HBD Dhanush: விடலை ஹீரோவாக அறிமுகமாகி லெஜண்ட் நடிகரான தனுஷ்..! தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரனுக்கு பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் விடலை ஹீரோவாக அறிமுகமாகி இன்று லெஜெண்ட் நடிகராக தன்னை தக்கவைத்துக்கொண்டவர் தனுஷ். மிஸ்டர் டி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தனுஷ் தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரனாக திகழ்கிறார்.
தமிழ் சினிமாவில் விடலை பசங்களின் வாழ்க்கை, குறும்பு, காதல் போன்ற விஷயங்களை உள்ளடக்கி இளமை துள்ளலுடன் ஒவ்வொரு காலகட்டத்தில் படம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டின் முதல் விடலை பசங்க படமாக வந்த துள்ளுவதோ இளமை படத்தில் விடலை ஹீரோவாக அறிமுகமாகி இன்று லெஜெண்ட் நடிகராக தன்னை தக்கவைத்துக் கொண்டவர் நடிகர் தனுஷ்.
நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என தனது பன்முகத்தை வெளிக்காட்டி இளைஞர்களின், விடலை பசங்களில் ரோல் மாடலாக இருந்து வருபவர் தனுஷ்.
சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் இந்தியாவின் அடையாளமாக ரஜினிகாந்த் இருந்து வருகிறார் என்றார், எந்த பட்டமும் இல்லாமல் தனுஷ் என்ற பெயரில் இந்தியாவை உற்று நோக்கும் நடிகராக உருவெடுத்திருப்பதே தனது 20 ஆண்டுகள் சினிமா கேரியரில் தனுஷ் நிகழ்த்திய மிகப் பெரிய சாதனையாகும்.
சினிமா குடும்பம்
அப்பா மிக பெரிய இயக்குநர் என டேக்லைன் தனுஷுக்கு இருந்தபோதிலும், சினிமா குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அந்த சாயல் எப்போதும் இல்லாமல் தனது திறமையால் தனக்கென இடத்தை பிடித்த நடிகர்களில் முக்கியமானவராக தனுஷ் உள்ளார்.
துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கிய இவரது நடிப்பு பயணம் தற்போது இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ராயன் படம் மூலம் 50 என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. தமிழ் சினிமாவில் 50 படங்களை பூர்த்தி செய்த நடிகர்களில் ஒருவர் என்ற பெருமையும் தனுஷ் பெற்றுள்ளார்.
தனுஷ் சந்தித்த விமர்சனங்களும், அவமானங்களும்
ஆரம்பத்தில் கவர்ச்சி படங்களை நம்பி தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் நடிகர் தனுஷ். அதற்காக விமர்சனங்களையும் அவர் சந்தித்தார். இளைஞர்களை சீரழிக்கிறார் என்றெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் விழுந்தது. கதையின் நாயகனாக தன்னை மாற்றிக் கொள்ள தனுஷ் எடுத்துக் கொண்ட காலம், பெரிது. ஆரம்பத்திலேயே இளைஞர்களை குறி வைத்து நகர்ந்து வந்த தனுஷ், தன் உருவத்துக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தான் முதலில் தேர்வு செய்தார்.
இதன் விளைவாக தனக்காக ஒரு படம், தன் ரசிகர்களுக்காக ஒரு படம் என இரு ஜானரில் இரட்டை குதிரை சவாரி செய்து கொண்டிருக்கிறார் தனுஷ். தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிக்கு அடுத்ததாக ஹாலிவுட்டிற்கு போன இரண்டாவது ஹீரோ தனுஷ் தான். இந்திய சினிமாவில் மட்டுமின்றி, ஹாலிவுட் வரை கோலோச்சியவர் தனுஷ்
தனுஷின் வெற்றி படிக்கட்டாக அமைந்த இயக்குநர்கள்
தனுஷிடம் இருக்கும் நடிப்பு திறமை வெளிக்கொண்டு வந்ததில் பெரும்பங்கு வகித்தவர் அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன். தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை தொடங்கி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என தனுஷின் திறமையை மாறுபட்ட பரிணாமத்தில் வெளிக்கொண்டு வந்தார். தனுசும் அவ்வாறே மெல்ல மெல்ல தன்னை ஒரு தேர்ந்த நடிகனாக தக்கவமைத்து கொண்டார்.
இயக்குநர் வெற்றிமாறன் வெற்றியில் சரி பாதி தனுஷுக்கு உண்டு. பொல்லாதவன் படத்தில் தொடங்கிய இவர்கள் பயணம் அசுரனாக வெறியாட்டம் கண்டது. வெற்றிமாறனின் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்தவர் தனுஷ் என்பதை வெற்றிமாறனே ஒப்புகொள்வார். அந்த அளவுக்குகு கதையின் நாயகனாகவே அவர் முழுதாக மாறினார்.
இவர்கள் இருவர் மட்டுமல்லாமல், இவர் பணியாற்றிய அனைத்து இயக்குநர்களிடமும் ஒரு சிறந்த நடிகனாக தன்னை ஒப்படைந்த முழு கலைஞனாக திகழ்ந்தார்.
விருதுகளும், கெளரவமும்
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய நடிகர்களில் லிஸ்டில் ஒருவராக இருந்து வருகிறார். தனுஷ். அதிலும் இரண்டு முறை அவர் தேசிய விருதை வென்றிருப்பது கூடுதல் சிறப்பாகவே உள்ளது.
14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள் என விருதுகளின் நாயகனாகவே இருந்துள்ளார்.
இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரனாகவும், மிஸ்டர் டி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்