Piriyadha Varam Vendum: பிரசாந்தும் ஷாலினியும் அசத்திய 'துள்ளலும் காதலும் ததும்பிய பிரியாத வரம் வேண்டும்'!
குழந்தை பருவத்தில் ஆரம்பித்து விருட்சமாக வளர்ந்த நட்பு வட்டத்தில் இருக்கும் இருவரும் காதல் என்று வேறு ஒருவருடன் தனித்தனி பாதையில் செல்ல முற்படும் போது அவர்கள் நட்பில் ஏற்படும் இடைவெளியே இருவருக்குள்ளுமான காதலின் வலிமையை சஞ்சய், நித்தி இருவரும் நமக்குள் உணர்வுபூர்வமாக கடத்தி வெற்றி கண்ட திரைப்படம்
வாய்ப்பு இல்லவே இல்லை என்று தெரிந்தாலும் கூட எந்த உறவுகளையும் பிரிவதற்கு மனமில்லாத ஆசையை தலைப்பாக கொண்டு எடுக்கப்பட்ட படம். மலையாள மொழியில் மிகப்பெரும் வெற்றி பெற்ற படம்தான் "நிறம்". அந்த படத்தை இயக்கிய கமல் தான் இந்த படத்தை தமிழில் இயக்கினார்.
படத்தில் பிரசாந்த் ஹீரோவாக சஞ்சய் என்ற கதாபாத்திரத்திலும், ஹீரோயின் ஷாலினி நித்தி என்ற பெயரிலும் நடித்திருந்தனர். இவர்களுடன் கிருஷ்ணா, ஜோமோல், மணிவண்ணன், அம்பிகா, நிழல்கள் ரவி, மனோரமா, ஜனகராஜ், செந்தில், சார்லி, தாமு என்று பெரிய நடிகர் பட்டாளமே இணைந்து நடித்த படம். நட்பையும், காதலையும் மிகவும் ஆழமாக உணர்வுபூர்வமாக பேசி வெற்றி பெற்ற படம். மலையாள மொழியிலும் ஷாலினி தான் ஹீரோயின். ஷாலினி இந்த படத்தை கடைசியாக முடித்த பிறகு தான் அஜித்தை திருமணம் செய்தார். நிறம் படத்தின் வெற்றி விழா மேடையில் இந்த படத்தின் அறிவிப்பு செய்து விட்டு ஆரம்பித்த படம்.
கதை
ஹீரோ ஹீரோயின் இருவரும் சிறுவயதில் இருந்தே பள்ளியில் ஆரம்பித்து கல்லூரி வரை ஒன்றாக படித்து வரும் உயிருக்கு உயிராக இணைபிரியாத நண்பர்கள். விளையாட்டு முதல் படிப்பது வரை என்று எப்போதும் பிரியாமல் இருப்பதற்கு வசதியாக இருவருடைய வீடுகளும் பக்கம் பக்கமாக அமைந்து விட்டது நட்பை இன்னும் ஆழமாக்குகிறது. கல்லூரியில் படிக்கும் போது ஹீரோ பிரசாந்த் சஞ்சயை இரண்டாவது நாயகி சினேகா என்ற பாத்திரத்தில் நடிக்கும் ஜோமோலும் ஹீரோயின் ஷாலினி நித்தியை இரண்டாவது நாயகன் பிரவீன் என்ற பெயரில் வரும் கிருஷ்ணாவும் விரும்புவதில் இருந்து கதையில் யூ டர்ன் திருப்பம் ஆரம்பித்து விடுகிறது.
இந்த நேரத்தில் கல்லூரியில் இருந்து சுற்றுலாவுக்காக நித்தி ஒரு வாரம் செல்ல நேரிடுகிறது. முதன்முறையாக இந்த பிரிவை தாங்க முடியாமல் சஞ்சய் தவிக்கும் தவிப்பு நட்பையும் தாண்டிய காதலை உணர்ந்த போதிலும் நட்பில் பிளவு ஏற்படும் என்று கருதி நித்தி மேல் உள்ள தனக்கான காதலை மறைத்து விடுகிறான். இந்த சூழலில் கல்லூரியில் படித்து வரும் பிரவீன் நித்தியிடம் காதலை வெளிப்படுத்த நித்தியும் ஏற்றுக்கொள்கிறார்.
இருவரது வீட்டிலும் இதை ஏற்று கொண்டு நித்தி, பிரவீன் திருமண ஏற்பாடுகள் ஆரம்பித்து விடுகிறது. இந்த சூழலில் நித்தி சஞ்சய் மீதான அன்பை உணர ஆரம்பிக்கும் காட்சிகளில் இருந்து சஞ்சையும் மறைத்து வைத்திருக்கும் காதலையும் சோகம் நிறைந்த கவிதைகளாக காட்சிகளை அமைத்திருப்பார் இயக்குநர்.
படத்தின் கடைசி முப்பது நிமிடங்கள். மனதில் காதலை புதைத்து வைத்துக்கொண்டு பிரசாந்த் தவிக்கும் தவிப்பில் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருப்பார். ஷாலினி இன்னும் கொஞ்சம் கூடுதலாக நம்மை கலங்க வைப்பார். ஷாலினி திருமணம் உறுதி செய்யும் சூழலில் இருவருக்குமான உரையாடல் நம்மையும் அறியாமல் கண்களை குளமாக்கி விடும். ஷாலினி பிரசாந்திடம் காதலை வெளிப்படுத்தும் தருணம் உண்மை காதலின் உச்சம். தமிழ் சினிமாவில் உள்ள டெம்ப்ளேட் பாணியில் நண்பர்கள் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொள்ள சுபமாக முடியும். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் பிரமாதப்படுத்தி இருப்பார்.
குழந்தை பருவத்தில் இருந்தே ஆரம்பித்து விருட்சமாக வளர்ந்த நட்பு வட்டத்தில் இருக்கும் இருவரும் காதல் என்று வேறு ஒருவருடன் தனித்தனி பாதையில் செல்ல முற்படும் போது அவர்கள் நட்பில் ஏற்படும் இடைவெளியே இருவருக்குள்ளுமான காதலின் வலிமையை சஞ்சய், நித்தி இருவரும் நமக்குள் உணர்வுபூர்வமாக கடத்தி வெற்றி கண்ட திரைப்படம் இன்று இருபத்தி மூன்று ஆண்டுகள் கடந்து இருக்கிறது. 2001 பிப்ரவரி 16 ல் வெளியாகி 23 ஆண்டுகள் கடந்தும் காதலின் ஈரம் நமது இதயத்தில் காய்ந்து போகாமல் வைத்திருக்கிறது எனலாம்.
டாபிக்ஸ்