Sirkazhi Govindarajan Birthday: தெய்வீக குரலோன் சீர்காழி கோவிந்தராஜன்!
தமிழ்மொழியின் தெய்வீக குரல் என்றால் அது சீர்காழி கோவிந்தராஜனின் குரல் தான் என்று கூறினால் அது மிகையாகாது.
விநாயகனே வினை தீர்ப்பவனே என்ற பாடல் கேட்டாலே உடனே நினைவுக்கு வருவது சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் தான். பாடகர்கள் பல பேர் இருந்தாலும் தெய்வீக குரல் கொண்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அதில் முதலிடத்தில் வகிப்பவர் சீர்காழி கோவிந்தராஜன்.
ஆழ் மனதில் இருக்கும் ஆன்மீகத்தைத் தட்டி எழுப்பக்கூடிய குரல் கொண்டவர் சீர்காழி கோவிந்தராஜன். சிறுவயது முதலில் இசை மீது ஆர்வம் கொண்ட அவர் பாடல்கள் ஒலிக்கும் இடமெங்கும் சென்று அங்கு அதனைக் கேட்டுக் கொண்டிருப்பாராம்.
ஒருமுறை கேட்டால் எந்த பாடலாக இருந்தாலும் அப்படியே பாடக்கூடிய திறமை உள்ளவர் சீர்காழி கோவிந்தராஜன். இவரின் இசை ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட அவரது தந்தை இசைப்பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்துள்ளார்.
சீர்காழி கோவிந்தராஜனின் தாய்மாமன் நாடகக் குழு நடத்தி வந்துள்ளார். அப்போது முதலே இவருக்கு நடிப்பின் மீது ஆசை வந்துள்ளது. நாடகத்தில் நடித்துக் கொண்டே பாடத் தொடங்கிய சீர்காழி கோவிந்தராஜன் பின் தேவி நாடக சபாவில் சேர்ந்து மாதச் சம்பளத்தில் நடித்து வந்துள்ளார்.
இவரது கணீர் குரலைக் கேட்ட பி.எஸ் செட்டியார் என்பவர் சீர்காழி கோவிந்தராஜனை சினிமாவிற்கு அழைத்து வந்துள்ளார். பாடுவதில் ஆர்வம் இல்லாமல் இருந்த சீர்காழி கோவிந்தராஜனைப் பாடச் சொல்லி ஒருமுறை இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் கேட்டுள்ளார்.
அவர் குரலைக் கேட்டு வியந்து போன இசையமைப்பாளர் "யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் ஆனால் உன்னைப் போல் யாராலும் பாட முடியாது இறைவன் கொடுத்த வரம் உனது குரல், இனி இசையின் மீது கவனம் செலுத்து" என வழி வகுத்துக் கொடுத்துள்ளார்.
அப்போது தொடங்கிய அவரது பாடல் பயணம் திரை இசையிலும், ஆன்மீக இசையிலும் கொடி கட்டிப் பறந்தன. கர்ணன் திரைப்படத்தில் வரும் "உள்ளத்தில் நல்ல உள்ளம்" என்ற பாடல் தற்போது வரை யாராலும் ஈடுசெய்ய முடியாத பாடலாக இருந்து வருகிறது.
திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாது ஆன்மீக பாடல்களிலும் இவரது கொடி இறங்காமல் பறந்து கொண்டே இருக்கிறது. விநாயகர் பாடல்கள் என்றாலே அது சீர்காழி கோவிந்தராஜன் தான் என்ற நிலை தற்போது வரை மாறவில்லை.
அகத்தியர் திரைப்படத்தில் அகத்தியர் கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடித்திருந்தார். தற்போது வரை அகத்தியர் என்று கூறினால் பலருக்கும் இவர் உருவமே ஞாபகத்தில் வரும். அந்த அளவிற்கு நேர்த்தியாக அந்த கதாபாத்திரத்தை நடித்திருப்பார்.
தெய்வக் குரல் கொண்ட சீர்காழி கோவிந்தராஜனின் 90ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
உன்னதமான கலைஞர்களுக்கு என்றும் அழிவில்லை என்ற வாக்குப்படி இன்றும் சீர்காழி கோவிந்தராஜன் என்ற தெய்வீக கலைஞர் நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது.
டாபிக்ஸ்