Rajinikanth: ‘மயில்சாமி இறப்பு தற்செயலானது இல்லை’ - ரஜினிகாந்த்!
மறைந்த நடிகர் மயில்சாமியின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் மயில்சாமி தீவிர சிவ பக்தரான என்பதால் சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்று உள்ளார். அதிகாலை 3.30 மணிக்கு மேகநாதேஸ்வரர் கோயிலில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று உள்ளார்.
அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். நடிகர் மயில்சாமியின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. மயில்சாமியின் உடலுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
றைந்த மயில்சாமியின் உடல் இன்று காலை 10 மணிக்கு சென்னை வடபழனி ஏ.வி.எம் சுடுகாட்டில் இறுதிச்சடங்கிற்கு பின்பு தகனம் செய்யப்படுகிறது. இரவு முழுவதும் அவரின் உடலுக்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.
மயில்சாமி தீவிர சிவன் பக்தர் என்பதால் அவருடைய இல்லத்தில் சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “ மயில்சாமி என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவர் 23, 24 வயதிலிருந்து எனக்கு தெரியும். மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக இருந்த போதிலிருந்து தெரியும். அவர் எம்.ஜி.ஆர் ரசிகர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம்.
சினிமா பற்றி பேச மாட்டார். சிவன் பற்றித் தான் பேசுவார். நாங்கள் நண்பர்கள் தான், ஆனால் நிறைய படங்களில் இணைந்து நடிக்கவில்லை. கார்த்திகை தீபம் அப்போது எனக்கு போன் செய்துவிடுவார். கடைசி கார்த்திகை தீபம் அப்போ பேச முடியவில்லை.
நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் மயில்சாமி இறப்பு சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று. மயில்சாமி சிவராத்திரி நாளில் உயிரிழந்தது தற்செயலானது இல்லை. சிவனின் கணக்கு அது. அவரின் தீவிர பக்தரை அவரின் உகந்த நாளில் அழைத்துச் சென்றுவிட்டார். மயில்சாமியின் கடைசி ஆசையை கேள்விப்பட்டேன். அதை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்” என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்