Rajinikanth: தூக்கி விட்ட துரியோதனன்.. பார்வை பட்டு பதறிய பாலச்சந்தர்.. - சிம்மாசனத்தில் ரஜினி! - நண்பர் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: தூக்கி விட்ட துரியோதனன்.. பார்வை பட்டு பதறிய பாலச்சந்தர்.. - சிம்மாசனத்தில் ரஜினி! - நண்பர் பேட்டி!

Rajinikanth: தூக்கி விட்ட துரியோதனன்.. பார்வை பட்டு பதறிய பாலச்சந்தர்.. - சிம்மாசனத்தில் ரஜினி! - நண்பர் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 14, 2023 06:30 AM IST

ரஜினியைப் பற்றி அவரது நண்பர் ராஜ் பகதூர் பேசியவை இவை!

ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த்!

1970களில் அவன் கண்டக்டராக வேலைக்குச் சேர்ந்தான் நான் அதே பேருந்தில் டிரைவராக அதே நாளில் வேலைக்கு சேர்ந்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் போதே டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இணைந்து நாடகம் போடுவோம். 

எல்லா நாடகங்களிலும் ரஜினி முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பான். அப்படித்தான் அவன் குருச்சேத்திர என்ற நாடகத்தில் துரியோதனன் கதாபாத்திரத்தை ரஜினி ஏற்று நடித்தான் அப்போது அவனுக்கு 23 வயது இருக்கும். 

அவன் துரியோதனன் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய நடிப்பை பார்த்து நான் அப்படியே உறைந்து போய் விட்டேன். மக்கள் எல்லாம் இவனின் நடிப்பை பார்த்து விசில் அடிப்பார்கள்; கைதட்டுவார்கள். 

அப்படியே பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு சினிமா நடிகனுக்கு என்னென்ன திறமைகள் இருக்க வேண்டுமோ அத்தனையும் ரஜினியிடம் இருப்பதை நான் பார்த்தேன்.  அவனுக்குள் ஒரு நடிகன் இருப்பதை நான் கண்டுபிடித்தேன். உடனே ரஜினியை அழைத்து நீ சினிமா நடிகனாக மாற வேண்டும் என்று  கூறினேன்.

 அதைக் கேட்ட ரஜினி எனக்கு எல்லாம் யார் வாய்ப்பு கொடுப்பார் என்று சலித்துக் கொண்டான். உடனே நான் அப்படியெல்லாம் சொல்லாதே.. உன்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது; உன்னுடைய கண்ணில் ஒரு பவர் இருக்கிறது. அந்தப் பவர் உன்னை எங்கேயோ கொண்டு சென்று விடும் என்று அவனுக்கு ஊக்கம் அளித்தேன்.

மேலும் நீ சென்னைக்குச் சென்று அங்குள்ள சினிமா கல்லூரியில் படி என்றும் படிக்கும் பொழுதே அங்கு வரும் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் பழகு என்றும் அவனுக்கு அட்வைஸ் செய்தேன். 

உடனே அவன் சரிப்பா நீ சொல்வது போலவே நான் இங்கிருந்து சென்னைக்கு கிளம்பி இரண்டு வருடங்கள் அங்கு இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்; நான் சாப்பாடு, பணத்திற்கு என்ன செய்வேன் என்று கேள்வியை  என் பக்கம் திருப்பினான். அப்போது அவன் குடும்பம் ஏழை குடும்பம் தான். நாங்கள் கொஞ்சம் வசதியாக இருந்தோம். உடனே அதனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவனுக்கு பக்கபலமாக நின்று அவனை அனுப்பி வைத்தேன்.

இரண்டு வருடங்கள் அங்கு அந்த கல்லூரியில் சினிமாவை நன்று பயின்று தேர்ந்தான். அங்கும் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இவன் கன்னடத்தில் ஒரு நாடகத்தை நடிக்க, அந்த நாடகத்திற்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலச்சந்தர்  வந்திருந்தார்.

அவர் ரஜினியின் நடிப்பை பார்த்து ரஜினியை அழைத்து நீ தமிழ் கற்றுக் கொள் என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி சென்று விட்டார். இந்த விஷயத்தை ரஜினி என்னிடம் வந்து சொல்ல, நான் அவனிடம் இனி நாம் இருவரும் கன்னடத்தில் பேச வேண்டாம், தமிழிலேயே பேசுவோம் என்று சொன்னேன்; 

நான் தமிழ் தான் என்பதால் அவனுக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தேன்; கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் அவன் தமிழை நன்றாக பேசும் அளவிற்கு வந்துவிட்டான் இந்த நேரத்தில் தான் பாலச்சந்தர் அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை நடிக்க அழைத்து பேச அப்போது உனக்கு தமிழ் தெரியாது என்று பாலச்சந்தர் சொன்னவுடன், ரஜினி நான் தமிழ் நன்றாக பேசுவேன் டப்பிங் எல்லாம் கூட என்னால் பேச முடியும் என்று சொல்ல,பாலச்சந்தர் உறைந்து போய் நின்று விட்டார். அபூர்வ ராகங்கள் வாய்ப்பு கிடைத்தது.

மூன்று முடிச்சு படத்தில் வில்லன் கேரக்டர். கொடுத்த கதாபாத்திரத்தில் ரஜினி அவனுக்கான முழுமையான ஸ்டைல்கள் அனைத்தையும் வெளிப்படுத்தினான். அதன் பின்னர் அவனுக்கு படங்கள் குவிய ஆரம்பித்தன; 24 மணி நேரமும் ஷூட்டிங்கில் தான் இருப்பான்;கிடைத்த நேரத்தில் மட்டும் அவன் தூங்கிக் கொள்வான்;இப்படி உழைத்து உழைத்து இன்று உலகம் போற்றும் சூப்பர் ஸ்டார் ஆக அவன் வளர்ந்து நிற்கிறான்” என்று பேசினார்.

நன்றி: rednool

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.