25 Years of Padayappa:"வயசானாலும் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போகல"வெள்ளிவிழா ஆண்டில் ரஜினியின் மாஸ் மசாலா படம் படையப்பா
படையப்பா படத்தின் பஞ்ச் வசனங்கள் ஷுட்டிங்கில் கூட லீக் ஆகி விடக்கூடாது என்பதற்கு ரஜினியும் - இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரும் இணைந்து ட்ரிக் ஒன்றை செய்தனர். அது நன்கு ஒர்க் அவுட்டும் ஆனது. சூப்பர்ஸ்டாரின் ரஜினிகாந்தின் மாஸ் மசாலா படமான படையப்பா வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் மாஸ் மசாலா படமாக வெளியாகி வசூலிலும் பட்டையை கிளப்பிய படம் படையப்பா. கமலுக்கு தேவர்மகன் படம் எப்படியோ அதுபோல் ரஜினிக்கு படையப்பா என்று கூறலாம். காரணம் இந்த இரண்டு படங்களிலும் சிவாஜி கணேசன் முக்கியமான கதாபாத்திரங்களில் தோன்றியிருப்பார். இவரது கதாபாத்திரம் முதல் பாதி வரை தோன்றுவதோடு, இரண்டாம் பாதியில் அவரது நிழல் போன்ற கேரக்டரில் தேவர் மகன் படத்தில் கமல் நடித்திருப்பது போல், படையப்பா படத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.
அதேபோல், படத்தில் பவர்புல்லான வில்லன் இருப்பதும், அவரை வீழ்த்துவதுமாக இருந்த வழக்கமான ரஜினி பட பார்முலாவில் இருந்து மாறுபட்ட படமாக படையப்பா படத்தின் கதை அமைந்திருக்கும். இந்த படத்தில் வில்லன் கிடையாது. ஆனால் ரஜினியை எதிர்க்கும் துணிச்சலுடன் வரும் பெண்ணாக ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வன் கதையில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை மையமாக வைத்து வடிவமைத்ததாக படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
படையப்பா முதல் பாதியில் நண்பர்களுடன் லூட்டி, காதல் என ஜாலியான கதாபாத்திரத்தில் தோன்றும் ரஜினிகாந்த், இரண்டாம் பாதியில் பாட்ஷா பாய் கேரக்டரை நினைவுபடுத்தும் விதமாக தாடி வைத்து லுக்கில் சீரியஸாக தோன்றியிருப்பார்.