Vijay Antony: ‘முகம் முழுக்க ஒரே இரத்தம்; தாடை உடைஞ்சு.. கடலில் மிதந்துட்டேன்’- விபத்து குறித்து மனம் திறந்த விஜய்!
நடிகர் விஜய் ஆண்டனி தனக்கு ஏற்பட்ட கோர விபத்து பற்றி பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு வலம் வருபவர் விஜய் ஆண்டனி. சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிரபலமான விஜய் ஆண்டனி சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இதனையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அந்தப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். மக்களிடம் அந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து, ‘சலீம்’ ‘இந்தியா பாகிஸ்தான்’ ‘ ‘பிச்சைக்காரன்’ ‘சைத்தான்’ ‘அண்ணாதுரை’ ‘காளி’ ‘கொலைகாரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இவர் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இயக்குநர் சசிக்குமார் இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன். அனைத்துதரப்பு மக்களிடமும் விஜய் ஆண்டனியை கொண்டு சேர்த்த இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாவும், அந்தப்படத்தை தானே தயாரிக்க இருப்பதாகவும் அறிவித்தார் விஜய் ஆண்டனி.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட படகு விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் படுகாயம் அடைந்த விஜய் ஆண்டனியை படக்குழு சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத்தொடர்ந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அவர் இங்கு சிகிச்சைப் பெற்று குணமானார். இந்த நிலையில் அவர் தற்போது முதன்முறையாக தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இது குறித்து விஜய் ஆண்டனி பேசும் போது, “ கப்பலில் ஏற்பட்ட விபத்து மிகவும் மோசமானது. நேராக கப்பலில் மோதி, சுயநினைவை இழந்து நான் கடலில் விழுந்து விட்டேன். சுயநினைவை இழந்த காரணத்தால் நான் கை காலை அசைக்கவில்லை. ஆகையால் கடலுக்குள் போன கொஞ்ச நேரத்தில் கடற்பரப்பில் மிதந்து விட்டேன்.
அப்போதுதான் என்னைத்தூக்கி இருக்கிறார்கள். என்னைச் சுற்றி ஒரே இரத்தம். இதனையடுத்து என்னைச் சுற்றி இருந்தவர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். ஐ.சி.யூ வில் இருந்த போது என்னைப் பார்க்க வந்தவர்கள் என்னை பாவமாக பார்த்தார்கள்.
நான்தான் அவர்களுக்கு தம்ஸ் அப் காண்பித்து ஆறுதல் கூறினேன். காரணம் எனக்கு அது அவ்வளவு பெரிய விபத்து என்று தெரியவில்லை. மூன்றாவது நாளிலே லேப்டாப்பில் நான் வேலை செய்ய துவங்கிவிட்டேன். அப்போது இருந்து இப்போது வரை எனக்குள் ஒரு பாசிட்டிவிட்டி இருக்கிறது." என்று பேசினார்.
நன்றி - பிஹைண்ட் வுட்ஸ்!
டாபிக்ஸ்