Vanangaan: வணங்கான் ஷூட்டிங்கில் பஞ்சாயத்து.. நடிகைக்கு அடி உதை
வணங்கான் படப்பிடிப்பில் துணை நடிகை தாக்கப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைகளைக் கொடுப்பவர் இயக்குநர் பாலா. இவர் வர்மா படத்திற்கு பிறகு தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
முதலில் இதில் நடிகர் சூர்யா நடிப்பதாக 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. சூர்யாவின் 2டி நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கும் என சொல்லப்பட்டது.
ஆனால் படப்பிடிப்பில் சூர்யாவுக்கும், பாலாக்கும் இடையே மோதல் நடந்ததாக கூறப்பட்டது. அது உண்மையில்லை என சூர்யா தரப்பு மறுத்தாலும், டிசம்பர் 4 ஆம் தேதி வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
கதையில் நடந்த சில மாற்றங்களால் சூர்யா, வணங்கான் படத்திலிருந்து விலகியதாக இயக்குநர் பாலா அறிக்கை வெளியிட்டிருந்தார். இருப்பினும் இந்த படம் எடுக்கப்படும் என்றார்.
அதன்படி இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய்யும், ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டிக்கு பதிலாக ரோஷினி பிரகாஷூம் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு துணை நடிகர், நடிகைகளை படத்தில் நடிக்க அழைத்து வந்து உள்ளார்.
இதில் துணை நடிகை லிண்டாவும் ஒருவர். இப்படி வந்த 9 துணை நடிகர், நடிகைகளுக்கு 3 நாட்கள் நடிப்பதற்குச் சம்பளமாக 22 ஆயிரத்து 600 ரூபாய் பேசப்பட்டது.
ஆனால் பேசிய படி ஜிதின் சம்பளம் கொடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனைக் கேட்கப் போன லிண்டாவை அவர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதில் லிண்டாவிற்கு கன்னத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் உடனே கன்னியாகுமரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார். இச்சம்பவம் வணங்கான் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்