தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rajinikanth, Sripriya, Thenkai Srinivasan Starrer Billa Released 44 Years Ago On This Day

44 Years Of Billa : கொள்ளைக் கூட்ட தலைவனாக ரஜினி.. ‘மை நேம் இஸ் பில்லா’ , ‘வெத்தலைய போட்டேண்டி' மறக்க முடியுமா?

Divya Sekar HT Tamil
Jan 26, 2024 06:30 AM IST

ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, தேங்காய் சீனிவாசன், பிரவீனா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்த பில்லா திரைப்படம், 44 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் வெளியானது.

பில்லா திரைப்படம், 44 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் வெளியானது.
பில்லா திரைப்படம், 44 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் வெளியானது.

ட்ரெண்டிங் செய்திகள்

கடத்தல் மன்னன் என்கிற கற்பனை கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த திரைப்படமாக அமைந்திருக்கும் இப்படம். ரஜினியில் தொடங்கிய பில்லா, பின்னர் அஜித் நடிப்பில் ரீமேக் ஆகி, பில்லா, பில்லா 2 என்றெல்லாம் வெளியானது. ‘மை நேம் இஸ் பில்லா’ என்று 80களிலும், 2K-லும் பிஜிஎம் வாசிக்காத வாய் இல்லை. ஆனால் பில்லா ஒரு இந்தி படத்தின் ரீமேக். 1978 ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘டான்’ என்கிற படம் தான், பின்னாளில் 1980ல் பில்லா என்கிற பெயரில் தமிழில் ரீமேக் ஆனது. ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, தேங்காய் சீனிவாசன், பிரவீனா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்த பில்லா திரைப்படம், 44 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் வெளியானது.

ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பில்லா, 80களில் சக்கை போடு போட்ட படம். கதை உங்களுக்குத் தெரியும் என்றாலும், சுருக்கமாக நினைவூட்டுகிறோம். பெரிய கொள்ளைக் கூட்ட தலைவன் பில்லாவை பிடிக்க போலீஸ் முயற்சிக்கிறது. அவனையும் அவனது கூட்டாளிகளையும் யாராலும் நெருங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பில்லா இறந்துவிட, பில்லாவின் கூட்டத்தை நெருங்க முடியாமல் போகிறது. பில்லா போன்று தோற்றமுள்ள ராஜப்பாவை வைத்து பில்லா கூட்டத்தை பிடிக்க முயற்சிக்கிறது போலீஸ். அவர்களின் திட்டப்படி பில்லா கூட்டத்திற்குள் நுழையும் ராஜப்பா, போலீசுக்கு உதவி, பில்லா கூட்டத்தை சிக்க வைப்பது தான் கதை.

இண்டர்போல் போலீஸ் ஆபீஸர் கோகுல்நாத்தாக மேஜர் சுந்தர்ராஜன், போலீஸ் அதிகாரிகளாக கே.பாலாஜி, ஏவிஎம்.ராஜன், பில்லாவுடன் பிரவீணா, ஆர்.எஸ்.மனோகர், நடுவே கொஞ்சகாலம் இந்தக் கூட்டத்தில் இருந்துவிட்டு, பிறகு விலகிவந்து திருந்தி வாழ்கிற, அதேசமயம் போலீஸ் அதிகாரியைப் பழிவாங்கத்துடிக்கிற தேங்காய் சீனிவாசன் என எல்லோரும் உணர்ந்து நடித்திருந்தார்கள் இப்படத்தில். ஸ்ரீப்ரியாவின் நடிப்பு, தனித்துவத்துடன் ஜொலித்திருக்கும். அதேபோல், ராஜப்பாவுடன் இருக்கும் மனோரமாவின் நடிப்பு மிகச்சிறப்பானது.

இப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் பாடல்கள் மொத்தமும் அமர்க்களம். ‘நாட்டுக்குள்ளே எனக்கொரு பேருண்டு’,‘இரவும் பகலும் முழுதும்’, ‘நினைத்தாலே இனிக்கும் சுகமே..’ என்கிற எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல், ‘மை நேம் இஸ் பில்லா’ , ‘வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி’ என்று எல்லாப் பாட்டுமே சூப்பர் ஹிட்டடித்தன. ஒருபக்கம் எஸ்.பி.பியும் இன்னொரு பக்கம் மலேசியா வாசுதேவனும் அசத்தி இருப்பார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா பயணத்தில் பில்லா மிக முக்கியமான படம். ரஜினியின் சினிமா வாழ்க்கையிலும் நிஜ வாழ்க்கையிலும் பில்லாவுக்கு தனியிடம் அமைந்தது. இந்தப் படத்தில் நடித்த பிறகு, அதன் மூலம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகே, ஏவிஎம் முதலான நிறுவனங்கள் ரஜினியை வைத்துப் படங்கள் தயாரித்தன. தர்மயுத்தம், முரட்டுக்காளை, தீ என்றெல்லாம் படங்கள் தொடர்ந்து வந்து ஹிட்டடித்தன. ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் தான் அஜித் நடித்தார் என்றாலும், இன்றைய தலைமுறை புரிதலுக்காக கொஞ்சம் ரிவர்ஸில் சொல்ல வேண்டியிருக்கிறது. நயன்தாரா கதாபாத்திரத்தில் ஸ்ரீப்ரியா, பிரபு கதாபாத்திரத்தில் பாலாஜி, ரகுமான் கதாபாத்திரத்தில் மேஜர் சுந்தர்ராஜன், நமிதா கதாபாத்திரத்தில் பிரவீணா என பில்லா முழுக்க நட்சத்திரப் பட்டாளம் தான்.

ஒரு படத்தை குறுகிய காலத்தில் ரீமேக் செய்து, அதுவும் சூப்பர் ஹிட் ஆனது என்றால், எந்த அளவிற்கு பில்லாவின் கதை வலுவானதாக இருந்திருக்கும்? தமிழில் மட்டுமல்ல இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டான் திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்திலும் படம் ஹிட் தான். இப்படம் வெளியாகி இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.