HBD Kovai Sarala: நகைச்சுவை இளவரசி ‘கோவை சரளா’ பிறந்த நாள் இன்று!
என்னுடைய ஸ்டைலில் நான் நடித்துக் கொண்டிருந்தால் அது வேலைக்கு ஆகாது.
‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டே...’ இது கோவை சரளாவின் எவர் கிரீன் வசனம். தமிழ் சினிமாவில் மனோரமாவிற்கு பிறகு தனக்கென காமெடியில் தனி முத்திரை பதித்தவர் கோவை சரளா அவரது பிறந்த நாளான இன்று அவர் குறித்த தகவல்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
கோவை சரளா பிறப்பு
கோவை சரளா தமிழ்நாட்டில் இருக்கும் கோயமுத்தூரில் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர்.இவரது இயற்பெயர் சரளாகுமாரி.
இளமைப் பருவம்
சிறு வயதிலிருந்தே நல்ல பேச்சுத் திறமை கொண்ட சரளா தனது கல்வியை கோவையில் தொடங்கினார். பள்ளி நாட்களில் இருந்தே சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகை ஆவார். ஒருமுறை எம்.ஜி.ஆர். கோவை வந்த போது, சரளாவை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது சரளாவின் திறமைகளைப் அறிந்த எம்.ஜி.ஆர், அவரிடம் ‘உனக்கு நிறைய திறமை இருக்கு. என்று சொல்லி, கைநிறைய உதவித் தொகை அள்ளி வழங்கினார். அந்த உதவித் தொகையில் படித்த அவர், எம்.ஜி.ஆரை போல நாமும் பிறருக்கு படிக்க உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை தன் இளம் வயதிலேயே வளர்த்துக் கொண்டார். தன் பள்ளிப்படிப்பை முடித்த கோவை சரளா, சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அவர் தந்தையும், அக்காவும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் திரை உலகில் வாய்ப்பு தேட தொடங்கினார்.
கோவை சரளா-பெயர் காரணம்
தன் சினிமா கனவை நனவாக சென்னைக்கு வந்த கோவை சரளா இயக்குநர் பாக்யராஜை சந்தித்தார். அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட பாக்யராஜ் திரைக்கதை எழுதி,1983ல் நடித்த படமான ‘முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கோவை சரளாவை அறிமுகம் செய்தார். இதையடுத்து பத்திரிகையாளர்கள் அவரிடம் சரளா என்ற பெயருடன் கோவையை மட்டும் சேர்க்கலாமா என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து இன்று வரை சரளாவின் பெயருடன் கோவையும் ஒட்டிக்கொண்டது. ‘வைதேகி காத்திருந்தாள்’ (1984), ‘தம்பிக்கு எந்த ஊரு’ (1984)போன்ற படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து, ‘உயர்ந்த உள்ளம்’ (1985), ‘சின்ன வீடு’ (1985), ‘லக்ஷ்மி வந்தாச்சு’ (1985), ‘ஜப்பானில் கல்யாணராமன்’ என அடுத்தடுத்து தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து 2018 ஆம் ஆண்டில் இருந்து சில காரணத்தால் படங்களிலிருந்து ஒதுங்கி இருந்த கோவை சரளா. மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், மீண்டும்’ காஞ்சனா’ (2011) திரைப்படம் மூலம் தனது இரண்டாம் இன்னிங்க்சை தொடங்கிய அவர், ‘வானவராயன் வல்லவராயன்’ (2013), ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’ (2012), ‘தில்லு முல்லு’ (2013) போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ்ப் படங்களைத் தவிர, தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இதையடுத்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கோவை சரளா நடித்த செம்பி திரைப்படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசியது. அந்த படம் முழுவதும் சமூகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் குடும்பத்தினரின் வலியை தன் நடிப்பின் வழியாக வெளிப்படுத்தி இருந்தார்.
தனிப்பட்ட முறையில் தன் திருமணத்தை தவிர்த்து விட்ட கோவை சரளா சகோதரி, சகோதரர் பிள்ளைகளை தன் குழந்தைகளாக நினைத்து வளர்த்து வருகிறார். ஏராளமான ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கும், வயதானவர்களின் நலனுக்காகவும் அவரால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
கோவை சரளாவும் அரசியலும்
திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்த கோவை சரளா கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 8 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடிகை கோவை சரளா கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பிறகு பேசிய கோவை சரளா, எங்குச் செல்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன்.
இது நல்ல இடமாக இருந்தது. எனவே இங்கு வந்துள்ளேன். இங்கு இருப்பதைப் பார்த்தால் ‘மக்கள் நீதி மய்யம்’ மகளிர் நீதி மய்யமாக மாறிவிடும் போல உள்ளது. மக்கள் நீதி மய்யம் மகளிருக்கான நீதியைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன். எனவே இந்தக் கட்சியில் இணைகிறேன். என்னை மக்கள் திரையில் வாழ வைத்தார்கள். அவர்களுக்கு இங்கிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறினார்.
மனோரமாவிற்கு பிறகு தமிழ் திரை உலகில் ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளராக இருக்கும் கோவை சரளா. தென்னிந்தியத் திரையுலகின் ஒரு பெண் ஆளுமை என்றால் மிகையல்ல.
'என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்' 'என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்' என்று கரகாட்டக்காரனில் நம்மை சிரிக்க வைத்த கோவை சரளா ' 'மாருகோ மாருகோ மாருகழி' என்று நம்மை கொண்டாட வைத்தார்.'சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்' 'தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது' என்பது போன்ற காட்சிகள் இன்றைக்கும் எல்லாரும் விரும்பி ரசிக்கும் வகையில் இருந்தது.
குறிப்பாக இன்றைய குட்டீஸ்கள் மத்தியில் அரண்மனை, காஞ்சனா போன்ற படங்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார்.
பெண் ரசிகர்கள் அதிகம்
பொதுவாக கோவை சரளாவிற்கு பெண் ரசிகர்களே அதிகம். பொதுவாக கோவை சரளா நடிக்கும் படங்களில் குடும்பத்தில் அவரே ஆதிக்கம் செலுத்துவதை போல் நடித்திருப்பதே காரணம் எனலாம். பெரும்பாலான படங்களில் உடன் நடிக்கும் ஆண் கதாபாத்திரத்தை வெளுத்து வாங்குவார். குறிப்பாக வடிவேலு கோவை சரளா காமிஷேனில் இருவரும் சரிக்கு சரி நடித்து பார்ப்பவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பார்கள். அதிலும் கோவை சரளா சின்ன சின்ன மாடுலேஷனிலும், உச்சரிப்பிலும் நம்மை கட்டி போட்டுவிடுவார். செந்தில், கவுண்டமணியுடன் அவர் நடித்த காட்சிகள் இன்றளவும் பார்ப்பவர்களை சிரிக்கவைக்கிறது. இதுவரை 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் ஏராளமான விருதுகளை வென்றுள்ளளார்.
3 தலைமுறை நடிகர்களுடன் கை கோர்த்த கோவை சரளா, முதலில் நம்முடன் யார் நடிக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்கள் ஸ்டைலுக்கு என்னை மாற்றிக்கொள்வேன். என்னுடைய ஸ்டைலில் நான் நடித்துக் கொண்டிருந்தால் அது வேலைக்கு ஆகாது. கவுண்டமணி, செந்தில் என்றால் அவர்களுக்கு தேவையான ஸ்டைலில் நடிப்பேன். அவர்களுக்குப் பின் விவேக், வடிவேலு வந்தார்கள். அவர்களுடனும் அதனால் தான் பயணிக்க முடிந்தது என தன் சீக்ரெட்டை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்
தன் நடிப்பால் எப்போது நம்மை சிரிக்க வைக்கும் கோவை சரளா இன்று தனது 61 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளில் அவரின் திரை வாழ்க்கை குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் ஹெச்டி தமிழ் பெருமகிழ்ச்சி அடைகிறது.
டாபிக்ஸ்