Kaantha Movie: புதிய படத்தில் கைகோர்க்கும் தெலுங்கு நடிகர் ராணா, மலையாளம் நடிகர் துல்கர் சல்மான் - போஸ்டர் வெளியீடு
தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் காந்தா என்ற புதிய படம் ஒன்றின் மூலம் இணைகின்றனர். இயக்குநர் செல்வமனி செல்வராஜ் இயக்கும் இந்த படத்தை ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் ராணா, மலையாளம் நடிகராக இருந்தாலும் தெலுங்கிலும் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வரும் துல்கர் சல்மான் காந்தா என்ற படத்துக்காக இணைந்துள்ளனர். தென்னிந்திய மொழிகள், இந்தி ஆகியவற்றி உருவாகும் படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா, துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டரை, துல்கர் சல்மானின் பிறந்தநாளை ஒட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் துல்கர் சல்மான்.
இந்த படம் குறித்து ராணா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்தாவது:
"நல்ல சினிமாவை நினைவூட்டும் வகையில், மிகவும் சிறப்பான கதையை கண்டறிவது மிகவும் அரிதான காரியம். காந்தா அதுபோன்றதொரு கதை தான். இதுவே எங்களை இணைய செய்திருக்கிறது.
இந்த பயணத்தை தொடங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். மிகவும் திறமை மிக்க துல்கர் சல்மான் மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் உடன் இணைவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
அவரது பிறந்தநாளை ஒட்டி, என்ன நடக்க போகிறது என்பதற்கான சிறு முன்னோட்டம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் துல்கர் சல்மான், காந்தா உலகுக்கு உங்களை வரவேற்கிறேன்".
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் மகாநடி படம் மூலம் அறிமுகமானார் நடிகர் துல்கர் சல்மான். இந்த படம் அவருக்கு ஹிட்டாக அமைந்தது. இதன் பின்னர் கடந்த ஆண்டில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்தார். இது அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்ததுடன், நல்ல பெயரையும் பெற்று தந்தது.
அடுத்தடுத்து இரண்டு ஹிட்களை தெலுங்கு சினிமாவில் கொடுத்த துல்கர் சல்மான் தற்போது மூன்றாவது படத்தில் நடிக்கவுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்