HBD Bhagyaraj: டபுள்மீனிங் பட டைட்டில்.. சின்ன பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த பாக்யராஜின் பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Bhagyaraj: டபுள்மீனிங் பட டைட்டில்.. சின்ன பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த பாக்யராஜின் பிறந்தநாள் இன்று!

HBD Bhagyaraj: டபுள்மீனிங் பட டைட்டில்.. சின்ன பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த பாக்யராஜின் பிறந்தநாள் இன்று!

Marimuthu M HT Tamil
Jan 07, 2024 07:11 AM IST

இயக்குநர் பாக்யராஜின் பிறந்த நாள் தினம் குறித்த சிறப்புக் கட்டுரையினைப் பார்ப்போம்.

இயக்குநர் பாக்யராஜின் பிறந்த நாள் தின சிறப்புப் பகிர்வு
இயக்குநர் பாக்யராஜின் பிறந்த நாள் தின சிறப்புப் பகிர்வு

யார் இந்த பாக்யராஜ்? ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள வெள்ளன்கோயில் என்னும் குக்கிராமத்தில் கிருஷ்ணசாமி - அமராவதி அம்மாள் தம்பதியருக்கு 1953ஆம் ஆண்டு, ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர் தான், கே.பாக்யராஜ். செல்வராஜ், தன்ராஜ் ஆகிய இருமகன்களுக்குப் பின் மூன்றாவதாகப் பிறந்தவர்.  இவர் ஆரம்பத்தில் தனது படங்களில் துணைவேடத்தில் நடித்த பிரவீணாவை திருமணம் செய்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பின், அப்போது உச்ச நடிகையாக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்துகொண்டார். இந்த தம்பதியருக்கு சரண்யா - சாந்தனு ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

திரை வாழ்வு தந்த ஏற்றம்: ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் ஒரு பெரிய இயக்குநராக வேண்டும் என்னும் முனைப்பில் சென்னைக்குக் கிளம்பிய கே.பாக்யராஜ், பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தார். பின் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வசனம் எழுதிய பாக்யராஜ், பாரதிராஜா எழுதி இயக்கிய ’புதியவார்ப்புகள்’ படத்துக்கு வசனம் எழுதியதோடு, அதே படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகம் ஆனார்.

1979ஆம் ஆண்டு ’சுவர் இல்லாத சுத்திரங்கள்’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ், தனது வித்தியாசமான திரைக்கதை மூலம் ஹிட்டடித்தவர். அதன் பின் 1981ஆம் ஆண்டு வெளியான ‘மெளன கீதங்கள், இன்று போய் நாளை வா’ ஆகியப் படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. இதில் 'இன்றுபோய் நாளை வா' திரைப்படம்,சந்தானம் ஹீரோவாக நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூல வெர்ஷன் ஆகும். பின், பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘விடியும் வரை காத்திரு’ என்னும் நல்ல கிரைம் திரில்லராக இருந்து வெற்றிபெற்றது.

அதன்பின் இயக்குநர் பாக்யராஜ் இயக்கி நடித்த, ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாலக்காடு மாதவன் கதாபாத்திரமும், அம்பிகாவை காதலிக்கும் பாக்யராஜ் காட்சிகளும் இன்றளவும் பேசப்படுபவையாக இருக்கின்றன. பின் 1984ல் பாக்யராஜ் இயக்கி, நடித்து, தயாரித்து வெளியான திரைப்படம் தான், ‘தாவணிக் கனவுகள்’. இப்படத்தில் 5 தங்கைகளை கஷ்டப்பட்டு கரைசேர்க்கத் துடிக்கும் அண்ணன் கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருப்பார். அவரது ஹவுஸ் ஓனராக சிவாஜி கணேசன் நடித்திருப்பார். அதிலும், சென்னை சென்றபின் பாக்யராஜ் எழுதிய லெட்டரை, போஸ்ட்மேன் படித்துக் காட்டும் காட்சிகள் காமெடியானவை.

அதேபோல் 30 லட்சம் ரூபாயில் எடுத்த முந்தானை முடிச்சு திரைப்படம், 25 வாரங்களுக்கும் மேல் திரையில் ஓடி சுமார் மூன்று கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தந்ததாம். அதற்குக் காரணம், இப்படத்தில் இருந்த காமெடி காட்சிகளும் திரைக்கதையும் தான் காரணம் ஆகும். அதேபோல் சின்ன வீடு, எங்க சின்ன ராசா, டார்லிங் டார்லிங் டார்லிங், ராசுக்குட்டி எனப்பல ஹிட் படங்களைத் தந்த பாக்யராஜ் நடிகராகவும் தற்போதுவரை ஜொலித்து வருகிறார்.

பாக்யராஜின் டபுள் மீனிங் டைட்டில்கள்:  பாக்யராஜ் திரைக்கதைக்குப் பெயர் போனவர் என்று கூறப்பட்டாலும் இளைஞர்களைக் கவரும் வகையிலான ஆபாச நெடியுடன் கூடிய காமெடி, டபுள் மீனிங் பட டைட்டில்கள் மூலமும் ஹிட்டடித்தவர்.

அப்படி அவரின் சில சினிமா டைட்டிகள் இதோ.. விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு, இது நம்ம ஆளு, வீட்டுல விஷேசங்க, ஞானப்பழம் ஆகியவை சில உதாரணங்கள் ஆகும். 

அரசியலும் இலக்கியமும்: எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு என, எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கப்பட்ட கே.பாக்யராஜ், அவரது மறைவுக்குப் பின்,  எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி படுதோல்வியைச் சந்தித்தார். பின் அதிமுகவில் பயணித்த பாக்யராஜ், 2006ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முன் திமுகவில் இணைந்தார். தற்போது சில மாதங்களுக்கு முன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துகொண்டார், பாக்யராஜ். பின், 1988ஆம் ஆண்டு முதல் பாக்யா என்னும் வார இதழ் ஒன்றினை நடத்தி வருகிறார்.

இப்படி நடிப்பு, அரசியல், இலக்கியம், இயக்கம் எனப் பரிணமித்த இயக்குநர் பாக்யராஜ் இன்று தனது 71ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.