26 Years of Vallal: ரிலீஸ் சிக்கல்! சத்யராஜின் வள்ளலுக்கு உதவ முதல் ஆளாக வந்த வள்ளல் விஜயகாந்த்
ரஜினி, கமல், விஜய் காந்துக்கு அடுத்த வரிசையில் இருந்த ஹீரோக்களான பிரபு, கார்த்திக், சத்யராஜ், சரத்குமார் போன்றோர் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை தேடிப்பிடித்து நடித்து அப்படியொரு பாணியில் படம் முழுக்க சத்யராஜ் வேட்டி சட்டையுடன் தோன்றிய படம் வள்ளல்.
1990களில் முக்கிய இயக்குநராக வலம் வந்த ராஜ்கபூர் இயக்கத்தில் சத்யராஜ் தனது நண்பரின் தயாரிப்பில் நடித்த படம் வள்ளல். படத்தில் ரோஜா, மீனா, சங்கீதா என்று மூன்று கதாநாயகிகள். வில்லன் கதாபாத்திரத்தில் மணிவண்ணன். காமெடிக்கு கவுண்டமணி, செந்தில். செண்டிமென்டுக்கு மனோரமா, லட்சுமி நடிக்க முழுக்க கிராமத்து கதை களத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட்டடித்து நல்ல வசூலையும் பெற்றது.
காதலிக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த வள்ளல் என்பதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன். காதலி பெற்றெடுக்கும் குழந்தையை அவர் இறந்துபோன பின்னர் தனது மகளாக வளர்க்கும் சத்யராஜின் பாசம் போராட்டம் காமெடி, செண்டிமென்ட், எமோஷன் போன்ற இத்யாதி காட்சிகளுடன் ரசிக்கும் வைக்கும் விதமாக இருந்த இந்த படம் சத்யராஜின் மாஸ் ப்ளஸ் க்ளாஸ் நடிப்புக்கான சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது.
இளம் பெண்ணன் தந்தை, ப்ளாஷ்பேக்கில் குறும்புத்தனத்துடன் ரோஜாவை விரட்டி காதலிக்கும் இளைஞர் என இரு விதமான கதாபாத்திரங்களுக்கு தேவைப்படும் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் சத்யராஜ்.
சத்யராஜ் - கவுண்டமணி காம்போ காமெடி மற்ற படங்களை போல் வள்ளல் படத்திலும் வயிற்றை புண்ணாக்கும் விதமாகவே அமைந்திருக்கும். சளி பிடித்த சத்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு மீனா யோசனையின்படி நண்டு கரி சாப்பிடுவது, பிளாஷ்பேக்கில் கொதிக்கும் சாம்பாரில் கால்களை விடுவது போல் நடிப்பது என காமெடி கலாட்ட ஒரு புறம் என்றால், மகள் சங்கீதாவை சமதானம் செய்வதற்காக அவரது பின்னால் சென்று மன்றாடுவது, கிளைமாக்ஸில் அக்கா புருஷன் மணிவண்ணன் அடித்தவாறே பேசி திருத்துவது என சீரிஸ் காட்சிகளும் படத்தை மீதான கவனத்தை பெற்றன.
ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகிய வள்ளல் திரைப்படத்தை தயாரிப்பாளர் கடன் பிரச்னை காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
இதுபற்றி எப்படியோ தகவலை அறிந்து கொண்ட சக நடிகரும், அப்போதையை நடிகர் சங்க தலைவருமான விஜயகாந்த் உடனடியாக படத்தின் ரிலீசுக்காக உதவ முன் வந்துள்ளார். இதை கேட்டு சத்யராஜ், படம் ரிலீஸ் பிரச்னையை தானே சரிசெய்துவிடுவதாக கூறி விஜய்காந்தை சமாதானம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை விஜயகாந்தின் 40 ஆண்டு கால சினிமா நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார் சத்யராஜ்.
அந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசும்போது,
"நான் வள்ளல் எனும் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தேன். அந்த படம் முடிந்து ரிலீசுக்கு முன் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட கடன் பிரச்னை காரணமாக படத்தை வெளியிட முடியவில்லை. ஒரு நாள் காலை 6 மணிக்கு எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. விஜயகாந்த் பேசுவதாக சொன்னார்கள். காலை 6 மணிக்கே விஜயகாந்த் ஏன் கூப்பிடுகிறார் என யோசித்தபடியே போனை எடுத்து பேசியபோது, விஜயகாந்த் "வள்ளல் படத்தில் என்ன பிரச்சனை. வாங்க உடனே லேபுக்கு போவோம். நான் கிளம்பி உங்க வீட்டுக்கு வரேன்" என்று சொன்னார். அதை நான் எப்படியோ நான் சமாளித்து விடுவேன் நீங்கள் வரவேண்டாம் எனக்கூறி அவரை தடுத்து நிறுத்துவதற்கே சமாளிப்பதற்கு போராட வேண்டியிருந்தது.
உண்மையில் நான் நடித்த படங்களான வள்ளல், மக்கள் என் பக்கம் டைட்டில் விஜயகாந்துக்குதான் பொருந்தும் என்றார்.
வாலி பாடல் வரிகளில், தேவா இசையமைப்பில் படத்தில் இடம்பிடித்த பாடல்கள் அனைத்தும் வரவேற்பை பெற்றன. கதரு சட்டைய போட்டுக்கிட்டு என்ற பாடல் ப்ளே பலரது லிஸ்டில் இடம்பெறும் பாடலாக உள்ளது.
ஏ, பி, சி என மூன்று செண்டர்களிலும் கணிசமான வசூலை பெற்ற இந்தப் படம், கிராம பகுதியில் சூப்பர் ஹிட்டானது. சத்யராஜின் இந்த ஸ்டைல் கதையம்சத்தை தற்போது விஜய் சேதுபதி, கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்றோர் பின்னபற்றி வருகிறார்கள். கிராமத்து பின்னணியில் வள்ளல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது.
டாபிக்ஸ்