Velaikaran: சம்பளமே வாங்காமல் ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன்! ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Velaikaran: சம்பளமே வாங்காமல் ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன்! ஏன் தெரியுமா?

Velaikaran: சம்பளமே வாங்காமல் ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன்! ஏன் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 07, 2023 07:21 AM IST

36 Years of Velaikaran: சூப்பர்ஸ்டார் என்ற பெயரை ரஜினிகாந்துக்கு நிலை நிறுத்திய படங்களில் முக்கியமான படமான வேலைக்காரன் படம் அமைந்தது. அதுமட்டுமில்லாமல் தனது 100வது படமான ஸ்ரீராகவேந்திரா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் விதமாக இவர் சம்பளமே வாங்காமல் இந்தப் படத்தில் நடித்தார்.

வேலைக்காரன் படத்தின் ரஜினிகாந்த்
வேலைக்காரன் படத்தின் ரஜினிகாந்த்

ஆக்‌ஷன், காமெடி என ஒரு கமர்ஷியல் பட ஹீரோவாக வலம் வந்த ரஜினிகாந்த், ஆன்மிகவாதியாக தான் விரும்பி நடித்த ஸ்ரீராகவேந்திரா படத்தை அவரது குருவான கே. பாலசந்தர் தயாரித்திருந்தார். ஆனால் ரசிகர்களை இந்தப் படம் கவரவில்லை. இந்த படம் தந்த பிளாப்பால் இயக்குநர் கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்துக்கு ரஜினிகாந்த் மற்றொரு படத்தை நடித்து கொடுக்க விரும்பி எடுத்த படம்தான் வேலைக்காரன்.

இந்த முறை இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த நமக் ஹலால் என்ற படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தார். மீண்டும் எஸ்.பி. முத்துராமன் இயக்கம். தமிழுக்கு ஏற்றவாறு மாறிய இந்தப் படம் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவானது.

விகே ராமசாமி, செந்தில் ஆகியோருடன் ரஜினிகாந்த் படத்தில் அடித்த லூட்டி அப்போது வயிற்றை புண்ணாக்கும் விதமாகவே அமைந்தன. "ஐ எம் சன் ஆப் ரகுபதி, சன் ஆஃப் கஜபதி, சன் ஆஃப் வளையாபதி" என் நாசரிடம் இன்டர்வியூக்கு வரும் ரஜனி பேசும் வசனம், 90களுக்கு மேல் கேபிள் டிவிகள் அறிமுகமான காலகட்டத்தில் அனைத்து டிவி சேனல்களிலும் தவறாக ஒளிபரப்பாகும் காமெடியாகவே வலம் வந்தது.

நாசரிடம், ரஜினிகாந்த் இங்கிலிஷ் பேசும் காட்சி
நாசரிடம், ரஜினிகாந்த் இங்கிலிஷ் பேசும் காட்சி

ரஜினியுடன் இணைந்து முதல் முறையாக அமலா ஜோடி சேர்ந்து இந்தப் படத்தில் நடித்திருந்தார். படத்தில் இவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி, காதல், காமெடி என அனைத்து காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

வேலைக்காரன் படத்தின் ரஜினிகாந்த் - அமலா
வேலைக்காரன் படத்தின் ரஜினிகாந்த் - அமலா

அதேபோல் படத்தில் இளையராஜா இசையில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் ஹிட்டானது. ரஜினிகாந்த் உள்ளிட்ட குழுவினர் நடனமாட தோட்டத்திலே பாத்திகட்டி, அம்மா செண்டிமென்ட் பாடலான பெத்து எடுத்தவதான் போன்ற பாடல்கள் எவர்க்ரீன் பாடலாக இருப்பதுடன் வேலைக்காரன் என்று சொன்னவுடன் நினைவுக்கு வரும் பாடலாகவும் உள்ளது.

இதுதவிர மாமனுக்கு மயிலாப்பூருதான், வேலை இல்லாதவன், வா வா வா கண்ணா வா, எனக்கு தான் உன் உயிரே எனக்குதான் ஆகிய பாடங்களும் சூப்பர் ஹிட் பாடல்களாகவே அமைந்தன.

வேலைக்காரன் படத்தில் ரஜினியின் தாத்தாவாக நடித்த விகே ராமசாமி
வேலைக்காரன் படத்தில் ரஜினியின் தாத்தாவாக நடித்த விகே ராமசாமி

கமிர்ஷியல் படத்துக்கான இலக்கணம் அனைத்தும் இடம்பெற்றிருந்த வேலைக்காரன் சூப்பர் ஹிட்டானதுடன், அந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படமாகவும் அமைந்தது. 1987ஆம் ஆண்டு இதே மார்ச் 7ஆம் தேதிதான் வேலைக்காரன் படம் வெளியானது.

இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அமேசான் ப்ரைம் உள்பட சில ஓடிடி தளங்களில் உள்ள இந்தப் படம் டிவியில் இப்போது ஒளிபரப்பானாலும் கண்டு ரசிப்பதற்கு தனி கூட்டமே உள்ளது.

வேலைக்காரன் வெளியாவதற்கு முன்னதாக ரஜினியின் குரு கே. பாலசந்தர் தயாரித்த ஸ்ரீராகவேந்திரா படம் நஷ்தட்டை ஏற்படுத்தியது. இதை ஈடுசெய்யும் விதாமாக வேலைக்காரன் படத்தில் நடித்த ரஜினிகாந்த், அதற்காக சம்பளமும் வாங்கவில்லை.

இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு இதே ஆண்டில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் மனிதன் என்ற படத்தில் நடித்து மற்றொரு வெற்றியையும் தந்தார். சர்ப்ரைசிங்காக இந்த இரு படங்களின் டைட்டில்களும் தற்போது மீண்டும் பயன்படுத்தப்பட்டு படங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, உதயநிதி நடிப்பில் 2016இல் மனிதன் என்ற திரைப்படமும், 2017இல் ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் என்ற படமும் வெளியாகி இரண்டும் ஹிட்டடித்தன.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.