நடிப்பு, அரசியல், சமூகப்பணி! பல்துறை வித்தகி நடிகை செளந்தர்யா நினைவு தினம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிப்பு, அரசியல், சமூகப்பணி! பல்துறை வித்தகி நடிகை செளந்தர்யா நினைவு தினம்

நடிப்பு, அரசியல், சமூகப்பணி! பல்துறை வித்தகி நடிகை செளந்தர்யா நினைவு தினம்

Priyadarshini R HT Tamil
Apr 17, 2023 07:29 PM IST

Actress Soundarya Death Anniversary: 90களின் சிறந்த நடிகையாக திகழ்ந்த நடிகை சௌந்தர்யாவின் நினைவு தினம் இன்று. தமிழில் கொஞ்சம் படங்களே நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா தனியிடம் பிடித்தவர். அவரது நினைவு நாளில் நடிகை சௌந்தர்யாவுக்கு நினைவை ஏந்துவோம்.

நடிகை சௌந்தர்யா நினைவு தினம்
நடிகை சௌந்தர்யா நினைவு தினம்

இவர் ஒரு கன்னட பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர். அவரது தந்தை கே.எஸ்.சத்யநாராயணா கன்னட சினிமா எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். எம்பிபிஎஸ் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு அவர் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். 1976ம் ஆண்டு ஜீலை 16ம் தேதி பிறந்தவர். அவர் 2003ம் ஆண்டு ரகு என்ற மென்பொறியாளரை திருமணம் செய்துகொண்டார்.   

1992ம் ஆண்டு கன்னட படத்தில் அறிமுகமானார். அங்கிருந்து தெலுங்கில் நடிக்க துவங்கினார். தெலுங்கு சினிமா வரலாற்றிலே சிறந்த நடிகையாக போற்றப்பட்டார். முன்னாள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சாவித்திரிக்கு பின்னர் அவர் அளவுக்கு புகழ்பெற்ற தெலுங்கு நடிகையாக இருந்தார். இவர் தமிழில் 1993ம் ஆண்டு பொன்னுமணி என்ற படத்தில் அறிமுகமானார். அந்தப்படத்தில் நடிகர் கார்த்திக்குக்கு ஜோடியாக நடித்தார். அந்தப்படத்தில் இவர் மனநலன் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் ஆழமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்தப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா’ என்ற பாடல் இப்போதும் சிறந்த 90களின் பாடல்கள் பட்டியலில் இடம்பெற்ற பாடல். 

அருணாச்சலம் படத்தில் இவர் ரஜினியுடன் நடத்திருப்பார். அதிலும் துடுக்கான பெண்ணாக ‘மாத்தாடு, மாத்தாடு மல்லிகே’ என்ற பிரபலமான பாடலில் சிறப்பான தனது நடனத்தை வெளிப்படுத்தியிருப்பார். பின்னர் நடிகர் கமலஹாசனுடன் இணைந்து காதலா காதலா என்ற படத்தில் நடத்திருப்பார். பிரபு தேவா, ரம்பா என அந்தப்படம் சிறந்த நகைச்சுவை படமாக இருக்கும். 1999ம் ஆண்டில் மீண்டும் நடிகர் ரஜினி காந்துடன் படையப்பா படத்தில் வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக நன்றாக நடித்திருப்பார். அந்தப்படத்தில் நடிப்பு சூறாவளி ரம்யா கிருஷ்ணனுக்க டஃப் கொடுத்து நடித்திருப்பார். 2001ம் ஆண்டு தவசி படம், 2003ம் ஆண்டு சொக்கத்தங்கம் ஆகிய இரு படங்களிலும் விஜயகாந்துடன் நடித்திருப்பார். ’உன்ன நெனச்சேன்’ பாடலும் புகழ்பெற்ற தமிழ் சினிமா பாடல். 

தமிழில் குறைந்தளவு படங்களே நடித்திருந்ததாலும், தமிழின் அன்றைய முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர். தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் தனது நிறைவான நடிப்பால் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். 

இவர் திவீப்பா என்ற கன்னட படத்திற்கு தயாரிப்பாளராக சிறந்த படத்திற்கான விருது பெற்றுள்ளார். இவர் மூன்று நந்தி விருதுகள், இரண்டு கர்நாடக மாநில விருதுகள் மற்றும் 6 ஃபிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் நடித்துள்ளார். சூர்யவம்சம் படத்தின் இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் சீரியலில் தலைகாட்ட துவங்கிய வேளைகளில், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதனால் அவரால் நடிப்பை தொடர முடியவில்லை. கோலாரில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் அனாதை குழந்தைகளுக்காக மூன்று பள்ளிகளை துவங்கியுள்ளார். 

நடிகை, சமூகப்பணி, அரசியல் என கலந்துகட்டி கலக்கிக்கொண்டிருந்த சௌந்தர்யாவின் வாழ்வில் 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பெருந்துயர் நிறைந்த நாளாக மாறியது. பெங்களுரூவில் இருந்து அவரது சகோதரர் அமர்நாத்துடன் விமானத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது ஏற்பட்ட எதிர்பாராத விமான விபத்தில் இறந்தார். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது இந்த துயர சம்பவம் அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அவர் இறந்த பின் அவரின் சமூக சேவைப்பணிகளை அவரது தாயார் மஞ்சுளா அமர்சௌந்தர்யா என்ற பெயரில் செய்து வருகிறார்.  

நடிகை சௌந்தர்யாவை அவரது நினைவு நாளில் நினைவு கூர்வதில் ஹெச்.டி தமிழ் பெருமிதம் கொள்கிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.