Pengal Veettin Kangal: 5 பெண்களைப் பெற்ற தம்பதியரின் வாழ்வியல் போராட்டம் தான் படம்!
Pengal Veettin Kangal: பெண்கள் வீட்டின் கண்கள் திரைப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
Pengal Veettin Kangal: பழம்பெரும் நடிகர்களான எஸ்.எஸ். சந்திரன், கே.ஆர்.விஜயா மற்றும் பாண்டியன், சந்திரசேகர், ஆனந்த் பாபு, ஊர்வசி, பல்லவி, வைஷ்ணவி ஆகியோரது நடிப்பில் டி.பி. கஜேந்திரன் எழுதி இயக்கி,1990ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் தான், பெண்கள் வீட்டின் கண்கள். இப்படத்திற்குண்டான இசையை சங்கர் கணேஷ் செய்ய, படத்துக்கான வசனத்தை கவிஞர் வாலி எழுதியிருந்தார். மேலும், படத்தை கே.ஆர்.ஜி. மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக கே. ஆர். கங்காதரன் தயாரித்து இருந்தார்.
பெண்கள் வீட்டின் கண்கள் என்னும் படத்தின் கதை என்ன?: ஒரு கிராமத்தில் கனகலிங்கம் - தனலட்சுமி தம்பதியினருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். தம்பதியரில் தனலட்சுமி அம்மா, தாசில்தாராகப் பணிபுரிகிறார்.
இந்நிலையில் தனது ஐந்து மகள்களை திருமணம் செய்துவைத்து அவர்களது வாழ்க்கையில் முன்னேற்ற தந்தையாகப் படாதபாடு படுகிறார், கனகலிங்கம். அப்போது, அவரது முதல் மகளுக்கு ஒரு வரன் அமைகிறது. மணமகன் வீட்டாரும் தாங்கள் திருமணத்திற்கான செலவுகளை செய்துகொள்வதாகச் சொல்லி சம்பந்தம் பேசி முடிக்கின்றனர். இந்நிலையில் நிச்சயம் முடிந்தபிறகு, மணமகனின் தந்தை அவர் திருமணத்துக்காக செலவழிக்கும் பணத்தைக் கேட்கிறார். இதனால் அதிர்ச்சியடைகிறார்,கனகலிங்கம்.
இறுதியாக ஒரு வழியாகப் பணத்தைத் திரட்டி கொடுக்கின்றனர். முதல் மகளின் திருமணமும் நல்ல முறையில் நடக்கிறது. இதில் அதிருப்தியடைந்த தனலட்சுமி, தனது கணவர் கனகலிங்கத்தின் அப்பாவித்தனத்தைக் கண்டிக்கிறார். உங்களது அப்பாவித்தனத்தால் அடுத்துவரும் பிள்ளைகளுக்கும் இப்படிதான் திருமணத்திற்கு வரதட்சணை கொடுப்பீர்கள் என்று கோபப்படுகிறார். இந்நிலையில் தான் தனது மீதமுள்ள நான்கு மகள்களுக்கு ஒரு பைசா வரதட்சணை தராமல், திருமணத்தை முடித்துக் காட்டுவேன் என்று சபதம் போடுகிறார், கனகலிங்கம்.
இந்நிலையில் மீதமுள்ள நான்கு மகள்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண் மீது காதலில் விழுகின்றனர். இதன்மூலம் காமசோமா என வரதட்சணை தராமல், நான்கு மகள்களுக்கும் திருமணம் நடந்துவிடுகிறது. கனகலிங்கமும் தனது ஐந்து மகள்களுக்குத் திருமணம் முடிந்துவிட்ட திருப்தியில் இருக்கிறார்.
ஆனால், அதில் ஒரு டிவிஸ்டாக, ஒவ்வொரு மகள்களும் மாமியாருடன் ஒவ்வொருவித பிரச்னைகளை செய்துவிட்டு, வீடு திரும்பியிருக்கிறார்கள். இதனால், கனகலிங்கம் சற்று கலங்குகிறார். ஆனால், தனலட்சுமியோ கலங்கவில்லை.
தனலட்சுமி, தனது ஐந்து மகள்களையும் அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்றபடி, பணியில் சேர்த்துவிட முயற்சித்து வெற்றியும் பெறுகின்றார். இறுதியில் அனைத்துப் பெண்களும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைப் பெறுகின்றனர்.
அதேபோல், திருமணாமி வீட்டுக்கு வந்த தங்கள் மகள்களை, அவரது புகுந்த வீட்டுக்குப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு அனுப்புகிறார். இறுதியில் குடும்பம் மகிழ்ச்சியாகிறது. ஐந்து பெண்களைப் பெத்தவன் ஆண்டி இல்லை, பெண்கள் தான் வீட்டின் கண்கள் என்னும் கதைக்கருவோடு படம் முடிகிறது.
இப்படத்தில் கனகலிங்கமாக எஸ்.எஸ்.சந்திரனும், தனலட்சுமியாக கே.ஆர். விஜயாவும் நடித்து இருந்தனர். தவிர, பிரகாஷாக ஆனந்த் பாபு நடித்து இருந்தார். மேலும், பாண்டியன், சந்திரசேகர், திலீப், சார்லி, பீமன் ரகு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். மேலும், ஊர்வசி, பல்லவி, வைஷ்ணவி ஆகியோரும் மகள்களாக நடித்துள்ளனர்.
படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். சங்கர் - கணேஷ் படத்துக்கு ஏற்ற இசையினை செய்துள்ளனர்.
பொதுவாக டி.பி.கஜேந்திரனின் படங்கள், ஜனரஞ்சகமானவை, அனைவருக்கும் பிடிக்கும்வகையிலான காட்சியமைப்பை கொண்டவை. இந்தப் படமும் அதனை ஈடுசெய்கிறது.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளருக்கு லாபகரமாக இருந்ததோடு, அந்த ஆண்டின், தமிழ்நாடு அரசின் குறைந்த பட்ஜெட் படங்களில் வெற்றிபெற்ற படம் என அங்கீகரிக்கப்பட்டு, ரூ.1 லட்சம் பரிசை பெற்றது. படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவுசெய்தாலும் டிவியில் போடும்போது, இப்படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்