HBD Ineya: 'வாகை சூட வா’ மதி முதல் 'ரைட்டர்’-ல் அதிகாரத்துக்கு எதிரான சரண்யா வரை.. கலக்கும் நடிகை இனியாவின் கதை!
நடிகை இனியாவின் பிறந்த நாள் தொடர்பான சிறப்புக்கட்டுரை இதோ..
கேரள மாநிலம் தமிழகத்திற்குப் பரிசளித்த அற்புத நடிகைகளில் ஒருவர், இனியா. இவர் தமிழில் இயக்குநர் ’வாகை சூட வா’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகை விருதைப் பெற்றவர்.
யார் இந்த நடிகை இனியா?இனியாவின் இயற்பெயர் ஸ்ருதி சாவந்த். இவர் சலாவுதீன் மற்றும் சாவித்திரி தம்பதியருக்கு ஜனவரி 22ஆம் தேதி திருவனந்தபுரத்தில் மகளாகப் பிறந்தார். இவரது தம்பியின் பெயர் ஸ்ரவன். இனியா தனது பள்ளிப்படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா, ஃபோர்ட் கேர்ள்ஸ் மிஷன் உயர் நிலைப்பள்ளி மற்றும் மணக்காடு கார்த்திகா திருநாள் உயர்நிலைப் பள்ளிகளுக்குச் சென்றார். பின், பி.பி.ஏ இளங்கலை பட்டம் முடித்துள்ளார்.
நடிப்பு வாழ்க்கையில் இனியா: இனியா சிறுவயது முதலே டிவி சீரியல், டெலிஃபிலிம்கள், குறும்படங்களில் நடித்து வருகிறார். இனியா நான்காம் வகுப்பு படிக்கும்போது, கொட்டிலேக்கு என்னும் டெலிஃபிலிமில் நடித்தார். பின், ஓர்மா, ஸ்ரீகுருவாயூரப்பன் ஆகிய டிவி சீரியல்களிலும் நடித்தார். 2005ஆம் ஆண்டு, இனியா ‘மிஸ் திருவனந்தபுரம்’ விருதை வென்றவர். அதன்பின் கிடைத்த வாய்ப்புகளை வைத்து மாடலிங்கிலும் நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் கிடைத்த அறிமுகம்: இனியா 2010ஆம் ஆண்டு ஜெ.தமிழ் என்பவரது இயக்கத்தில் 'பாடகசாலை’என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். பின் அதே ஆண்டு ’யுத்தம் செய்’ என்னும் படத்தில் சாரு என்னும் சிறுகதாபாத்திரத்தில் நடித்தார். பின் 2011ஆம் ஆண்டு, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் நடித்த ‘வாகை சூட வா’ இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. 1970களில் கல்வியறிவு அற்ற செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கிராமத்தில், தேநீர் கடை நடத்தும் மதி கதாபாத்திரத்தில் சின்ன சின்ன நளினங்களில் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். இப்படத்தில் நடித்தமைக்காக தமிழ்நாடு அரசின் மாநில விருது, ஃபிலிம்பேர் விருது, அறிமுக நடிகைக்கான எடிசன் விருது எனப் பல விருதுகளைப் பெற்று குவித்தார், இனியா. அதன்பின் சாந்தகுமார் இயக்கத்தில், அருள்நிதியின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘சாந்தகுரு’ படத்தில் ஒரு மிடில் கிளாஸ் காதலியாக நடித்து கவனம் ஈர்த்தார்.
அடுத்து தமிழின் முக்கிய இயக்குநரான தங்கர்பச்சானின் இயக்கத்தில், ‘அம்மாவின் கைப்பேசி’படத்தில் நடித்தார். அடுத்து மலையாளத்தில் ஹிட்டடித்த ‘டிராஃபிக்’ படத்தின் ரீமேக்கான ‘சென்னையின் ஒருநாள்’ படத்தில் ஸ்வேதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2013ஆம் ஆண்டு மலையாளத்தில் மூத்த நடிகரான லாலுக்கு, அயல் என்னும் படத்தில் இரண்டாம் மனைவியாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையிலான நெருக்கமான காட்சிகள் பலவும் பேசப்பட்டன. அப்போது அவருக்கு வயது 23.
பின் சரியான ஒரு வெற்றிப்படம் இல்லாமல் தவித்த இனியாவுக்கு, மலையாளத்தில் மெகாஸ்டார் மம்மூட்டியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, பரோல் படம் மூலம் கிடைத்தது. இதில் அவருக்கு கேரள அரசின் விமர்சன விருது வழங்கப்பட்டது.
அதேபோல், 2021ஆம் ஆண்டு பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘ரைட்டர்’ என்னும் படத்தில் கதையின் போக்கினை மாற்றும் சரண்யா என்னும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார், இனியா. பின் ஆதார் என்னும் படத்திலும் சரோஜா என்னும் ரோலில் மிரட்டியிருந்தார். அண்மையில் இவர் விமலுடன் சேர்ந்து நடித்து இருந்த ‘விலங்கு’ வெப் சீரிஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இப்படி தமிழ் மற்றும் மலையாளத்தில் எந்தவொரு ஈகோவும் இல்லாமல், தான் ஒரு நல்ல நடிகை என்பதை மட்டுமே நிரூபிக்கப் போராடும், நடிகை இனியாவுக்குப் பிறந்த நாள். அவரை வாழ்த்துவதில் பெருமிதம்கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்