61 Years of Bale Pandiya: இரண்டு நடிப்பு ஜாம்பவான்கள் நிகழ்த்திய காமெடி தர்பார் - உலக சாதனை புரிந்த சிவாஜி கணேசன்
நடிப்பு திலகம் சிவாஜி கணேசன் வெறும் 11 நாளில் ட்ரிபிள் ஆக்டிங்கிலும், எம்ஆர் ராதா டபுள் ஆக்டிங்கிலும் நடித்து இருவரும் இணைந்து காமெடி தர்பார் நடத்திய படம் பலே பாண்டியா
பிளாக் அண்ட் ஒயிட் சினிமாக்களில் வெளிவந்த முழு நீள காமெடி படங்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பிய படம் பலே பாண்டியா. தமிழ் சினிமாவில் 1960களில் இரு துருவங்களாக எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் இருந்தனர். எம்ஜிஆரின் படங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக ஜனரஞ்சமாக இருக்குமென்றால், சிவாஜி கணேசனின் படங்கள் காதல், காமெடி, பேமிலி டிராமா போன்ற வகையறாக்களிலும், இவை அனைத்தும் கலந்து அமைந்திருக்கும்.
காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பல படங்களில் சிவாஜி கணேசன் நடித்திருந்ததாலும், ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு சமகால நடிகர்களுடன் கூட்டணி வைத்து சிரிக்க வைத்திருப்பார்.
அந்த வகையில் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களிலும், அப்போது வில்லன் நடிகராக மிரட்டி வந்த எம்ஆர் ராதா இரட்டை வேடங்களில் நடித்த பலே பாண்டியா சிறந்த காமெடி படமாக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இன்சூரன்ஸ் பணத்துக்காக நடத்தப்படும் ஆள்மாறாட்டம், கொலை திட்டம் என ஒன்லைன் கொண்ட படத்தின் கதையில் சிவாஜி கணேசன் - எம்ஆர் ராதா இணைந்து காமெடி தர்பார் நடத்தியிருப்பார்கள். சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குநரான பிஆர் பந்தலு இந்தப் படத்தை இயக்கியிருப்பார்.
அமெரிக்க டிரிப் செல்வதற்கு முன் இந்த படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமான சிவாஜி கணேசன் வெறும் 11 நாள்களில் தனது மூன்று கதாபாத்திரங்களையும் நடித்து கொடுத்துவிட்டார். இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. மொத்த படமுமே 15 நாள்களில் படமாக்கப்பட்டது.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக சிவாஜி கணேசன் - எம்ஆர் ராதா Face off பாடலாக இருக்கும் மாமா மாப்ளே பாடல் இன்றளவும் அதிகமாக விரும்பி கேட்கப்படும் கிளாசிக் பாடலாக உள்ளது.
படத்தின் திரைக்கதை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறை வைக்காமல் சிறந்த காமெடி பிளாக் அண்ட் ஒயிட் காமெடி படமாக இருந்து வரும் பலே பாண்டியா வெளியாகி இன்றுடன் 61 ஆண்டுகள் ஆகிறது.
டாபிக்ஸ்