Keeravani:இளையராஜாவை அழிக்க கொண்டுவரப்பட்ட கீரவாணி; ஆஸ்கரை தூக்க வைத்த அவமானம்!
இளையராஜாவை அழிக்க கொண்டு வரப்பட்டவர்தான் கீரவாணியா என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.
இசையமைப்பாளர் கீரவாணி பேச்சுத்தான் இப்போது கோலிவுட்டில் பரபரத்து கிடக்கிறது. காரணம் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அவர் வாங்கிய ஆஸ்கர் விருது. ஒரு திரைக்கலைஞனின் உட்சபட்ச ஆசையான ஆஸ்கரை கையில் ஏந்திய கீரவாணி, தன்னடக்கமாக இதை இந்தியாவிற்கு சமர்பிக்கிறேன் என்றார்.
வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் கீரவாணி தமிழிலும் பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அவர் இசையமைத்த பாடல்களை கேட்கும் பலரும் அது இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்று தவறுதலாக எண்ணிய சம்பவங்களும் உண்டு.
இன்னொரு விஷயமும் கோலிவுட்டில் நெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், இளையராஜாவின் கர்வத்தை அடக்கவே கீரவாணியை பாலச்சந்தர் தமிழுக்கு கொண்டு வந்தார் என்று. இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியவற்றை இங்கு பார்க்கலாம்.
இயக்குநர் பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்திற்கு இயக்குநர் ஒருவர் படம் செய்வதாக இருந்தது. அதற்கு இளையராஜாவை இசையமைப்பாளராக கமிட் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இயக்குநரை, இளையராஜாவை சந்தித்து விட்டு வருமாறு பாலச்சந்தர் அனுப்பி வைக்கிறார்.
அதன்படி அவரும் இளையராஜாவை சந்திக்கச் சென்றார். இளையராஜாவின் ஸ்டுடியோ அப்பொழுது வடபழனி பிரசாத் ஸ்டூடியோவில் இருந்தது. அங்கு சென்ற அந்த இயக்குநர் இளையராஜாவின் ஸ்டியோவிற்குள் சென்றிருக்கிறார். இளையராஜாவிற்கு அந்த ஸ்டூடியோ கோயில் போன்றது என்பதால் உள்ளே வந்த இயக்குநரை கடுமையாக கடிந்து கொண்டதோடு, வெளியே நின்று கொண்டிருக்கும் மரத்தின் கீழே நிற்குமாறும், தான் சொல்லும்போதே வரவேண்டும் என்றும் கட்டளையிட்டு இருக்கிறார்.
அதன்படி அந்த இயக்குநரும் அந்த மரத்தின் கீழே நின்று இருக்கிறார். நேரம் ஆக ஆக இளையராஜாவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை; உடனே அந்த இயக்குநர் பாலச்சந்தருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை சொல்லி இருக்கிறார்.
சம்பவத்தை கேட்ட பாலச்சந்தர் கடுமையாக கோபம் கொண்டு அங்கே வந்து அந்த இயக்குனரை அழைத்துச் சென்றிருக்கிறார். அழைத்துச் செல்லும்போதே இளையராஜாவிற்கு மாற்றாக ஏதாவது நல்ல இசையமைப்பாளரை உருவாக்க வேண்டும் என்பது குறித்தான உரையாடல்கள் நடந்தன.
அப்போது தான் கீரவாணியின் பெயர் அடிபடுகிறது. உடனே அவரை இங்கு வரச் சொல்லி ‘அழகன்’ படத்திற்கு இசையமைக்க செய்ய வைக்கிறார் பாலச்சந்தர். பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் ஹிட் ஆக, பத்திரிகைகளில் எழுதியவர்கள் இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார் என்பது போல எழுதி விட்டார்கள். இசை அந்த அளவுக்கு தரமானதாக இருந்தது.
உடனே ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி கீரவாணியை அறிமுகப்படுத்தி இவர் தான் அந்த படத்தின் இசையமைப்பாளர் என்றும் தமிழில் இவருக்கு மரகதமணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் இவரைப் பற்றி எழுதுங்கள் என்றும் பாலச்சந்தர் பேசினார். ஆனால் காலங்கள் ஓட அவர் இங்கு நாம் எதற்காக கொண்டுவரப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அப்படியே தெலுங்கு பக்கம் நகர்ந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் தான் ஏ ஆர் ரஹ்மான் கொண்டு வரப்படுகிறார். அந்த புயல் முழுவதுமாக வீசி ஆஸ்கர் வரை சென்றது.” என்று பேசினார்.
டாபிக்ஸ்