HBD Malaysia Vasudevan: தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Malaysia Vasudevan: தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன்!

HBD Malaysia Vasudevan: தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன்!

Karthikeyan S HT Tamil
Jun 15, 2023 07:23 AM IST

Malaysia Vasudevan Birthday: எந்தப் பாடலைப் பாடினாலும் நம்மைச் சொக்கவைக்கும் மலேசியா வாசுதேவனின் பிறந்தநாள் இன்று (ஜூன் 15) கொண்டாடப்படுகிறது.

மலேசியா வாசுதேவன்
மலேசியா வாசுதேவன்

சினிமாவில் ஹீரோ என்ட்ரி முதல், பாசம், காதல், என அனைத்து விதமான கதைக்களத்திலும் கொடி கட்டி பறந்தவர் மலேசியா வாசுதேவன். '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் மலேசியா வாசுதேவன். ‘செவ்வந்தி பூ முடித்த சின்னக்கா’ என்ற பாடலின் மூலம் அறிமுகமான இவரை தமிழ் சினிமா உலகம் அள்ளிக்கொண்டது.

தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில், ‘கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ?’, ‘மலர்களே நாதஸ்வரங்கள்’ என்ற பாட்டும் பட்டிதொட்டியெங்கும் பற்றிக்கொண்டது. ’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் இரண்டே பாடல்கள். ஒன்று கமலுக்கு. இன்னொன்று மலேசியாவுக்கு. ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ‘வான் மேகங்களே’ பாடலும் ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாடலும் மலேசியா வாசுதேவனின் தனித்துவமான குரலை அடையாளப்படுத்தியது. இதில், ஆயிரம் மலர்களே மலருங்கள்.. இன்றும் கேட்போர் மனதைத் துளைத்து விடும்.

அதற்குப் பிறகு அவர் பாடிய அனைத்து பாடல்களையும் இசை பிரியர்களால் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற பாடல் ஒலித்த உடனே திரையரங்குகளில் தீப்பிடித்து எறியும் அளவிற்குக் கரகோஷங்கள் ஒலித்தன. ஆசை நூறு வகை.. என்ற பாடல் இன்று வரை பலரும் தங்களது பிளே லிஸ்டில் வைத்துள்ளனர். அந்தளவுக்கு இந்த பாட்டுக்கு தனித்துவம் உண்டு. ' பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம், ஆகாய கங்கை, ஒரு தங்கரதத்தில், பூவே இளைய பூவே, தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி, இந்த மின்மினிக்கு, ஆசை நூறு வகை' என பல நூறு பாடல்களைப் பாடி ஆறாத ரணங்களை ஆற்றும் அருமருந்தாக மலேசியா வாசுதேவன் என்றும் மக்களிடத்தில் வாழ்ந்து வருகிறார். இவரது பாடல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இன்றும் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. கடல் கடந்து வந்து மக்களை மகிழ்வித்த கலைஞன் நம்மை தாளம்போட வைத்ததோடு மட்டுமல்லாமல் கிட்டதட்ட 85 திரைப்படங்களிலும் தனித்துவமான முத்திரை பதித்துவிட்டார் வாசுதேவன்.

மறக்க முடியாத..மீண்டும் மீண்டும் கேட்க துடிக்கும் இனிமையான பாடல்களை வாரி வாரி வழங்கிய மகரந்தக்குரலோன் மயக்கும் குரலோன் மலேசியா வாசுதேவனை இந்தநாளில் மனதார நினைப்போம். அவர் பாடல்களைக் கேட்டு ரசிப்போம். மலேசிய வாசுதேவன் மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் மக்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் மலேசியா வாசுதேவன்..!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.