Actor Jai Ganesh: தமிழ் சினிமா ஹீரோயின்களின் பாசமிகு தந்தை ஜெய்கணேஷ்
Actor Jai Ganesh Death Anniversary: ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஹீரோயின்களின் அன்பான அப்பா என்றால் நினைவுக்கு வருவது ஜெயகணேஷ்தான். தமிழ் சினிமாவின் முக்கய கலைஞராக திகழ்ந்த ஜெய்கணேஷின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய சிறிய நினைவஞ்சலி.
ஒரு காலகட்டத்தில் ஹீரோக்களின் அம்மா என்ற சரண்யா பொண்வண்ணன் என்ற மைண்ட் செட் ரசிகர்கள் மனதில் இருந்தது போல், 90களில் ஹீரோயின்களின் அன்பும், பாசமும் மிகுந்த அப்பாவாக ஜெய்கணேஷ் திகழ்ந்தார்.
இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் அறிமுகளின் ஒருவர்தான் ஜெய்கணேஷ். அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் பிரதான கதாபாத்திரமான சுஜாதாவின் மூத்த சகோதரனாக தோன்றி "தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு" பாடலின் மூலம் ரசிகர்கள் மனதில் குடிபெயர்ந்தார்.
இந்த படத்துக்கு பின்னர் ஆட்டுக்கார அலுமேலு, பைலட் பிரேம்நாத், வணக்கத்துக்குரிய காதலியே, அழகே உன்னை ஆராதிக்கிறேன் என அந்த காலகட்டத்தில் வெளியான பல்வேறு ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரங்களில் தோன்று தனது நடிப்பால் முத்திரை பதித்தார்.
சில படங்களில் ஹீரோவாகவும் நடித்த இவர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அஜித், விஜய் என தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பெரும்பாலோனருடன் நடித்து விட்டார்.
வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து, தனது சினிமா கேரியரின் கிராப்பை எந்தவொரு இடத்தில் இறங்க விடாமல் பார்த்துக்கொண்டார் ஜெய்கணேஷ். வாய்க்கொழுப்பு என்ற படத்தில் வித்தியாசமாக ஏப்பம் விட்டு வில்லத்தனம் காட்டியதாகட்டும், பாக்யராஜின் ஆராரோ ஆரிராரோ படத்தில் சர்ச் பாதிரியாராக தோன்று அழுத்தமான நடிப்பை சாந்தமாக வெளிப்படுத்தியதாகட்டும், ஜெய்கணேஷின் நடிப்பு திறமைக்கு சிறந்த சான்றுகளாக உள்ளன.
எந்த ஆர்பாட்டமும் இல்லாமல், மிகவும் அமைதியான, கள்ளம் கபடம் ஏதுமில்லாமல் முழுமையான அன்பை வெளிப்படுத்தும் அப்பாவாக, தமிழ் சினிமாவில் பல ஹீரோயின்களுக்கு நடித்து அப்லாஸ் வாங்கியுள்ளார்.
சூர்யவம்சம் தேவையானி, பிரியமுடன் கெளசல்யா, உனக்காக எல்லாம் உனக்காக ரம்பா, முகவரி ஜோதிகா போன்ற கதாநாயகிகளின் பாசமிகு அப்பவாகவே திரையில் வாழ்ந்து காட்டியிருப்பார். ஹீரோயின்கள் மட்டுமின்றி சில ஹீரோக்களுக்கும் அப்பாவாக தோன்றி ரகளை செய்திருப்பார். குறிப்பாக உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கார்த்திக் அப்பாவாக காமெடி சரவெடி நிகழ்த்தியிருப்பார்.
தனது நடிப்பு திறமையை சினிமாக்களோடு நிறுத்திவிடமால் ஏராளமான சீரியல்களிலும் தோன்றி வெளிப்படுத்தியுள்ளார். மொத்தம் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெய்கணேஷ், 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
அடிக்கடி பாக்கு போடும் பழக்கம் கொண்ட இவர் வாய் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி தனது 55 வயதிலேயே இந்த உலகை விட்டு பிரிந்தார். இவரது மறைவு சினிமா உலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு, சிறந்த குணச்சித்திர நடிகனையும், ஹீரோயின்களின் பாசமிகு அப்பாவும் இழக்க வைத்தது.
டாபிக்ஸ்