தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Manorama: தமிழ் திரை உலகில் நகைச்சுவை அரசி 'ஆச்சி மனோரமா' பிறந்த நாள் இன்று!

HBD Manorama: தமிழ் திரை உலகில் நகைச்சுவை அரசி 'ஆச்சி மனோரமா' பிறந்த நாள் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
May 26, 2023 05:00 AM IST

நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.

மனோரமா பிறந்த நாள் இன்று
மனோரமா பிறந்த நாள் இன்று

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை மனோரமா பிறந்த நாளான இன்று அவர் குறித்த தகவல்களை சற்றே திரும்பி பார்க்கலாம்.

நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள் என 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மனோரமா. தமிழ்திரையுல ரசிகர்கள் இவரை ஆச்சி என்றே அன்போடு அழைக்கிறார்கள். இன்று தமிழ் திரை உலகில் அறிமுகமாகும் நகைச்சுவை நடிகைகளின் கனவு என்பது ஆச்சியின் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பது தான். ஆனால் இன்று வரை அவரது இடத்தை யாராலும் பிடித்து விட முடியவில்லை.

தென்னிந்தியாவின் 5 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்ட மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. இவர் காசியப்பன் 'கிளாக்குடையார்' மற்றும் ராமாமிர்தம் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். தந்தை காசியப்பன் கிளாக்குடையார் மனோரமாவின் தாயாா் ராமாமிா்தம் அவா்களின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்தார். இதையடுத்து கணவருடன் ஏற்பட்ட மனகசப்பால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் அம்மாள் மனோரமவை அழைத்து கொண்டு காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். 

மனோரமாவை ஆறாம் ஆம் வகுப்பு வரை படிக்கவைத்தார். குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாத மனோரமா அங்குள்ள செட்டியார் வீடுகளில் வேலையாளியாக பணி செய்தார். அவர்கள் தாயாருடன் பலகார வியாபாரம் செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள். தனது பன்னிரண்டாவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். "பள்ளத்தூர் பாப்பா" என சிறு வயதில் மனோரமா செல்லமாக அழைக்கப்பட்டார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.

மேடைகளில் தனது திறமையை வெளிப்படுத்திய மனோரமா 1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை' திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக சினிமா உலகத்துக்குள் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என பல மொழிகளில் நடித்திருந்தார். தமிழில் 'களத்தூர் கண்ணம்மா', 'கொஞ்சும் குமரி', 'தில்லானா மோகனாம்பாள்', 'எதிர் நீச்சல்', 'பட்டிக்காடா பட்டணமா', 'காசேதான் கடவுளடா' எனத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.

வெற்றி ஜோடி நாகேஷ் மனோரமா

நடிகர் நாகேஷ் - மனோரமா இருவரும் இணைந்து சந்திரோதயம், அன்னமிட்ட கை, சரஸ்வதி சபதம், தேர் திருவிழா, பூஜைக்கு வந்த மலர், கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட 19 திரைப்படங்களில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் காமெடி ஜோடியாக வலம் வந்தனர். இந்த ஜோடி திரையில் தோன்றினாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என்ற அளவிற்கு புகழின் உச்சிக்கே சென்றனர்.

தில்லானா மோகனாம்பாள் படத்தின் ஜில்ஜில் ரமாமணி கதாபாத்திரம், 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படத்தில் கண்ணம்மா பாத்திரம். "நடிகன்' திரைப்படத்தில் சத்யராஜை விரும்பும் பாத்திரம், 'சின்ன கவுண்டர்' திரைப்படத்தில் சுகன்யாவை வம்பிழுக்கும் பாத்திரம் என தான் நடித்த படங்களில் எல்லாம் ஆளுமையை செலுத்தியவர் மனோரமா.

1960 மற்றும் 1970-களில் நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்த மனோரமா பின். அடுத்த தலைமுறையான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடனும் இணைந்து குணச்சித்திர பாத்திரத்தில் ரசிக்க வைத்தார் மனோரமா. அதன் அடுத்த தலைமுறையான அஜித், விஜய், சூர்யா ஆகியோருடனும் அவர்களின் வேகத்திற்கு இணையாக ஈடுகொடுத்து அசத்தி வந்தார்.

1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மனோரமா உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இந்நிலையில் 2015ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார்.

ஆச்சி இந்த உலகை விட்டு மறைந்திருந்தாலும் இன்று தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகையாக ஆட்சிசெய்து வருகிறார் என்பதே மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் ஆச்சி மனோரமாவின் பிறந்த நாளான இன்று அவர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் பெருமிதம் கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்