Sukumari:மறக்குமா நெஞ்சம்.. மலையாள சினிமாவின் மனோரமா சுகுமாரி நினைவு நாள் இன்று!
Actress Sukumari : பழம்பெரும் திரைப்பட நடிகையும், மறைந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் மனைவியுமான சுகுமாரி நினைவு நாளான இன்று அவரை நினைவு கூர்வோம்.
நடிகை சுகுமாரி 1940ஆம் ஆண்டு பிறந்தார். அண்ணாவின் திரைக்கதையில் உதித்த ஓர் இரவு என்ற படத்தில், சிறுமியாக இருக்கும்போதே நடிக்கத் தொடங்கினார். இதுதான் அவருக்கு முதல்படம். அப்போது சுகுமாரிக்கு 11 வயது. இதைத் தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் அதிகம் வந்தது.
நல்ல அம்மாவாகவும் நடிப்பார்.வில்லி மாமியாராகவும் நடித்தார்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிப்பார். இந்த சமயத்தில் மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன. நல்ல நல்ல கேரக்டர்களாக அமைந்தன. சுகுமாரி தனது 19ஆவது வயதில் 1959ல் இயக்குநர் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார்.
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலான ஆறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று அப்படியே நடிப்பார். இதனால் மலையாளப் படவுலகில், எந்த இயக்குநர் படமெடுத்தாலும் முதலில் புக் செய்வது சுகுமாரியைத்தான். கதை பண்ணும்போதே, சுகுமாரிதான் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து, அவரின் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள்.
நம்மூரில் காமெடியாகவும், குணச்சித்திரமாகவும் பன்முகங்களுடன் நடித்த மனோரமா, எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தியது போல், அங்கே சுகுமாரியைச் சொல்லுவார்கள்.
அதனால் தான், மலையாள சினிமாவின் மனோரமா என்று கொண்டாடியது கேரளத் திரையுலகம். இவர் பட்டிக்காடா பட்டணமா படத்தில், ஜெயலலிதாவின் அம்மாவாக, சிவாஜியின் மாமியாராக அட்டகாசமாக நடித்திருப்பார்.
வசந்தமாளிகையில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்தார். நடிகை லட்சுமி நடித்த சட்டைக்காரி மலையாளப் படத்தில், ஆங்கில இந்தியப் பெண்மணியாக நடித்த சுகுமாரியின் நடிப்பு, எல்லோராலும் பாராட்டப்பட்டது. இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜித், தனுஷ் என முன்னனி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். அவர் இறக்கும் வரை நடித்தார்.
சுமார் 2500 படங்கள் நடித்துள்ளார். அதில் 80 சதவிகித படங்கள் மலையாள திரைப்படங்கள். கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் நடித்துவிட்டார் அவர். அவர் ஏற்று நடித்திராத பாத்திரமில்லை என்கிற அளவுக்கு நடித்துள்ளார்.
சுகுமாரி உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 26.3.2013 அன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். எனவே அவரின் நினைவு நாளான இன்று மலையாள சினிமாவின் மனோரமா சுகுமாரியைப் போற்றுவோம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்