HBD Singer Krish: ஜூன் போனால் ஜூலைக்காற்றே - பாடகர் கிரிஷ் பிறந்த நாள் பகிர்வு
திரையிசைப் பின்னணிப் பாடகர் கிரிஷ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு கட்டுரை..
தமிழ் சினிமாவில் சில குரல்கள் தனித்துவமானவை. என்றும் மனதிற்குள் வட்டமடிப்பவை. நாம் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள் பல, யார் பாடினார் என்பதுகூட தெரியாமல் முணுமுணுத்திருப்போம். அப்படி ஒரு பாட்டு கலைஞர், பாடகர் கிரிஷ்.
யார் இவர்?: திருச்சியில் 12 செப்டம்பர், 1977ஆம் ஆண்டு பிறந்தார், பாடகர் கிரிஷ். இவரின் முழுமையான பெயர் விஜய் பாலகிருஷ்ணன். வங்கி ஊழியரான இவரது தந்தைக்கு, அமெரிக்காவில் பணியிட மாறுதல் கிடைக்கவே, கிரிஷின் குடும்பம் அமெரிக்கா நாட்டுக்கு புலம்பெயர்ந்தது. ஏறத்தாழ பள்ளி, கல்லூரி படிப்பை அங்கு தொடர்ந்த கிரிஷ், அங்கு சினிமாவில் நடிப்பதற்குண்டான கோர்ஸை படித்து முடித்தார். மேலும், The Cosby Show மற்றும் National Treasure: Book of Secrets (2004), போன்ற டிவி ஷோக்களில் தயாரிப்புப் பணிகளில் கிரிஷ் பணிபுரிந்தார். அதன்பின் சென்னை திரும்பிய கிரிஷ், இசையமைப்பாளர் கணேஷ் குமாரின் ஆல்பத்திலும், மேடைகளிலும் பாடிக்கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து கணேஷ் குமார், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் அவரது குரல் வளத்தைப் பற்றி சொல்ல அதன்பின் அவருக்குக் கிடைத்தது, சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பு.
மணவாழ்க்கை: பாடகர் கிரிஷ், நடிகை சங்கீதாவை திருவண்ணாமலையில் வைத்து 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு, ஷிவ்யா என்ற மகள் உள்ளார். இந்த அழகான குடும்பமும் பாடகர் கிரிஷை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.
ஹிட் பாடல்களுக்குச் சொந்தக்குரல் இவருடையது: 2006ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் வரும் 'மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே பளீச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே’ என்னும் பாடலில் ஹரிஹரனுடன் சேர்ந்து பாடி, தன் முதல் படவாய்ப்பைப் பெற்றார், பாடகர் கிரிஷ். அடுத்து 2007ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படத்தில், இன்றும் பலருக்கும் பிடித்த ’உன்னாலே உன்னாலே விண்ணாளச் செல்கின்றேன்’ பாடலை கனகச்சிதமாகப் பாடியிருப்பார், பாடகர் கிரிஷ். அடுத்து தாம் தூம் திரைப்படத்தில் 'சகியே என் இளம் சகியே, உன் நினைவுகளால் நீ துரத்துறியே’ என்னும் பாடலையும்; பீமா திரைப்படத்தில் வரும் மாஸான, 'ஒரு முகமோ.. இருமுகமோ.. முழுமுகமும் கலவரமோ வலியறியாது இவன் தேசமோ’ என்னும் பாடலையும் தனது தனித்துவமிக்க குரலால் பாடி, இன்றும் நினைவில் கூரத்தக்கவராகத் திகழ்கிறார், பாடகர் கிரிஷ். அதேபோல், வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இடம்பெற்ற அடியே கொல்லுதே, அழகோ அள்ளுதே உலகம் சுருங்குதே பாடலில் அத்தனை இளசுகளையும் தன் வசம் குரல் மூலம் கட்டியிழுத்திருப்பார், பாடகர் கிரிஷ். இவர் பாடிய பாடல்கள் பிலிம் பேர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியின் விருதினையும் கிரிஷ் பெற்றுள்ளார்.
பின் சினிமாவிலும் நடிகராகும் முயற்சியில் களமிறங்கிய பாடகர் கிரிஷ், ’புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்னும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து பல வெளிநாட்டு மேடைக்கச்சேரிகள், சுயாதீன ஆல்பம் பாடல்கள், தமிழ் சினிமா பாடல்கள் ஆகியவற்றில் பாடகராக இயங்கிவருகிறார், பாடகர் கிரிஷ்.
பல ஹிட் பாடல்களைக் கொடுத்துவிட்டு, சத்தமின்றி இயங்கி வரும் பாடகர் கிரிஷ்-க்கு இன்று பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துக் கூறுவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்