26 Years of Iruvar: இரு துருவங்களை மறு துருவங்களாக காட்டிய படைப்பு’ என்றும் தவிர்க்க முடியாத இருவர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  26 Years Of Iruvar: இரு துருவங்களை மறு துருவங்களாக காட்டிய படைப்பு’ என்றும் தவிர்க்க முடியாத இருவர்!

26 Years of Iruvar: இரு துருவங்களை மறு துருவங்களாக காட்டிய படைப்பு’ என்றும் தவிர்க்க முடியாத இருவர்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 14, 2024 05:50 PM IST

பெரிய நட்சத்திர கூட்டத்தோடு உருவாகக்கப்பட்டிருந்த வித்தியாசமான படம். அதுமட்டுமல்ல அரசியல் பாடம் நடத்திய கதை இது.

இருவர் திரைப்படம்
இருவர் திரைப்படம்

இருவர் திரைப்படம் அரசியலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டிருந்தது. இருவர் படத்தை பொருத்தமட்டில்  இரு முக்கிய ஆளுமைகளை விவரிக்கும் இந்த படத்தில் ஆனந்தனாக மலையாள நடிகர் மோகன்லால், தமிழ் செல்வனாக நடிகர் பிரகாஷ் ராஜ், நடித்திருந்தனர். இதில் புஷ்பவல்லி மற்றும் கல்பனா வாக இரட்டை வேடத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பட்டையை கிளப்பி இருந்தார். இவர்களோடு ரேவதி, கௌதமி, தபூ, நாசர், மேஜர் சுந்தர ராஜன், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி என்று பெரிய நட்சத்திர கூட்டத்தோடு உருவாகக்கப்பட்டிருந்த வித்தியாசமான படம். அதுமட்டுமல்ல அரசியல் பாடம் நடத்திய கதை இது.

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே கொள்கையின் அடிப்படையில் இயங்கிய கலைஞர் கருணாநிதி மற்றும் எம். ஜி. ராமச்சந்திரன் ஆகியோர் திரையுலகில் நுழைந்து புகழ் பெற்ற காலம் முதல் ஆரம்பித்து அரசியல் பயணத்தை சிறப்பாக நடத்தி கொண்டிருந்த போது இருவருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டு ஒரே கொள்கைகளாக இருந்தாலும் அரசியல் பாதையில் இரு எதிரெதிர் துருவங்களாக நின்று மக்களோடு மக்களாக இருந்த இரு தலைவர்கள் வாழ்க்கை பின்னனியில் உருவாக்கிய கதை. திராவிட கொள்கைகளுக்கும் திரைப்பட துறைக்கும் உண்டான தொடர்புகளை அருமையாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

ஆனந்தன் திரைப்பட துறையில் வாய்ப்பு கேட்டு அலைந்த காலம் முதல் ஆரம்பித்து எழுத்தாளர் தமிழ் செல்வன் ஆதரவு காட்டுகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் அந்தஸ்து க்கு உயர்ந்து மக்களின் அபிமானம் பெறுகிறார். 

இன்னொரு பக்கம் தமிழ் செல்வனின் புரட்சி கர வசனங்கள் மக்களின் ஈர்ப்பையும் மக்களின் மத்தியில் நல்ல அரசியல் அந்தஸ்து மிக்கவராக மாற்றுகிறது. காலச்சூழலில் தமிழ் செல்வன் ஆளும் பொறுப்பு ஏற்க கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஆனந்தன் கணக்கு கேட்க கட்சிக்குள் கொந்தளிப்பு ஏற்படுகிறது. நீக்கம் செய்யப்பட்ட ஆனந்தன் தனியாக கட்சி ஆரம்பித்து மகத்தான மக்கள் செல்வாக்கோடு வெற்றி பெறுகிறார். ஆனந்தன் காலமான போது கூட அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் போகிறது. இப்படி அந்த கால அரசியல் கதைக்குள் இருவருக்கும் இடையில் உள்ள சுவாரஸ்யங்கள்.. இருவர் வாழ்க்கை யிலும் காதல்.. ஜெயலலிதா பிரவேசம் என்று அரசியல் சம்பவங்களை வரிசையாக கோர்த்திருப்பார் மணிரத்னம்.

இந்த படம் பல சர்ச்சை களையும் ஏற்படுத்தியது. எம். ஜி. ஆர். காலமாகி பத்து ஆண்டுகள் கழித்து இந்த படம் வந்தது. இரு தேசிய விருதுகள் துணை நடிகராக பிரகாஷ் ராஜ், சிறந்த ஒளிப்பதிவு க்காக சந்தோஷ் சிவனும் பெற்றனர்.

இருவர் திரைப்படத்தை பொறுத்த மட்டில் கலை இயக்குனரையும் பாராட்ட வேண்டும். அந்த காலங்களில் உள்ளது போலவே செட்கள் அமைக்கப்பட்டு படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது. அதுவே படத்திற்கு ஒரு வித ஈர்ப்பை தந்தது எனலாம்.

அதேபோல் உடைகள் விசயத்திலும் அந்த கால உடைகளை பயன்படுத்தி இருப்பார்கள். அதுவும் போக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர்களது வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகரும் போதெல்லாம் மணியோசை ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஒலிப்பது போல இயக்குனர் காட்சிகளை அமைத்து இருப்பார். சந்தோஷ் சிவன் காமிராவில் காட்சிகள் பார்ப்பதற்கு பரவசமூட்டும். படத்தில்  உலக அழகி ஐஸ்வர்யா ராயை சந்தோஷ் சிவன் தனது கேமரா கண்ணில் மேலும் மெரூ கூட்டி இருந்தார்.

வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து இருப்பார். படத்தில் நறுமுகையே பாடலும் வெண்ணிலா வெண்ணிலா பாடலும் பெரிய அளவில் ஹிட் அடித்தன.

அதேபோல் படத்தை தணிக்கை செய்த குழுவினர் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது சிக்கல் தரும் என்பதால் பல பகுதிகளை வெட்டினர். இறுதியில் u/A சான்று தரப்பட்டது. திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி அவர்கள் படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

பல சர்ச்சைகளை தாண்டி வெளிவந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தெலுங்கு, மலையாள மொழியிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.