தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ripumaramanan: பாடகி உமா ரமணன் காலமானார்.. ‘இத எதிர்பார்க்கவே இல்ல’ - கண் கலங்கிய ஏவி ரமணன்! - வீடியோ!

RIPUmaRamanan: பாடகி உமா ரமணன் காலமானார்.. ‘இத எதிர்பார்க்கவே இல்ல’ - கண் கலங்கிய ஏவி ரமணன்! - வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
May 02, 2024 09:02 AM IST

தனிப்பட்ட சுதந்திரத்தின் காரணமாக, உமா ரமணனின் ஆசை - ஏவி ரமணன் வேண்டுகோள்!

உமா ரமணன் மறைவு!
உமா ரமணன் மறைவு!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், “ வணக்கம் நான் ஏவி ரமணன் பேசுகிறேன். என்னுடைய மனைவியான உமாரமணன் நேற்று மாலை 7.45 மணியளவில், இறைவனடி சென்றார்கள். அவர் இறப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய மகனும் இதை எதிர்பார்க்கவில்லை.

 

இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள் மீடியா நண்பர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட சுதந்திரத்தின் காரணமாக, உமா ரமணனின் ஆசை இது.” என்று பேசி இருக்கிறார்.

முன்னதாக, தமிழ் சினிமாவில் நெஞ்சை உருக வைக்கும் பல்வேறு பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகி உமா ரமணன். இவர் நேற்று மாலை (மே 1 -2024) காலமானார். இதனை பாடகரும், அவரது கணவருமான ஏவி ரமணன் உறுதிபடுத்தி இருக்கிறார். இந்தத் தம்பதிக்கு விக்னேஷ் ரமணன் என்ற மகன் இருக்கிறார். அவரும் பாடகர்தான்.

பழனி விஜய லட்சுமியிடம், கர்நாடக இசை பயிலும் போது ரமணின் அறிமுகம் உமாவுக்கு கிடைத்தது. அந்த சமயத்தில், ரமணன் மேடை கச்சேரிகளில் திறமையான பாடகர்களை பாட வைப்பதற்கான தேடலில் இருந்தார். அந்த தேடலின் வழியாக, உமா, ரமணனுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சூழல் வாய்த்தது. அப்போது அவர்களுக்கிடையே இடையே காதல் மலர, இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

1977ம் ஆண்டு வெளியான ஸ்ரீ கிருஷ்ண லீலா படத்தில் இடம் பெற்ற ‘மோகனன் கண்ணன் முரளி’ பாடலை பாடியதன் பாடகராக அறிமுகம் ஆனார் உமா ரமணன்.

‘நிழல்கள்’ படத்தில் இவர் பாடிய பூங்கதவே பாடல் இவரை பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அதனை தொடர்ந்து இளையராஜா இசையமைத்த 100க்கும் மேற்பட்ட பாடல்களில் இவர் பாடினார்.

குறிப்பாக, ‘தூரல் நின்று போச்சு’ படத்தில் இடம் பெற்ற பூபாலம் இசைக்கும், ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் இடம் பெற்ற ஆனந்த ராகம், ‘ தென்றலே என்னைத் தொடு’ படத்தில் இடம் பெற்ற கண்மணி நீ வர, ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் இடம் பெற்ற பொன் மானே, ‘அரங்கேற்ற வேளை’ படத்தில் இடம் பெற்ற ஆகாய வெண்ணிலாவே, ‘மகாநதி’ படத்தில் இடம் பெற்ற ஸ்ரீரங்க ரங்க நாதனின் உள்ளிட்ட பாடல்கள் இவர்களது காம்போவின் ப்ளாக் பஸ்டர் முத்திரைகள். 

மூன்று தலைமுறைகளாக பாடல்களை பாடி வந்த இவர், எம்.எஸ்.வி, டி ராஜேந்தர், தேவா, எஸ்.ஏ. ராஜ்குமார், மணி ஷர்மா, ஸ்ரீகாந்த் தேவா, வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறார்.

கடைசியாக விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில், மணிஷர்மா இசையில் வெளியான  ‘கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு’ பாடலை பாடினார். இந்தப்பாடலில் அவருடன் ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடினர்.

உமா மற்றும் ஏவி ரமணன் ஆகியோர் இணைந்து ஹிந்தியில் ப்ளே பாய் படத்தில் ஒன்றாக பாடியிருக்கின்றனர். காலம் மறக்க முடியாத பாடகியாக வலம் வந்த இவர் 6,000 த்துக்கும் மேற்பட்ட இசைக்கச்சேரிகளிலும் பாடி இருக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்