29 Years of Puthiya Mannargal: அரசியலில் புரட்சிக்கான விதை.. புதிய மன்னர்கள்!
புதிய மன்னர்கள் திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

புதிய மன்னர்கள் திரைப்படமானது டிசம்பர் 2 1994ஆம் ஆண்டு உலகமெங்கும் ரிலீஸானது. இப்படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது எனலாம். இப்படத்தை விக்ரமன் இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
படத்தின் கதை என்ன? இப்படத்தில் கல்லூரியில் படிக்கும் சத்யமூர்த்தி (விக்ரம்), வித்யா(மோகினி), ஆராய்ச்சி அரிஆனந்தம் (விவேக்), பப்லு பிரிதிவிராஜ், ஸ்ரீமன், தாமு மற்றும் சில நண்பர்கள் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இதில் சத்யமூர்த்தி கல்லூரியின் சேர்மன் தேர்தலில் வெற்றிபெறுகிறார். பின், இந்த மாணவர்களில் ஒருவர் முதலமைச்சர் ஆன தமிழ்மகன்(வினுச் சக்கரவர்த்தி)செல்லும் வாகனத்தின் கான்வாயை இடைமறித்ததால் அரசியல் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். அதை அருகில் இருந்து பார்க்கும் வித்யா(மோகினி), தனது மாமன் பாண்டியனுடன் (பாபு கணேஷ்)திருமணம் செய்ய முயற்சிக்கையில் வன்புணர்வு செய்யப்பட்டு அரசியல் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். மேலும் அச்சம்பவத்தின்போது பாண்டியனும் கொல்லப்படுகிறார். இதில் அவரது சக கல்லூரி நண்பர்கள் கொதித்து எழுகின்றனர். அதில் சத்யமூர்த்தி(விக்ரம்) என்னும் கல்லூரி மாணவர் தலைவர், தனிக்கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்கிறார். அதற்கு அவரது கல்லூரி நண்பர்கள் பக்கபலமாக இருக்கின்றனர். இறுதியில் பல கட்டப்போராட்டங்களுக்குப் பிறகு, இளைஞர் படை தமிழ்நாட்டை ஆளத் தகுதி பெறுகிறது. சத்யமூர்த்தி(விக்ரம்) முதலமைச்சர் ஆகி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமாகப் பேசிவிட்டு வெளியில் வரும்போது படம் முடிகிறது.
இப்படத்தில் மாணவ இளைஞர்களை அரசியலை நோக்கி மடைமாற்றும் நபராக கொல்லப்படும் வித்யாவின் தந்தை டெல்லி கணேஷ் நடித்துள்ளார். அமைச்சராக எஸ்.எஸ். என்னும் கதாபாத்திரத்தில் எஸ்.எஸ்.சந்திரன் நடித்து இருக்கிறார்.
