HBD Suresh Krissna: நடிகர் அஜித் படத்தை இயக்க திட்டமிட்டிருந்த சுரேஷ் கிருஷ்ணா.. ஆனால் நடந்தது என்ன தெரியுமா?
Actor Ajith Kumar: வீரா படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் இணைந்து பாட்ஷா படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பெரும் வெற்றிப் படமாக அமைந்த அவர் நடிப்பில் அவருக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றான பாட்ஷா படத்தை இயக்கியவர்.
ரஜினிக்கு பாட்ஷா, அண்ணாமலை ஆகிய இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கினார் சுரேஷ் கிருஷ்ணா.
இவரது முதல் படம் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1988ம் ஆண்டு ஆண்டு வெளியான சத்யா. அதன்பிறகு தெலுங்கு படங்களை இயக்கிய இவர், தமிழில் ராஜா கைய வெச்சா படத்தை இயக்கினார். பின்னர் ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களை இயக்கிவிட்டு, தமிழில் அண்ணாமலை படத்தை எடுத்தார்.
பின்னர், சரத்குமாரை வைத்து வேடன், ஆக்ஷன் கிங் அர்ஜுனை வைத்து ரோஜாவை கிள்ளாதே, மீண்டும் ரஜினியை வைத்து வீரா ஆகிய படங்களை இயக்கினார்.
வீரா படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் இணைந்து பாட்ஷா படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
ரஜினிகாந்தின் நான்கு படங்களை இவர் இயக்கியிருக்கிறார். கடைசியாக ரஜினியுடன் இவர் இணைந்து பணியாற்றிய படம் பாபா.
மும்பையில் 1959ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்த சுரேஷ் கிருஷ்ணா, பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து எல்.வி.பிரசாத் நிறுவனத்தில் கணக்கு மேலாண்மை பிரிவில் பணியில் சேர்ந்தார்.
அதே நிறுவனத்தில் நிர்வாக உதவியாளரானார். எல்.வி.பிரசாத் நிறுவனம் தயாரித்த ஏக் தூஜே கே லியே படத்தை கே.பாலச்சந்தர் இயக்கினார்.
அப்போது லொக்கேஷன் பிரிவில் சுரேஷ் கிருஷ்ணா உதவியளராக இருந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் கே.பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1984ம் ஆண்டு வெளியான அச்சமில்லை அச்சமில்லை படத்தில் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்தார்.
சன்னி தியோல் நடிப்பில் ஹிந்தியில் வெற்றி பெற்ற அர்ஜுன் படத்தை தான் தமிழில் சத்யா என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்தப் படத்தில் கமல் ஹாசன் நாயகனாக நடித்திருந்தார்.
அண்ணாமலை படம் 175 நாட்கள் ஓடி பாக்ஸ் ஆபிசில் கல்லா கட்டியது. பின்னர் பாட்ஷா படம் அந்தச் சாதனையை முறியடித்தது.
நடிகர் அஜித் குமாரை கதாநாயகனாக வைத்து வாமனா என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்தப் படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
நடிகர் அஜித்தை வைத்து பாட்ஷா 2-ம் பாகத்தை இவர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.
ஆனால், அவர்களின் கூட்டணி இன்னும் இணையாமலே இருக்கிறது. தொலைக்காட்சி தொடர்களையும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.
இந்திய சினிமாவில் தனி முத்திரை பதித்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்!
டாபிக்ஸ்