க சென்றார். இதையடுத்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட சங்கர் நண்பர்கள் சுதர்சன், சுரேஷ் ஆகியோரின் உதவியுடன் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.
அப்போது சங்கரின் நாடகத்தை பார்த்த இயக்குநர் சந்திர சேகர் அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து தனது கதைக்கு நகைச்சுவை வசனம் எழுத சொன்னார். இது நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து சென்ற சங்கருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் எஸ்.ஏ.சந்திர சேகருடன் இணைந்து ஜெய் சிவ் சங்கர் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். இதையடுத்து 1986ல் நடந்த பூவும் புயலும் படத்தில் நடித்தார். மேலும் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் சினிமாவில் அவருக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் போகவே இயக்குநராக முயற்சித்தார். இதையடுத்து நடிகர் அர்ஜூனை வைத்து ஜென்டில் மேன் படத்தை இயக்கினார்.
நடிகராக ஜொலிக்க முடியாமல் போனாலும் இயக்குநராக தன் முதல் படத்திலே தமிழ் சினிமாவில் தனது வெற்றியை ருசித்தார். இந்த படித்திற்காக சிறந்த இயக்குநருக்கான மாநில விருதையும், பிலிம் பேர் விருதையும் பெற்றார். இதையடுத்து தனது இரண்டாவது படமான காதலன் படத்தை பிரபுதேவாவை வைத்து இயக்கினார். இதில் 4 தேசிய விருதுகளை வென்றதோடு, சிறந்த இயக்குநருக்காக தமிழக அரசின் இரண்டாவது விருதை பெற்றார். இதையடுத்து இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், என தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்தார். பாய்ஸ், அந்நியன், எந்திரன், நண்பன், 2.o, ஐ, இந்தியன் 2 என அடுத்தடுத்து தனது பயணத்தில் தெளிவாகவும், நிதானமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் இயக்குநர் சங்கரின் வெற்றிக்கு திரையில் அவர் காட்டும் பிரம்மாண்டமும் ஒரு காரணம் எனலாம். இந்நிலையில் தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் ஹாசனுடன் இணைந்து 'இந்தியன் 2' படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இயக்குநர் என்ற போர்வையில் மட்டும் நிற்காமல் 23ஆம் புலிகேசி, காதல், வெய்யில் போன்ற அற்புதமான படங்களை தயாரித்துள்ளார். அந்த வகையில் இந்திய சினிமா வட்டாரத்தையும், உலக சினிமா ரசிகர்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி 30 ஆண்டுகளாக ரசிகர்களை கட்டி வைத்துள்ள இயக்குநர் சங்கர் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவரது ரசிகர்களுடன் இணைந்து இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறது. வாழ்த்துகள் சங்கர் சார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்